Published : 11 Feb 2017 08:02 AM
Last Updated : 11 Feb 2017 08:02 AM
தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடந்த 71,431 சாலை விபத்துகளில் மொத்தம் 17,218 பேர் உயிரிழந்தனர். இது முந்தைய ஆண்டு பலி எண்ணிக்கையைவிட 1,576 அதிகம் என்று அரசு புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2015-ல் நாடு முழுவதும் மொத்தம் 5 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1.46 லட்சம் பேர் உயிரிழந் தனர். இதையடுத்து, சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. அதன் முக்கிய நடவடிக்கையாக, சாலைப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விபத்தில் சிக்குவோரை மீட்பது, சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட வற்றுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.3.8 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடுகிறது.
மற்ற மாநிலங்களைவிட, தமிழ கத்தில் வாகனங்களின் எண் ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம், மேம்பாலங்கள் கட்டுதல், அதிகம் விபத்து நடக்கும் இடங்களைத் தேர்வு செய்து சாலை வடிவமைப்புகளை மாற்றுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. ஆனாலும், தமிழகத்தில் சாலை விபத்துகள் எண்ணிக்கை குறையவில்லை.
ஆண்டுதோறும் ஜனவரி 2-வது வாரத்தில் தொடங்கி 10 நாட்களுக்கு சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் பள்ளி, கல்வி நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பேரணி, கருத்தரங்குகள், விழிப்புணர்வு நாடகங்கள், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும்.
இந்த ஆண்டில் தமிழக அரசியல் அடுத்தடுத்து பரபரப்பு திருப்பங்களை சந்தித்து வருவதால், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அரசுத் துறைகள் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஏற்கெனவே, தமிழகத்தில் விபத்து களும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ள நிலையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு உயர் அதிகாரிகள் முக்கியத்துவம் அளிக்காதது ஆர் வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சாலைப் பாது காப்பில் மட்டுமின்றி, அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் பின்னுக்குச் செல்கிறதா தமிழகம் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடந்த 71,431 சாலை விபத்துகளில் மொத்தம் 17,218 பேர் பரிதாப மாக உயிரிழந்துள்ளனர் என சமீபத்தில் தமிழக அரசு வெளி யிட்ட புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. 2015-ம் ஆண்டு பலி எண்ணிக்கையைவிட இது 1,576 அதிகம். சாலை விபத்துகளில் கடந்த 2011-ல் 15,422 பேர், 2012-ல் 16,175 பேர், 2013-ல் 15,563 பேர், 2014-ல் 15,190 பேர், 2015-ல் 15,642 பேர் உயிரிழந்துள்ளனர்.
விதிமீறல்களே காரணம்
போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருவது ஒருபுறம் இருந்தாலும், சாலை விதிமீறல்கள், கவனக்குறைவாக வாகனங்கள் ஓட்டுவது ஆகியவையே சாலை விபத்துகள், உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணம். ஓட்டுநர்களின் கவனக்குறைவே 80 சதவீத விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சாலைப் பாதுகாப்பு குறித்து இளைஞர்கள், பள்ளி மாணவர்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அடுத்தகட்டமாக சமூக வலைதளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். அதிக அபராதம் வசூல் போன்ற அரசின் கடுமையான தண்டனைகளால் மட்டுமே விபத்துகளைக் குறைக்க முடியாது. சாலைப் பாதுகாப்பு என்பதை ஒவ்வொரு மனிதரும் ஒழுக்கநெறியாகப் பின்பற்றினால் மட்டுமே விபத்துகளும், உயிரிழப்புகளும் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT