Published : 06 Feb 2017 02:20 PM
Last Updated : 06 Feb 2017 02:20 PM
உடுமலை அருகே மாதத்தில் 2 நாள் மட்டுமே திறக்கப்படும் பகுதி நேர நியாயவிலைக் கடையால் கிராமமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது.
உடுமலை, சின்னவீரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக 3 கி.மீ., தொலைவில் உள்ள சின்னவிரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று தான் அத்தியாவசிய பொருட்களை பெற்று வந்தனர்.
தங்கள் கிராமத்து நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கைக்கு பின்பு இந்திரா நகரில் வாடகைக் கட்டிடத் தில் பகுதி நேர நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது.
வாரத்தின் ஒரு நாள் மட்டும் இக்கடை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு திறக்கப்படுவதில்லை என்றும், மாதத்தில் 2 நாள் மட்டுமே திறக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: பகுதி நேர கடைக்கு சொந்தக் கட்டிடம் இல்லை. வாட கைக் கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. மாதத்தின் முதல் மற்றும் கடைசி வார வேலை நாட்களில் கடை திறக்கப்படுவதில்லை. நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கான அதிகாரிகள் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களுக்குச் செல்வதால் திறக்கப்படுவதில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் மாதத்தில் 2 நாள் மட்டுமே திறக்கப்படுவதால் தேவையான அத்தியாவசிய பொருட்கள் எதுவும் முழுமையாகப் பெற முடிவதில்லை. மேலும் முன்பைவிட தற்போது குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதனால், பொருட்கள் வாங்க பல மணி நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. வயதானவர்கள், பெண்கள் இதனால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் 15-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உருவாகி மக்கள் தொகையும் 2000-க்கும் மேல் அதிகமாகியுள்ளது. இருந்தபோதும் முழு நேர கடையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குடிமைப்பொருள் அதிகாரிகள் கூறும்போது, ‘இது குறித்து ஆட்சியரின் நடவடிக்கைக்காக பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. முழு நேர கடையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT