Published : 17 Mar 2017 10:19 AM
Last Updated : 17 Mar 2017 10:19 AM
தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழில் நகரமாகத் திகழ்கிறது கோவை. பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் தொழில் துறையினர், தமிழக அரசின் பட்ஜெட்டில் பல சலுகைகள், திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்த்திருந்தனர். இந்த பட்ஜெட்டில் தொழில் துறையின் மேம்பாட்டுக்கு பல திட்டங்கள் இருந்தபோதிலும், எதிர்பார்த்த பல திட்டங்கள் குறித்த அறிவிப்பு இல்லை என்று அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை கிளைத் தலைவர் வனிதா மோகன்:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.1,200 கோடி, ஊரக வளர்ச்சிக்கு ரூ.563 கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.10,150 கோடி, சாலை கட்டமைப்புக்கு ரூ.3,100 கோடி, நீர் நிலைகள் மேம்பாட்டுக்குக்கு ரூ.3,042 கோடி ஒதுக்கீடு ஆகியவை வரவேற்கத்தக்க அம்சங்கள்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் தலைவர் வி.சுந்தரம்:
சிறு, குறுந் தொழில்கள் மேம்பாட்டுக்கு ரூ.532 கோடி ஒதுக்கீடு, தனியார் தொழிற்பேட்டை அமைப்பு, முதலீட்டு மானியத்துக்காக ரூ.160 கோடி ஒதுக்கீடு, சர்வதேச அளவிலான தொழில் கருத்தரங்குகள் நடத்துதல், சிட்கோ தொழிற்பேட்டைகளில் புதிய ஆய்வகங்கள், வணிக உதவி மையங்கள் அமைப்பு, புதிதாக தொழில் தொடங்க அனுமதி பெறுவதில் ஒற்றைச் சாளர முறை, ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது.
புதிய தொழிற்பேட்டை அமைக்க ஒற்றைச் சாளர முறையில் அனுமதி கொடுக்கவும், தொழிற்பேட்டை கட்டுமானங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கவும், சர்வதேச அளவிலான கருத்தரங்குகள் மற்றும் தொழில் கண்காட்சி நடத்தும் வகையில் கோவையில் சிறு, குறுந் தொழில், வணிக மையம் அமைக்கவும், சூரிய ஒளி மின்சாரப் பயன்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை கிளைத் தலைவர் எஸ்.நாராயணன்:
தொழில் வளர்ச்சிக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், ஸ்மார்ட் சிட்டி உருவாக்குதல், தொழில் தொடங்க ஒற்றைச் சாளர முறையில் அனுமதி, மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை வரவேற்கிறோம்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கே.மணிராஜ்:
குடிநீர் மற்றும் விவசாயத் துறைக்கு பெரிதும் உதவும் மோட்டார் பம்ப்செட் உற்பத்தித் துறையின் மேம்பாட்டுக்கு திட்டங்களோ, சலுகைகளோ அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கீடு போதுமானதல்ல. தொழில் துறைக்கு மின் கட்டணத்தைக் குறைக்காதது, உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவையான பொருட்களை சிறு, குறுந் தொழில் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ய உத்தரவிடாதது உள்ளிட்டவை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் தலைவர் கே.செல்வராஜ்:
வாட் வரி குறைப்பு, சந்தை விற்பனை வரி குறைப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. பருத்தி, கழிவுப் பஞ்சுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு சதவீத வரியையாவது ரத்து செய்திருக்கலாம்.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத் தலைவர் எஸ்.ரவிக்குமார்:
பிற மாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு வாடகை குடியிருப்புகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்தக் குடியிருப்புகளை கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு முன்னுரிமை தந்து அமைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை நீக்க வேண்டும், குறுந்தொழில்களுக்கு தனி தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத் தலைவர் ஜே.ஜேம்ஸ்:
கோவையில் குறுந்தொழில்பேட்டை அமைக்க நிதி ஒதுக்காதது, மின் கட்டணத்தை குறைக்காதது, கோவை விமானநிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலத்தை ஒதுக்காதது, கோவையில் புதிய மேம்பாலம் மற்றும் வட்டச் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு இல்லாதது ஆகியவை ஏமாற்றம் அளிக்கின்றன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிசாமி:
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு ரூ.250 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் உரிய நிதி ஒதுக்கி, திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT