Published : 27 Dec 2013 09:50 AM
Last Updated : 27 Dec 2013 09:50 AM
திமுகவைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன், வரும் மக்களவைத் தேர்தலில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளை தீவிரப் படுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சொந்த ஊராகக் கொண்ட செஞ்சி ராமச்சந்திரன் திமுகவின் பழம்பெரும் தலைவர்களில் முக்கியமானவர். வன்னியரான இவர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் தென்னாற்காடு மாவட்டத்தின் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது 1978 முதல் 1993-ம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் திமுக மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். இதன் மூலம் கடலூர், விழுப்புரம் மாவட்ட திமுக.வினரிடையே நன்கு பரிச்சயமானவர்.
வைகோவுடன் 13 ஆண்டுகள்
1993-ம் ஆண்டு வைகோ திமுகவை விட்டு பிரிந்து சென்ற போது, அவருடன் சென்ற 8 திமுக மாவட்டச் செயலாளர்களில் செஞ்சி ராமச்சந்திரனும் ஒருவர். வைகோவுடன் இருந்து மதிமுகவை வழிநடத்தி, வடமாவட்டத்தில் வன்னியர்களின் வாக்கு வங்கியை ஓரளவுக்கு மதிமுகவுக்கு பெற்றுத் தந்தார்.
இவர் திமுக மாவட்டச் செயலாள ராக இருந்த போது,செஞ்சித் தொகுதியில் 1977-80, 1980-84 மற்றும் 1989-91-ம் ஆண்டுகளில் திமுக எம்எல்ஏ-வகாவும், 1993-ல் திமுவை விட்டு விலகி கட்சி மாறிய பின்னர் மதிமுக சார்பில் திண்டிவனம் தொகுதியில், 1998 மற்றும் 1999ல் போட்டியிட்டு எம்பியானார். அப்போது அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் கிடைத்தது.
மீண்டும் தி.மு.க.வில்
அதைத் தொடர்ந்து 2004ல் வந்தவாசி தொகுதியில் போட்டி யிட்டு எம்பி ஆனார். 2006-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது வைகோவுக்கும், செஞ்சியாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதிமுகவை விட்டு வெளியேறி, திமுக.வில் மீண்டும் இணைந்தார்.
2009-ம் ஆண்டு நடந்த நாடாளு மன்றத் தேர்தலில் ஆரணி மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப் பித்தார். இருப்பினும் அவை திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் தொடங்கிவிட்ட நிலை யில், கட்சி மேலிடத்தில் கடலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். திமுகவும், வடமாவட்டத்தின் வன்னியர்களின் வாக்கு வங்கியை மீண்டும் நிலைநிறுத்த செஞ்சியாரின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவே தெரிகிறது. 15 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்த அனுபவம் காரணமாக கட்சியினரை எளிதில் சந்திப்பதோடு, இவரை நிறுத்தினால் கட்சியினர் கோஷ்டி பேதமின்றி தேர்தல் பணியாற்றுவர் என தலைமை எண்ணுகிறது.
கடுமையான போட்டி
இருப்பினும் கடலூர் தொகுதியைப் பெறுவதற்கு கட்சியில் கடுமையான போட்டி நிலவுகிறது. திமுகவின் மாநில மாணவரணி செயலரான கடலூரைச் சேர்ந்த இளம்பரிதி, விருத்தாசலத்தைச் சேர்ந்த குழந்தை தமிழரசன், சபாபதி மோகன் உள்ளிட்டோரும் கடலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
செஞ்சி ராமச்சந்திரனுக்கு கூடுதல் வாய்ப்புள்ள போதிலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதாலும், கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யப்படாததாலும் தொகுதி ஒதுக்கீடுக்குப் பிறகே வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT