Last Updated : 30 Jan, 2015 12:36 PM

 

Published : 30 Jan 2015 12:36 PM
Last Updated : 30 Jan 2015 12:36 PM

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகல்

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெயந்தி நடராஜன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

முன்னதாக, ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியானது.

அதில், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட தனக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நெருக்கடி கொடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். அமைச்சர் பதவியை தான் ராஜினாமா செய்த பிறகு கட்சியில் தான் புறக்கணிக்கப்படும் விதம், அதனால் தான் அடைந்துள்ள மன உளைச்சல், தான் குற்றமற்றவர் என்பவர் நிரூபிக்க முடியாமல் அடைந்துள்ள தவிப்பு ஆகியனவற்றை பதிவு செய்யும் வகையில் சோனியா காந்திக்கு ஜெயந்தி நடராஜன் மிகவும் காட்டமாக ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதம் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. அதன் விவரம்: >ராகுல், சோனியாவை 'அம்பலப்படுத்திய' ஜெயந்தி நடராஜனின் கடிதம்

இந்நிலையில், ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவது ஏன்?

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கினார்.

அவர் கூறும்போது, "நான் பத்திரிகையாளர்களை சந்திக்க திட்டமிடவில்லை. ஆனால், இன்று 'தி இந்து' பத்திரிகையில் எனது கடிதம் வெளியானதால் அது குறித்து விளக்கமளிக்க விரும்புகிறேன். மிகவும் உணர்வுபூர்வமான சூழலில் நான் இன்று உங்களை சந்திக்கிறேன்.

நான்கு தலைமுறைகளாக எனது குடும்பம் காங்கிரஸ் கட்சியில் உள்ளது. என் நாடி, நரம்புகளில் காங்கிரஸ் கட்சியின் தாக்கம் இருக்கிறது. எந்தக் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு முன்னர் நான் இணைந்தேனோ, அந்த கொள்கைகள் காங்கிரஸ் கட்சியில் இப்போது இல்லை.

ராகுல் காந்தி நெருக்கடி

இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கொண்டிருந்த கொள்கைகள் பேணப்பட வேண்டும். அதைத்தான் நான் செய்தேன்.

சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது எனக்கு வந்த சில நெருக்கடிகளுக்கு நான் அடிபணியவில்லை. பெரும் முதலீட்டில் கொண்டுவரப்படும் திட்டம் என சொல்லப்பட்டாலும், தனியார் நிறுவனங்களுக்கு நான் துணை போகவில்லை. இதற்காக சொந்த கட்சியிலேயே என் சகாக்களின் கடும் விமர்சனத்துக்குள்ளானேன்.

ராகுல் காந்தியே நேரடியாக நெருக்குதல் கொடுத்ததால்தான் வேதாந்தா, நிர்மா போன்ற நிறுவனங்களின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டேன்.

மோடியை விமர்சிக்க உத்தரவு

கட்சியின் கொள்கைகளுக்கு உட்பட்டு நான் ஒரு சிறந்த அமைச்சராகவே இருந்திருக்கிறேன். மற்றொரு பிரச்சினை என்னவென்றால், கடந்த ஆண்டு 2013 நவம்பர் 17-ம் தேதி வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எனக்கு மூத்த தலைவர் அஜய் மாக்கனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

அவர், உடனடியாக இந்தியா திரும்புமாறு அவர் கூறினார். ஏன் என்று கேட்டேன், இளம் பெண் வேவு பார்க்கப்பட்டது தொடர்பாக நான் மோடியை விமர்சிக்குமாறு கட்சி மேலிடம் பணித்துள்ளதாக கூறினார். அதனை ஏற்று நானும் நாடு திரும்பினேன். மோடியை சரமாரியாக விமர்சித்தேன்.

அமைச்சர் பதவி ராஜினாமாவும் மன்மோகன் வருத்தமும்!

கடந்த 2013 டிசம்பர் 20-ம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நானும் சென்றேன். பிரதமர் மன்மோகன் சிங் மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டார். அவரை அதற்கு முன்னர் நான் அப்படி பார்த்ததில்லை.

என்னிடம் பேசிய அவர், கட்சித் தலைவர் சோனியா காந்தி, நான் பதவி விலக வேண்டும் என விரும்புவதாக கூறினார். நான் ஏதும் மறுத்துப் பேசாமல் பதவி விலகினேன். மறுநாளே ராஜினாமா கடிதம் கொடுத்தேன். ஆனால், நான் ஏன் ராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைமையால் அறிவுறுத்தப்பட்டேன் என்பது எனக்கு இன்றளவும் தெரியாது.

வேதனை அளித்த ராகுலின் செய்கை

நான் பதவி விலகியே மறுநாளே, அதாவது டிசம்பர் 21, 2013-ல் ஃபிக்கி மாநாட்டில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசிய விதம் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. இதுவரை சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இருந்த சில கெடுபிடிகளால் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. இனி தடை இருக்காது. பொருளாதார வளர்ச்சி சுமுகமாக இருக்கும் என ராகுல் பேசியிருந்தார்.

தனியார் நிறுவனங்களின் அத்துமீறல்களுக்கு துணை போகாததில் எனது தவறு என்ன இருந்தது. நான் கட்சிக்கும், கட்சியின் கொள்கைகளுக்கு உண்மையாக நடந்து கொண்டது தவறா?

அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகுகிறேன். எனது விலகல் குறித்து கடிதத்தை இன்னும் மேலிடத்துக்கு அனுப்பவில்லை. முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கட்சியில் இருந்து விலகியது குறித்த கடிதத்தை அனுப்புவேன். பின்னர் தமிழக காங்கிரஸ் தலைமைக்கும் விலகல் கடிதம் அனுப்புவேன்" என்றார் ஜெயந்தி நடராஜன்.

பாஜகவில் இணைய வாய்ப்பே இல்லை

இப்போதைக்கு நான் எந்தக் கட்சியிலும் இணைவதாக இல்லை. பாஜகவில் இணைய வாய்ப்பே இல்லை. நான் ஒரு கசப்பான சூழலில் இருக்கிறேன். ஒரு காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த என்னை, கட்சிக்காக உழைத்த என்னை கடந்த 2013 டிசம்பரில் இருந்து ஓராண்டுக்கு மேலாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதித்து, புறக்கணித்துள்ளது.

அந்தக் கசப்புணர்வில் இருந்து நான் விடுபட சற்று கால அவகாசம் வேண்டும். அதன் பிறகு, நாட்டு மக்களுக்காக தனிப்பட்ட முறையில் எந்த வகையில் சேவை செய்ய முடியும் என்பதை யோசித்து முடிவெடுத்து அதன்படி செயல்படுவேன்.

தமாகாவில் சேரப்போவதில்லை

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை எனது சகோதரராகவே பாவிக்கிறேன். அவர் புதிய கட்சிக்கு எனது வாழ்த்துகள். ஆனால், நான் நிச்சயமாக ஜி.கே.வாசனின் கட்சியில் சேர மாட்டேன்.

மறுபரிசீலனை இல்லை:

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள நிலையில், மறுபடியும் எனக்கு கட்சி மேலிடத்திலிருந்து அழைப்பு வரும் என நினைக்கவில்லை. அப்படியே அழைத்தாலும் அது குறித்து மறு பரிசீலனை செய்ய விரும்பவில்லை.

இப்போதைக்கு நான் இந்த கட்சியிலும் இணையவில்லை. அது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து இந்தப் பத்திரிகை சந்திப்பின் நோக்கத்தை திசை திருப்ப விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் கொஞ்ச காலம் கடந்த பிறகே யோசிக்க வேண்டும். அதே வேளையில், நான் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது எடுத்த முடிவுகளை மோடி அரசு விரும்பினால் மறு ஆய்வு செய்யலாம்" என்றார் ஜெயந்தி நடராஜன்.

காங்கிரஸ் மறுப்பு:

தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட தனக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நெருக்கடி கொடுத்ததாக ஜெயந்தி நடராஜன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஜெயந்தி நடராஜன் கடிதத்தில், ராகுல் காந்தி தவறு இழைத்ததாக குற்றம் சாட்டும் வகையில் ஏதும் குறிப்படப்படவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x