Published : 05 Jul 2016 12:10 PM
Last Updated : 05 Jul 2016 12:10 PM

கணினி கல்வியில் கேரளா முதலிடம்: தமிழகம் பின்தங்கியதால் 39,000 கணினி பட்டதாரிகள் தவிப்பு

கணினி கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் நாட்டில் கேரளா முதல் இடத்தில் உள்ளதாகவும், தமிழக அரசு பள்ளிகளில் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தரப்படாததால், 39 ஆயிரம் பிஎட் கணினி பட்டதாரிகள் வேலையில்லாமல் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசின் கல்வித்திட்டம் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், 2011-ம் ஆண்டில் 6,7,8,9,10-ம் வகுப்புகளில் கணினி அறிவியல் பாடம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கான பாடப் புத்தகங்கள், கணினி மற்றும் அவை சார்ந்த உபகரணங்களும் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. மாணவர், பெற்றோர், ஆசிரியர்களிடம் கணினி கல்வித் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், திடீரென கணினி புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. சில மாதங்களில் கணினி அறிவியல் பாடம் காரணமின்றி கைவிடப்பட்டது.

தற்போது தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மட்டும் கணினி அறிவியல் பாடத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டு செயல்படுத்தி வருகின்றனர். அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர் களுக்கு கணினிக் கல்வி எட்டாக்கனியாக உள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் கணினிக் கல்வி வழங்கப்படுகிறது.

இதனால், அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் பி.எட். கணினி அறிவியல் பட்டதாரிகள் 39,019 பேர் வேலையில்லாமல் தவிக் கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வெ. குமரேசன் கூறியதாவது:

2016-ம் ஆண்டுக்கான கல்வி அறிக்கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் கணினிக் கல்வி பயின்றவராக உள்ளனர்.

கேரளாவில் 49 சதவீதத்தினர் அதாவது 39.17 லட்சம் குடும்பங்களில், தலா ஒருவர் கணினி அறிவு பெற்றிருப்பதால் அம்மாநிலம் கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலமாக உள்ளது. பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள் 47% மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.

கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற மற்ற பாடங்களைப் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், அம்மாநிலத்துக்கு முன்னோடியாக 2011-ம் ஆண்டே அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை தமிழக அரசு தொடங்கியது. ஆனால், தற்போது தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் கட்டாயப் பாடமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தை பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் இன்று பல புரட்சிகளை செய்தாலும், கணினி கல்விக்கு முக்கியத்துவம் தராதது வேதனைக்குரியது. மத்திய அரசின் மூலம் கிடைக்கப் பெறும் நிதியை முறையாக செயல்படுத்தி அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை முறையாக மாணவர்களுக்கு கற்பிக்க மாநில அரசும், பள்ளி கல்வித்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x