Last Updated : 20 Aug, 2016 01:46 PM

 

Published : 20 Aug 2016 01:46 PM
Last Updated : 20 Aug 2016 01:46 PM

நாடு முழுவதும் சிறையில் வாடும் கைதிகளை சொந்த மாநிலங்களுக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் வாடும் கைதிகளை, அவரவர் சொந்த மாநில சிறைகளுக்கு மாற்றுவதற்காக, பிற மாநிலக் கைதிகளின் விவரங்களை தாக்கல் செய்ய அனைத்து மாநில சிறைத்துறை தலைவர்களுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா மாநிலம், கேந்திரபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் டி. சுசாந்த் பிரதான்(37). இவரை ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் நடந்த கொலை வழக்கில் போலீஸார் கைது செய்தனர். அவர், மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னை ஒடிசா மாநிலச் சிறைக்கு மாற்ற, சுசாந்த் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். தனது மனுவில், மதுரை சிறையில் இருப்பதால் 6 ஆண்டுகளாக உறவினர்களை சந்திக்க முடியவில்லை. இங்குள்ள உணவுமுறை மாறுபட்டதாக உள்ளது. என்னை ஒடிசா மாநிலத்தில் உள்ள மொகரபோதா மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ். விமலா பிறப்பித்த உத்தரவு:

சிறைவாசிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல், கண்ணியமாக வாழ வழிவகுக்க வேண்டும். சிறைவாசிகள் சட்டப்படியாக பறிக்கப்பட்ட சலுகைகளைத் தவிர்த்து, பிற அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெறத் தகுதியானவர்கள். சிறைவாசம் மறுவாழ்வு அளிப்பதாக இருக்க வேண்டும். சிறைவாசிகளுக்கு கல்வி, பயிற்சி, ஆலோசனைகள் வழங்குவதன்மூலம் சீர்படுத்த வேண்டும். இவைகள் நடைபெற சிறையில் உள்ள விரும்பத்தகாத சூழல்கள் அகற்றப்பட வேண்டும். சிறைவாசிகள் சக கைதிகளுடன் பேசுவது, குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதன் மூலம் மகிழ்ச்சி அடைவர். இந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் எதிர்விளைவுகள் ஏற்படும்.

தாய் மொழியையும், வாழ்வையும் பிரிக்க முடியாது. உறவினர்கள் வெகு தொலைவில் இருந்தால் சிறைவாசிகள் மனரீதியாக பாதிக்கப்படுவர். அந்த வகையில் ஒடிசா மொழி மட்டுமே தெரிந்த ஒருவரை, தமிழக சிறையில் அடைத்து வைத்திருப்பது நியாயமற்றது. இதனால் அவரை ஒடிசா மாநிலச் சிறைக்கு மாற்ற வேண்டும். மேலும் மனுதாரர்போல, மற்ற மாநிலங்களில் உள்ள சிறை களிலும் பிற மொழி கைதிகள் உள்ளனர். அவர்களின் சொந்த மாநில சிறைகளுக்கு மாற்ற வேண்டியது அவசியம். இதனால் இந்த வழக்கில் அனைத்து மாநில சிறைத்துறை தலைவர்களும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப் படுகின்றனர். அவர்கள் தங்கள் மாநிலச் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள பிற மாநில கைதிகளின் விவரங்களை ஆக. 26-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x