Last Updated : 03 Oct, 2013 12:56 PM

 

Published : 03 Oct 2013 12:56 PM
Last Updated : 03 Oct 2013 12:56 PM

விவசாயிகளுக்கு மானிய விலையில் சோலார் பம்ப் செட் கருவிகள்

நீரின்றி பயிர்கள் கருகுவதைத் தடுக்கும் பொருட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் சூரிய ஒளியில் இயங்கக் கூடிய (சோலார்) பம்ப் செட் கருவிகள் வழங்கப்பட உள்ளன. இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 300 பேருக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் 3,422 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில், 1.85 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. இதில் 45 சதவீதத்துக்கும் மேல் தோட்டப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய வட்டங்களில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இவற்றில் குறு, சிறு மற்றும் பெரு விவசாயிகள் கிணற்று நீர் மற்றும் ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைத்து பாசனம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அடிக்கடி ஏற்படும் மின்தடை மற்றும் குறைந்த அழுத்த மி்ன்சாரம் காரணமாக, மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சுவது தடைபடுகிறது. இதனால், பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்காக, விவசாயிகளுக்கு சூரிய ஒளி மூலம் (சோலார்) இயங்கக்கூடிய பம்ப் செட்டுகளை மானிய விலையில் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 300 பேருக்கு இவை வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை பொறியில் செயற்பொறியாளர் ஆதித்தன், 'தி இந்து' நிருபரிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் விவசாயிகளுக்கு மானிய விலையில், சூரிய ஒளியில் இயங்கக்கூடிய பம்ப் செட் கருவிகள் வழங்கப்பட உள்ளன. 1,400 வாட் திறன் கொண்ட இந்தக் கருவியின் விலை ரூ. 5 லட்சம். இதில் நான்கு லட்சம் மானியமாக வழங்கப்படும். ஒரு லட்சம் ரூபாய் மட்டும் விவசாயிகள் செலுத்த வேண்டும்.

இவற்றை பெற விரும்பும் விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலத்தில், 300 அடி ஆழத்துக்கு ஆழ்துளை குழாய் கிணறு அமைத்திருக்க வேண்டும். அத்துடன், 5 குதிரை திறன் கொண்ட மோட்டாரையும் வைத்திருக்க வேண்டும்.

சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் மூலம் விவசாயிகளுக்கு இந்தக் கருவிக்கான முழுத் தொகையும் மானியமாக வழங்கப்படும். இக்கருவி சூரிய ஒளி எந்த திசையில் விழுகிறதோ, அதற்கேற்ப கருவியின் மேல் பாகத்தில் பொருத்தப்பட்டுள்ள பலகைகள் (பேனல்) தானாகவே திரும்பிக் கொள்ளும். அத்துடன், இவை பகல் நேரத்தில் சூரிய ஒளியிலும், இரவு நேரத்தில் மின்சாரத்திலும் இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கருவியை பெற விரும்பும் விவசாயிகள், ரூ. 1 லட்சம் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும். வங்கிக் கடன் வசதியும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.

இக்கருவியை பெற இதுவரை, 130 விவசாயிகள் விண்ணப்பி த்துள்ளனர். மாவட்டத்தில், 300 பேருக்கு அக்டோபர் மாதத்துக்குள் இக்கருவிகள் வழங்கப்படும் என்றார்.

இக்கருவியை பெற விரும்பும் விவசாயிகள், ரூ. 1 லட்சம் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x