Published : 19 Jun 2016 10:34 AM
Last Updated : 19 Jun 2016 10:34 AM

குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றால் சேதம்: பல்லாயிரக்கணக்கான வாழை, ரப்பர் மரங்கள் முறிந்தன - உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் மாலை வீசிய சூறைக்காற்றில் பல்லாயிரக் கணக்கான வாழை, ரப்பர் மரங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் வீசிய சூறைக் காற்றினால் திற்பரப்பு பேரூராட்சிப் பகுதியில் பிணந்தோடு, சேக்கல், உண்ணியூர்கோணம், தும்பகோடு, வியாலி, மூலைப்பாகம், தேரி விளை, சூரியகோடு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் மீது ரப்பர் உள்ளிட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன.

மூலைப் பாகம், தேரிவிளை உள்ளிட்ட இடங்களில் பல வீடுகளின் ஆஸ்பெஸ்டாஸ் மேற் கூரைகள் காற்றில் பறந்தன. இப்பகுதியில் ஏராளமான வாழை, ரப்பர் மரங்கள் முறிந்து விழுந்தன. உண்ணியூர்கோணம் பகுதியில் சாலையின் குறுக்காக தேக்கு, பலா மரங்கள் முறிந்து விழுந்தன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலும் மின் கம்பங்கள் சேதமடைந் தன. கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக 60 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன.

பல லட்சம் சேதம்

சூறைக்காற்றினால் ஆயிரக் கணக்கான வாழைகள் சரிந்து விழுந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விவசாய விளை பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. அதேபோன்று ரப்பர் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்க ளுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆய்வு வேண்டும்

பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜ் கூறும்போது, “சூறைக் காற்று காரணமாக பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட திருவட்டாறு, குலசேகரம், திருவரம்பு, திற்பரப்பு, திருநந்திக்கரை, சூரியகோடு மற்றும் மலையோரப் பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேல் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. சராசரியாக வாழை ஒன்றுக்கு ரூ. 200 வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே வேளாண் இடுபொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள், தற்போது சூறைக் காற்றால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

உடனடியாக வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை அதிகாரிகள் குழுவை அமைத்து பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த வீடுகளுக்கும் இழப் பீடு வழங்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் வேளாண் காப்பீடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x