Last Updated : 17 Jan, 2017 02:16 PM

 

Published : 17 Jan 2017 02:16 PM
Last Updated : 17 Jan 2017 02:16 PM

குடிநீர் பஞ்சத்துக்கு முதல் பலி தூத்துக்குடி: நகரெங்கும் மறியல் போராட்டம்: காலிக்குடங்களுடன் இரவு, பகலாக காத்துக்கிடக்கும் மக்கள்

தூத்துக்குடியில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வேலைக்கு செல்லாமல், அன்றாடப் பணிகளை செய்ய முடியாமல் காலிக்குடங்களுடன் மாநகராட்சி குடிநீர் தொட்டிகளுக்கு முன் இரவு, பகலாக காத்துக் கிடக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொழில்நகரம், துறைமுக நகரம் என்றழைக்கப்படும் முத்துநகரம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தூத்துக்குடி மாநகராட்சியின் குடிநீர் ஆதாரம் தாமிரபரணி. வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் 12 உறைகிணறுகள் அமைக்கப்பட்டு 3 குடிநீர் திட்டங்கள் மூலம் தூத்துக்குடிக்கு குடிநீர் பெறப்படுகிறது.

நீர் மேலாண்மை

தூத்துக்குடியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று நாட்களுக்கு ஒரு நாள் என்ற முறையில் தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதுவே, மக்களுக்கு போதுமானதாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகத்தின் நிர்வாக சீர்கேடு, முறையற்ற நீர்மேலாண்மை போன்றவற்றால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

வறண்டது தாமிரபரணி

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் கடந்த மூன்று மாதங்களாக நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. வற்றாத ஜீவநதி என்றழைக்கப்படும் தாமிரபரணி ஆறு வறண்டதால் தூத்துக்குடி மாநகருக்கு வரும் குடிநீர் வெகுவாக பாதிக்கப்பட்டது.

ஒரு மாதமாக வரவில்லை

இதனால், குடிநீர் விநியோகம் 15 நாட்களுக்கு ஒரு முறை, 20 நாட்களுக்கு ஒருமுறை என பிரச்சினை மேலும் தீவிரமடைந்தது. தற்போது ஒரு மாதத்துக்கு ஒரு முறை கூட குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தூத்துக்குடி பகுதியில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் அறவே தண்ணீர் இல்லாததால் ஒரு சொட்டு கூட தண்ணீர் பம்பிங் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

லாரி மூலம் விநியோகம்

இதனால், மாநகராட்சி சார்பில் தனியார் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை வாங்கி மாநகர மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள 8 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு அருகே டேங்கர் லாரிகளை நிறுத்தி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

காத்துக் கிடக்கும் பரிதாபம்

தண்ணீர் பிடிக்க 8 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் பொதுமக்கள் இரவு பகலாக காலிக்குடங்களுடன் காத்துக் கிடக்கின்றனர். 6 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தால் மட்டுமே ஒரு குடம் தண்ணீர் கிடைக்கிறது. இதனால், ஆண்கள், பெண்கள் வேலைக்குப் போகாமலும், அன்றாட பணிகளைக் கூட செய்ய முடியாமலும் சிறுவர் முதல் பெரியவர் வரை குடும்பத்தோடு தண்ணீர் தொட்டிகளுக்கு முன்பாக காத்துக் கிடக்கின்றனர்.

தூத்துக்குடி நகரில் எந்த பக்கம் பார்த்தாலும் நடந்து செல்வோர், சைக்கிள் முதல் காரில் செல்வோர் வரை அனைவரும் காலிக்குடங்களுடன் தண்ணீர் தேடி அலையும் நிலையை காண முடிகிறது.

தொடர் மறியல்

பல மணி நேரம் காத்துக் கிடந்தும் தண்ணீர் கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது. இதனால் அதிருப்தியடையும் மக்கள் சாலை மறியல் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் கோரி நடைபெறும் சாலை மறியல் போராட்டங்கள் அதிகரித்துள்ளன.

நேற்றும் 2 இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த பெண்கள் 25 நாட்களாக குடிநீர் வராததால் வி.இ. சாலையில் அந்தோணியார் கோயில் அருகே நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 45 நிமிடங்கள் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் வந்து சமானம் செய்த பின்னரே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தூத்துக்குடி ராஜாஜி பூங்கா நீர்தேக்கத் தொட்டி முன்பு ஏராளமான மக்கள் காலிக்குடங்களுடன் அதிகாலை 3 மணி முதலே காத்துக் கிடந்தனர். அந்த மக்களுக்கு ஒரு டேங்கர் லாரி மூலம் காலையில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், ஏராளமான மக்கள் காத்திருந்ததால் ஒரு டேங்கர் லாரி தண்ணீர் போதுமானதாக இல்லை.

இதையடுத்து தண்ணீர் கிடைக்காத மக்கள் தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி பொறியாளர் லெட்சுமணன் தலைமையில் அதிகாரிகள் போலீஸார் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்த பின்பே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து 2 சிறிய சின்டெக்ஸ் தொட்டிகள் அங்கு வைக்கப்பட்டு, அவைகள் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

8 மேல்நிலை நீர்த்தேக் தொட்டிகளிலும் நூற்றுக்கணக்கான மக்கள் காத்துக் கிடக்கின்றனர். தண்ணீர் லாரி வந்ததும் அனைவரும் முட்டி மோதுகின்றனர். இதனால், தகராறு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்புடன் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

தூத்துக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தனியார் மூலம் விலைக்கு வாங்கப்படும் தண்ணீர். (அடுத்தபடம்) மில்லர்புரத்தில் குவிந்திருக்கும் குடங்களுக்கு மத்தியில் கவலையுடன் காத்திருக்கும் பெண்கள். (கடைசி படம்) மாநகரில் பல்வேறு இடங்களிலும் நேற்று மறியல் நடைபெற்றது. மீனவர் காலனியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் குழந்தைகளும் பங்கேற்றனர்.

இதுவரை இல்லாத பஞ்சம்

தூத்துக்குடியில் இதுபோன்ற கடுமையான தண்ணீர் பஞ்சத்தை இதுவரை பார்த்ததில்லை என முதியவர்கள் கூறுகின்றனர். தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் அதிகாலை 4 மணி முதல் குடிநீருக்காக காத்திருந்த கே.ஏ.சாமி என்பவர் கூறும்போது, ``எனக்கு 70 வயதாகிறது.

தூத்துக்குடியில் இதுபோன்ற கடுமையான குடிநீர் பஞ்சத்தை பார்த்ததில்லை. தூத்துக்குடியில் தண்ணீர் தட்டுப்பாடு அடிக்கடி வரும் 10 நாட்கள் 15 நாட்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் வந்துவிடும். ஆனால், இப்போது ஒரு மாதமாகியும் குடிநீர் வரவில்லை. ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களும் தண்ணீர் தொட்டிகளுக்கு முன்பு காத்திருக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது’’ என்றார் அவர்.

கேன் குடிநீர் ரூ. 60

குடிநீர் பஞ்சத்தை தொடர்ந்து கேன்களில் அடைத்து விற்கப்படும் குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ. 30க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கேன் குடிநீர் தூத்துக்குடி நகரின் சில பகுதிகளில் நேற்று ரூ. 60 வரை விற்பனையானது. அதுவும் வழக்கமாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கொடுக் கிறார்கள். ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை டேங்கர் லாரிகளில் பிடித்து வந்து விற்போரும் விலையை கடுமையாக உயர்த்திவிட்டனர். 14 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட சிறிய டேங்கர் லாரி தண்ணீர் ரூ. 2,500 முதல் ரூ. 3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. 5,500 லிட்டர் கொள்ளவு கொண்ட டிராக்டர் தண்ணீர் ரூ. 1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சிலர், டிராக்டரில் தண்ணீர் பிடித்து வந்து குடம் ரூ. 10 என விற்பனை செய்து வருகின்றனர். மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றனர்.

நிலத்தடி நீரும் இல்லை

குடிநீர் டேங்கர் லாரி டிரைவரான சிலுவைப்பட்டியை சேர்ந்த சேவியர் கூறும்போது, ‘‘கீழ வல்லநாடு, வாகைகுளம், அல்லிகுளம், சேர்வைக்காரன்மடம் போன்ற பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீரை பிடித்து வந்து விற்பனை செய்கிறோம்.

முன்பெல்லாம் 14 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் 20 நிமிடத்தில் நிறைந்துவிடும். தற்போது 1 மணி நேரத்துக்கும் அதிகமாகிறது. ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் குறைந்துவிட்டது. முன்பெல்லாம் தினமும் 8 முறை தண்ணீர் கொண்டு வந்து விநியோகம் செய்வேன். தற்போது 4 அல்லது 5 முறை தான் கொண்டு வரமுடிகிறது’’ என்றார் அவர்.

ஏடிஎம், குடிநீர் தொட்டி

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணம் எடுப்பதற்காக வங்கிகள் முன்பும், ஏடிஎம் மையங்கள் முன்பும் காத்துக் கிடந்தோம். இன்று ஒரு குடம் தண்ணீருக்காக மாநகராட்சி குடிநீர் தொட்டிகளுக்கு முன்பாக குடும்பத்தோடு காத்துக் கிடக்கிறோம். காத்துக்கிடக்கும் எங்களது நிலை என்று மாறுமோ என, தண்ணீர் பிடிக்க காத்திருந்தவர்கள் புலம்பியதை கேட்க முடிந்தது.

வரமறுக்கும் தண்ணீர்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் 104 கன அடியில் இருந்து 200 கன அடியாக உயர்த்தப்பட்டது. மேலும், நேற்று முன்தினம் முதல் 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தண்ணீர் திறந்துவிட்ட போதிலும் சீவலப்பேரி தடுப்பணையைத் தாண்டி தண்ணீர் வரமுடியவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் பாதை உருவாக்கி தண்ணீரை, தூத்துக்குடி மாநகராட்சிக்கான உறைகிணறுகள் பகுதி வரை கொண்டு வரும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். இதன் மூலம் வரும் நாட்களில் ஓரளவு தண்ணீரை தூத்துக்குடிக்கு பம்பிங் செய்ய முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

வேலை செய்ய முடியவில்லை

தூத்துக்குடி வி.இ.சாலை பகுதியைச் சேர்ந்த பார்வதி (61) என்ற பெண் கூறும்போது, ``அதிகாலை 4 மணி முதல் இங்கே காத்திருந்தேன். 11 மணியளவில் தான் தண்ணீர் கிடைத்தது. 7 மணி நேரம் காத்திருந்து 2 குடம் தண்ணீர் பிடித்துள்ளேன். கடந்த ஒரு வாரமாக இதே நிலைதான். வீட்டில் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அத்தனை வேலைகளும் முடங்கியுள்ளன. தண்ணீர் பிரச்சினையால் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுவிட்டது” என்றார் அவர்.

திண்டாடும் அதிகாரிகள்

தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள கடுமையான குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர். மாநகராட்சி ஆணையர் கு. ராஜாமணி, பொறியாளர் லெட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள் பொங்கல் விடுமுறையை கூட குடும்பத்தோடு கொண்டாட முடியாமல் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ``டேங்கர் லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்து ராஜாஜி பூங்கா தெப்பத்தில் நிறைத்து, 8 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கும் பம்பிங் செய்து, மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள கூடுதல் தண்ணீர் வல்லநாடு உறைகிணறு பகுதிக்கு வரும்போது, கூடுதல் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது” என்றனர் அவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x