Published : 05 Mar 2014 12:00 AM
Last Updated : 05 Mar 2014 12:00 AM
சொத்துக்கள் தொடர்பான வில்லங் கம், பதிவுகள் பற்றிய விவரங்களை விரைவிலேயே இணையதளத்தில் பார்க்கலாம் என்று பதிவுத் துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர், உயிரிழந்த தனது தந்தையின் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து சிலர் நில மோசடி செய்துள்ளதாக புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர், ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ‘சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்ற வில்லங்க சான்றிதழ் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்ட நிலத்தை நான் வாங்கினேன். அந்தச் சான்றிதழில் சதீஷ் தொடர்பான விவரங்கள் எதுவும் இல்லை. வில்லங்கச் சான்றிதழில் உள்ள விவரங்களை நம்பியே அந்த நிலத்தை வாங்கினேன். நான் அப்பாவி’ என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.நாகமுத்து, இதுதொடர்பாக பதிவுத்
துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பதிவுத் துறை ஐ.ஜி. அனுப்பிய கடிதத்தை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண் டியன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதில் கூறியுள்ளதாவது:
சொத்துக்கள் தொடர்பான உண்மை விவரங்களை அறிந்து கொள்வதற்காக ஏராளமானோர் வில்லங்கச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். அதே நேரத்தில் சொத்து மோசடிகளும் பெருகி வருகின்றன. இந்நிலையில் சொத்துக்கள் தொடர்பான வில்லங்
கங்கள் மற்றும் பதிவுகளை இணைய தளத்தில் பார்க்கும் வசதி விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்துக்காக மென்பொருள் தயாரிக்கவும், தேவையான கருவிகளை வாங்கவும் தமிழக அரசு ரூ.58 லட்சத்து 33 ஆயிரம் ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டம் விரைவிலேயே அமலுக்கு வரும். சார் பதிவாளர் அலுவலகங்களில் கூட்ட நெரிசல் மற்றும் ஊழியர்களின் பணிச் சுமை ஆகியவற்றை குறைக்க இந்தத் திட்டம் பெரிதும் பயன்படும்.
மேலும், சொத்துக்களின் உரிமையாளர்கள் எங்கு வசித்தாலும், தங்கள் சொத்து
தொடர்பாக சார் பதிவாளர் அலுவ லக்தில் பதிவாகியுள்ள எல்லா விவரங்களையும் அவ்வப்போது இணையதளம் மூலம் பார்த்து தெரிந்துகொள்ள முடியும். இதனால் சொத்து மோசடிகள் பெருமளவு குறையும்.
இவ்வாறு பதிவுத் துறை ஐ.ஜி.யின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, ‘இந்த விவகாரத் தில் பதிவுத் துறை ஐ.ஜி. முழு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். இதற்காக தகவல் தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியைக் கேட்டுப் பெற வேண்டும்.
அனைத்து விவரங்களையும் கொண்ட முழுமையான வில்லங்கச் சான்றிதழ்கள் கிடைக்கவும், நில மோசடிகளைத் தடுக்கவும் ஒருங்கிணைந்த திட்டம் உருவாக்க வேண்டும்’ என்று நீதிபதி எஸ்.நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஜாமீன் கோரிய மனுதாரரை சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT