Last Updated : 29 Mar, 2014 12:00 AM

 

Published : 29 Mar 2014 12:00 AM
Last Updated : 29 Mar 2014 12:00 AM

மதுரை: அழகிரியை விமர்சிக்காத முதல்வர் ஜெயலலிதா

முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை பேசிய அதே ரிங்ரோடு மைதானத்தில் தான், கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி தி.மு.க. அரசை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

அப்போது பேசிய அவர், ஆன்மிக நகரான மதுரை, குற்றங்களின் தலைநகராகிவிட்டது. தான் மதுரைக்கு வரக்கூடாது என்பதற்காக மிரட்டல் கடிதம் போட்ட அழகிரி இப்போது ஓடி ஒளிந்து கொண்டார் என்றும் கடுமையாக சாடினார்.

அதேபோன்று தா.கிருட்டிணன் கொலை வழக்கில் தொடர்புடைய அழகிரி உள்ளிட்ட 13 பேருக்கும் தி.மு.க. கொடுத்துள்ள பதவி குறித்தும் பட்டியலிட்டார்.

பின்னர் 3.4.2011 அன்று சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக வந்த ஜெயலலிதா, காளவாசலில் வேனில் இருந்தபடியே பேசினார். அப்போதும் அழகிரி மீது பாய்ந்தார் ஜெயலலிதா.

“தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் பாதுகாப்பு கேட்டுள்ளார் மு.க.அழகிரி. உண்மையில் அவரால் தான் மதுரை மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. தேர்தல் அதிகாரிகளை மிரட்டி வரும் அவருக்கு எதற்கு போலீஸ் பாதுகாப்பு?” என்று கேட்டார்.

அதுமட்டுமின்றி “அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், தினகரன் எரிப்பு வழக்கு, தா.கிருட்டிணன் கொலை வழக்கு போன்றவை திரும்ப விசாரணைக்கு எடுக்கப்பட்டு குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.

ரௌடிகளின் பிடியில் இருந்து மதுரையை மீட்டு, மீண்டும் ஆன்மிக, சுற்றுலா தலமாக மாற்றுவேன்”என்றார்.

பின்னர் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்காக வந்தபோது, கோ.புதூர் பஸ் நிலையத்தில் வேனில் நின்றபடி பேசியபோதும் மு.க.அழகிரியை ஒருபிடி பிடித்தார்.

காரைக்குடியில் அந்த தொகுதியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஒருபிடி பிடித்ததுபோல் மதுரையில் மு.க.அழகிரியை கடுமையாக சாடுவார் என்று அதிமுகவினர் எதிர்பார்த்தனர்.

ஆனால், வெள்ளிக்கிழமை மதுரையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.அழகிரியைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவர் விமர்சிக்கவில்லை. அந்தப் பேச்சையே எடுக்கவில்லை.

இது குறித்து அ.தி.மு.க.வினரிடம் கேட்டபோது, “தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது, மு.க.அழகிரி ஆட்டம் போட்டார். அ.தி.மு.க.வினரை மிரட்டினார்.

அதனால், அப்போது அவரை அம்மா விமர்சித்தார். ஆனால், ஆட்சி போன பிறகு தான் அழகிரி பொட்டிப் பாம்பாக அடங்கிவிட்டாரே? அவரை தி.மு.க.வே ஒரு பொருட்டாக கருதாத போது, நாம் ஏன் வீணாகப் பேசி அவரைப் பெரிய ஆள் ஆக்க வேண்டும் என்று தான் ஜெயலலிதா அதுபற்றி பேசவில்லை”என்றனர்.

தி.மு.க.வினரோ, “அழகிரி சொந்தக் கட்சிக்குக் குடைச்சல் கொடுத்து வருவது, அ.தி.மு.க.வுக்கு சாதகமான விஷயம் என்பதால், அழகிரியை விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு மனது வரவில்லை போலும்.

நல்ல வேளை அழகிரியைப் பாராட்டிப் பேசாமல் போனாரே? அந்த வகையில் எங்களுக்குச் சந்தோஷம் தான்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x