Published : 21 May 2016 11:10 AM
Last Updated : 21 May 2016 11:10 AM

வாக்கு சதவீதம் 2.4-ஆக குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: ஆழ்ந்த சோகத்தில் மூழ்கிய தேமுதிக தொண்டர்கள்

விஜயகாந்த் டெபாசிட் இழந்து 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்



தமிழகத்தில் சமீபத்தில் நடந்த 2 தேர்தல் களிலும் படுதோல்வியை தழுவியுள்ள நிலையில், தேமுதிகவின் வாக்குகள் 10 சதவீதத்தில் இருந்து 2.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கிடையே, தேமுதிக வின் அங்கீகாரம் ரத்தாகும் என்பதால் அக்கட்சியின் நிர்வாகிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

2006-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி யிட்டது. இதில் விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டும் சுமார் 17 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2009 மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் வாக்குகள் சதவீதம் 10.1-ஆக உயர்ந்தது.

இதற்கிடையே, 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. இத்தேர்தலில் மொத்தம், 29 தொகுதிகளில் வெற்றி பெற்று தேமுதிக எதிர்கட்சி அந்தஸ்து பெற்றது. விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு 30 ஆயிரத்து 375 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவு டன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. ஆனால், இந்த தேர்தலில் ஒரு தொகுதிகூட அந்தக் கட்சிக்கு கிடைக்கவில்லை. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் சோர்வை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக மொத்தம் 104 இடங்களில் போட்டியிட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், தேமுதிக படுதோல்வியை சந்தித்துள்ளது.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2,26,120. இதில் அதிமுக வேட்பாளர் குமரகுரு 81,973 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-ம் இடம் பிடித்த திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேல் 77,809 வாக்குகள் பெற்றார். இவரை தொடர்ந்து விஜயகாந்த் 34,447 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளார். பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால்தான் டெபாசிட் தொகையை பெறமுடியும். அந்த வகையில் விஜயகாந்த் 34,447 வாக்குகள் மட்டுமே பெற்றதால் தனது டெபாசிட் தொகையை இழந்துவிட்டார்.

தேமுதிக போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் 3 மற்றும் 4-வது இடத்துக்கும், சில இடங்களில் 5-வது இடத்துக்கும் தள்ளப்பட்டது. குறிப்பாக, ஜோலார்பேட்டை, குன்னூர், ஆத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் தலா 4 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றனர். சில தொகுதிகளில் தேமுதிகவை பின்னுக்கு தள்ளிவிட்டு, பாமக மற்றும் பாஜக வேட்பாளர்கள் 3-ம் இடம் பிடித்தனர்.

இந்த தேர்லில் ஒட்டுமொத்தமாக தேமுதிக 10,34,384 வாக்குகளை பெற்றுள்ளது. 2009-ல் 10.1 சதவீதமாக இருந்த ஒட்டு சதவீதம் தற்போது 2.4 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 2011-ல் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 29 தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாதது அக்கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.



இந்த தேர்தலில் தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் தலைமை அலுவலகம் கடந்த 2 நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது. விஜயகாந்த் தற்போது சென்னையில் இருக்கிறார். அடுத்த ஒரிரு நாட்களில் மூத்த நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட செயற்குழு உறுப்பினர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தவுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகி கள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்றாக திமுகவைத்தான் மக்கள் பார்க்கிறார்கள். 3வது அணிக்கு தமிழகத்தில் சரியான அடித்தளம் அமையவில்லை. தேர்தல் தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே கூட்டணி அமைத்திருந்தால், மக்கள் எங்கள் கூட்டணியை ஏற்றுக் கொண் டிருப்பார்கள் என நம்புகிறோம்.” என்றனர்.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிப்படி மொத்த தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கு ஒரு எம்எல்ஏ இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் குறைந்தபட்சமாக 8 எம்எல்ஏக்களாவது இருக்க வேண்டும். அல்லது போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற ஓட்டுகள் மாநில முழுவதும் பதிவான ஓட்டுகளில் 6 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்தாகிவிடும்’’ என்றார். எனவே, தேமுதிகவின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன் தேமுதிகவில் இருந்து விலகி மக்கள் தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய சந்திரகுமார் இதுபற்றி கூறும் போது, “அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்றியுள்ளார். இதனால் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பலிகடா ஆகிவிட்டன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x