Published : 18 Mar 2014 12:00 AM
Last Updated : 18 Mar 2014 12:00 AM
சென்னை குடிநீர் தேவைக்காக வரும் 25-ம் தேதி முதல் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறந்துவிடப்படுகிறது.சென்னையில் கோடை காலம் தொடங்கிவிட்டது. இதனால் தண்ணீர் தேவையும் அதிகரித்துள்ளது. போதுமான அளவு தண்ணீர் சப்ளை செய்யப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். பல பகுதிகளில் 2 நாட்கள், அல்லது வாரத்துக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருவதாகவும் புகார் கூறப்படுகிறது. ஏரிகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், நகரில் ஒருநாள்விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் சில மணி நேரங்களுக்கு மட்டும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கனஅடி. தற்போதைய நீர் இருப்பு 3,440 மில்லியன் கனஅடிதான். கடந்த ஆண்டு இதேநாளில் 4,379 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,456 மில்லியன் கனஅடி. தற்போது அங்கு 882 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது.
சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நீரையே, சென்னை குடிநீர் வாரியம் பெரிதும் நம்பியிருக்கிறது. இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அறவே இல்லை. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதையடுத்து “சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க உடனடியாக கிருஷ்ணா நீரைத் திறந்துவிட வேண்டும்” என்று தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆந்திர மாநில அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர். அதற்கு “கிருஷ்ணா நீரை நிறுத்தாமல் நாங்கள் தொடர்ந்து திறந்துவிட்டிருந்தால் ஆந்திர மாநிலத்தில் இரண்டாம் போகம் சாகுபடிக்கு தண்ணீர் எடுத்திருப்பார்கள். அதனால்தான் தற்காலிகமாக கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டுள்ளது. வரும் 25-ம்தேதி முதல் கிருஷ்ணா நீர் சென்னைக்கு மீண்டும் திறந்துவிடப்படும்” என்று ஆந்திர மாநில அதிகாரிகள் தெரிவித்ததாக தமிழக பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “நடப்பு ஆண்டில் பூண்டி ஏரிக்கு 3.7 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வந்துள்ளது. இப்போது நிறுத்தப்பட்டுள்ள கிருஷ்ணா நீர் 25-ம்
தேதி மீண்டும் திறந்துவிடப்பட்டு, வரும் நவம்பர் மாதம் வரை (மழைக்காலம் வரை) தொடர்ந்து கிடைக்கும். படிப்படியாக விநாடிக்கு ஆயிரம் கனஅடி வரை நீர் திறந்துவிடப்படும். அதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை” என்றார்.
கண்டலேறு அணையில் 8 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருப்பு இருந்தால், சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறந்துவிடப்படும். தற்போது கண்டலேறு அணையில் 23 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த பல ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த அணையில் இந்த அளவுக்கு நீர் இருப்பு இருந்ததில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் ஆந்திராவில் பலத்த மழை பெய்து துங்கபத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, வெள்ளநீர் சைலம் அணை, சோமசீலா அணை வழியாக கண்டலேறு அணைக்கு திருப்பிவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT