Published : 18 Nov 2014 11:09 AM
Last Updated : 18 Nov 2014 11:09 AM

டீசல் விலை குறைப்பால் போக்குவரத்து துறையின் செலவு குறைந்தது: இழப்பில் இருந்து மீண்டும் புத்துயிர் பெறுமா?

டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் தமிழக அரசு போக்கு வரத்து துறையின் எரிபொருள் செலவில் மாதந்தோறும் ரூ.32.40 கோடி குறைந்துள்ளது.

தமிழகத்தில் அரசு போக்கு வரத்து துறையின் கீழ் 20,654 பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்கு வரத்துக் கழகங்களுக்கு தினமும் சுமார் ரூ.20 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. ஆனால், டீசல் விலை உயர்வு, ஊழியர்கள் சம்பளம், பஸ்களின் பராமரிப்பு ஆகியவற்றால் தினமும் சுமார் ரூ.30 லட்சம் கூடுதலாக செலவாகிறது. இதன்படி ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.4.50 வருவாய் வந்தால் ரூ.5 வரை செலவாகிறது.

மொத்த செலவினத்தில் 44 சதவீதம் ஊதியம் வழங்கவும், 36 சதவீதம் எரிபொருள் வாங்கவும் செலவாகிறது.

18 லட்சம் லிட்டர்

தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் 18 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. லிட்டர் ஒன்று ரூ.62 என டீசல் வாங்கப்பட்டது. இது தற்போது ரூ.55.56 ஆக குறைந் துள்ளது. இதனால் தினமும் ரூ.1.8 கோடிக்கு எரிபொருள் செலவு குறைந்துள்ளது.

ஒரு மாதத்துக்கு ரூ.32.40 கோடியாக இந்த செலவு குறைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தால் போக்குவரத்துதுறையின் இழப்பை குறைத்து அரசுக்கு வருவாய் தரும் துறையாக மாற்ற லாம் என போக்குவரத்துதுறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: போக்குவரத்து துறையில் தற்போது 1.43 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இதில், ஓட்டுநர், நடத்துநர்கள், தொழில் நுட்ப பிரிவினர்கள் அதிகமாக இருக் கின்றனர். ஆனால், இவர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் இல்லை. ஆனால், மொத்தம் 15 நிர்வாக இயக்குநர்கள் (சுமார் ரூ.75 ஆயிரம் வரை சம்பளம்), 80 பொது மேலாளர்கள் (சுமார் ரூ.65,000 வரை சம்பளம்) 120 துணை மேலா ளர்கள் (சுமார் ரூ.55,000 வரை சம்பளம்) இருக்கின்றனர். இதனால், சம்பளத்துக்கான செலவு அதிகரித் துக் கொண்டே செல்கிறது. 15 நிர்வாக இயக்குநர்கள், 80 பொது மேலாளர்கள் அவசியம்தானா? என்பதை அரசு யோசிக்க வேண்டும்.

மொத்தமுள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சென்னை, விழுப் புரம், கும்பகோணம் ஆகிய போக்குவரத்து கழகங்கள் நஷ்டம் இல்லாமல் இயங்குகின்றன. ஆனால் மற்ற போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் ரூ.250 கோடி கூடுதல் செலவு ஆகிறது. இதனால், போக்குவரத்து கழகங்கள் நிதி கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x