Published : 11 Dec 2013 10:20 AM
Last Updated : 11 Dec 2013 10:20 AM
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 3000 சதுர அடி பரப்பளவில் 2 தளங்களுடன் கட்டப்பட்ட வன்னியர் சங்கக் கட்டிடத்திற்கு பாகமவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் உரிமை கோரும் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்நிலையில் அந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி, அந்தக் கட்டிடத்தை, நகராட்சி சுகாதார அலுவலகமாக செயல்படுத்திட திட்டம் மேற்கொண்டுவருவதாக கடலூர் நகராட்சித் தலைவர் சி.கே.சுப்ரமணியன் தெரிவித்தார்.
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை 1989-ம் ஆண்டு ஆக்கிரமிப்பு செய்த வன்னியர் சங்கத்தினர், நகராட்சியின் திட்ட ஒப்புதல் இல்லாமல் முறைகேடாக அந்த இடத்தில் கட்டிடம் கட்டி, அதை பா.ம.க. அலுவலகமாகவும் பயன்படுத்தினர்.
இந்நிலையில் பா.ம.க.விலிருந்து 30-10-2011-ல் பண்ருட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தி.வேல்முருகன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, அந்த இடம் தொடர்பாக, பா.ம.க.வுக்கும் வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சிக்கும் உரிமைப் பிரச்சினை எழுந்தது. இந்நிலையில் கோட்டாட்சியர் தலையிட்டு, கட்டிடத்திற்கு 12-11-11-ல் சீல் வைத்து, கட்டிடத்தை கடலூர் புதுநகர் காவல்துறை வசம் ஒப்படைத்தார்.இதைத் தொடர்ந்து இருதரப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, “இந்த நிலம், கட்டிடம் ஆகியவை யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து கடலூர் மாவட்ட சிவில் கோர்ட்டில் மனுதாரர்கள் சார்பில் வழக்கு தொடரலாம். இந்த வழக்கை கடலூர் நீதிமன்றம் 6 மாதத்துக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும். அதுவரை தற்போது கட்டிடம் யார் பொறுப்பில் உள்ளதோ அவர் பொறுப்பில் தொடர்ந்து இருக்கலாம்” என உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பாமக மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கட்டிடத்தை எங்களிடம்தான் ஒப்படைக்கவேண்டும் என கடலூர் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக கோட்டாட்சியர் டாக்டர் ஷர்மிளா கூறியதாவது:
“அந்தக் கட்டிடம் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோத மாக கட்டப்பட்டுள்ளது. காவல்துறை பொறுப்பிலேயே கட்டிடத்தை விட்டுள்ளோம். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம்தான் இறுதித் தீர்வு காணமுடியும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT