Published : 07 Mar 2014 01:08 PM
Last Updated : 07 Mar 2014 01:08 PM

மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலையை 2 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டம்

சென்னை உயர் நீதிமன்றம் தடையை நீக்கியுள்ள நிலையில், சென்னை துறைமுகம் மதுர வாயல் பறக்கும் சாலை அடுத்த 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை துறைமுகத்தில் தினமும் 3 ஆயிரம் கன்டெய்னர்கள் கையாளப்பட்டு வருகின்றன. வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கன்டெய்னர்களை ஏற்றிவரும் லாரிகள், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றன.

பகலில் சென்னை மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவு நேரங்களில்தான் லாரிகள் துறைமுகத்துக்கு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன.

இந்த பிரச்சினையை சமாளிக்க மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகம் வரை பறக்கும் சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சியில் திட்டமிட்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து 19 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,815 கோடியில் பறக்கும் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

கூவம் ஆற்றங்கரையோரம் பெரிய தூண்களை அமைத்து உயர்மட்ட சாலையாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் ஓராண்டு காலம் பணிகள் நடந்தன.

இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் 2012-ம் ஆண்டில் இந்த திட்டப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன. கூவம் நதியில் தூண்கள் அமைக்கப்படுவதால், தண்ணீர் செல்வது பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது.

இந்நிலையில், தமிழக அரசு விதித்த தடையை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. பணிகளை தொடரவும், தமிழக அரசு ஒத்துழைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாநில அரசு மேல்முறையீடு செய்தால் எங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நெடுஞ் சாலைத் துறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘நீதிமன்றம் அரசின் தடையை நீக்கியுள்ள நிலையில், மதுர வாயலில் இருந்து சென்னை துறைமுகம் வரை பறக்கும் சாலை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இதற்கான கருவிகளும் வாங்கப்பட்டுள்ளன.

தேவைப்பட்டால் கூடுதல் கருவிகளையும், பொருட்களையும் வாங்க திட்டமிட்டுள்ளோம். இந்த பணிகள் அடுத்த 2 வருடங் களில் முடிவடையும் என எதிர்பார்க் கிறோம்’’ என்றார்.

நீதிமன்றம் அரசின் தடையை நீக்கியுள்ள நிலையில், மதுர வாயலில் இருந்து சென்னை துறைமுகம் வரை பறக்கும் சாலை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இதற்கான கருவிகளும் வாங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x