Published : 17 Dec 2013 08:10 PM
Last Updated : 17 Dec 2013 08:10 PM
மக்களவைத் தேர்தலில் மதுரைத் தொகுதியில் போட்டியிட அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு முடிவாகும் முன்பே வேட்பாளராகப் போட்டியிட கட்சிப் பிரமுகர்களிடம் கடும் போட்டி நிலவி வருகிறது.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலம் 2014 மே 31-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து மக்களவை பொதுத்தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. கடந்த 2 தேர்தல்களில் வென்ற காங்கிரஸ் கட்சி, இந்தத் தேர்தலிலும் வென்று மத்தியில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதேபோல் இழந்த ஆட்சியை மீட்க மோடி என்ற அஸ்திரத்தை வைத்து பாஜக நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த இரு கட்சிகளையும் சாராத கட்சிகள் 3-வது அணி அமைத்து தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகின்றன. இதற்காக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தேசிய, மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, கட்சிகள் சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பை பெறுவதற்காக அரசியல்வாதிகள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். இதற்கான சிபாரிசு உள்ளிட்ட அடிப்படைப் பணிகளில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஈடுபடத் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் அரசியல் நிலவரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் நட்சத்திர அந்தஸ்துடைய மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடப்போகும் கட்சிகள் எவை, வேட்பாளர்கள் யார் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தை சூடேற்றியுள்ளது.
மு.க.அழகிரி மீண்டும் போட்டியா?
மதுரை தொகுதியின் தற்போதைய எம்.பி.யும், திமுக தென்மண்டல அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி மத்திய ரசாயனத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். அண்மைக்காலமாக கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வருகிறார். மேலும், டெல்லி அரசியலில் ஆர்வமில்லை என்பதால் அவர் இந்த முறை எம்.பி. தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனவும், தலைமை வலியுறுத்தினால் அதுபற்றி கடைசி நேரத்தில் யோசித்து முடிவெடுக்கலாம் எனவும் மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதனால் திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, முன்னாள் மேயர் செ.ராமச்சந்திரன், தீர்மானக் குழுத் தலைவர் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோரில் ஒருவர் மதுரை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர்.
களமிறங்கியது அதிமுக
‘40 தொகுதிகளும் நமதே’ என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ள அதிமுகவினர், மதுரையில் களப்பணியைத் தொடங்கிவிட்டனர். இதன்படி வார்டுதோறும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், அரசின் சாதனைகளை வீடுதோறும் கொண்டு செல்வதற்கான திட்டங்கள் குறித்தும் கடந்த சனிக்கிழமை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இக்கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் டேவிட் அண்ணாத்துரை, மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் எம்.எஸ்.பாண்டியன், மேயர் வி.வி.ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் பகீரத முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுப்பிரமணியசுவாமியா? எச்.ராஜாவா?
பாஜக யாருடன் கூட்டணி என்பது இதுவரை முடிவாகவில்லை. எனினும் இக்கட்சியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். காரணம் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட சௌராஷ்டிரா மொழி பேசும் மக்கள் இந்த தொகுதியில் கணிசமாக வசிக்கின்றனர். இவர்களின் வாக்குகளும் மோடி ஆதரவு வாக்குகளும் விழுந்தாலே வெற்றி பெற முடியும் என்பதால் பாஜகவின் முக்கிய தலைவர்களில் சிலரும் இந்தத் தொகுதியை குறிவைத்துள்ளனர். அவர்களில் சுப்பிரமணியசுவாமியும், எச்.ராஜாவும் குறிப்பிடத்தக்கவர்கள்.
கம்யூனிஸ்ட் கட்சிகளும் குறி
மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு குறிப்பிட்ட அளவு செல்வாக்கு உண்டு. இக்கட்சியைச் சேர்ந்த பொ.மோகன் மதுரை தொகுதியில் தொடர்ந்து 2 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். இரா.அண்ணாத்துரை தெற்குத் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த கூட்டணியில் இடம்பெற்றாலும், அதில் இவற்றைச் சுட்டிக்காட்டி மதுரைத் தொகுதியை மீண்டும் தங்களுக்கே வழங்க வேண்டும் எனக் கேட்டுப்பெற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் மாவட்டச் செயலாளர் விக்ரமன் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுக கூட்டணி சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாகவும், மாநிலச் செயலர் தா.பாண்டியனே களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர் அக்கட்சியினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு உள்பட பலர் ஆர்வமாக இருந்தனர். அவர்களில் சிலர் தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணி குழப்பங்களால் தங்களது முடிவிலிருந்து பின்வாங்கி வருகின்றனர். மதிமுக உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் இங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லாததால் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.
தேமுதிகவின் நிலைப்பாடு
அதேபோல் தேமுதிகவின் நிலைப்பாடு தெரியாததால் அக்கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் இதில் ஆர்வமின்றி காணப்படுகின்றனர். தேமுதிக போட்டியிடும்பட்சத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இங்கு போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தேமுதிகவினர் தெரிவித்தனர்.
கூட்டணி, சீட் ஒதுக்கீடே முடிவு பெறாத நிலையில் அதிமுக, திமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சியினர் இப்போதே மதுரை தொகுதியில் தேர்தல் பணியைத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT