Last Updated : 23 Jun, 2016 12:26 PM

 

Published : 23 Jun 2016 12:26 PM
Last Updated : 23 Jun 2016 12:26 PM

2 ஆண்டுகளாகியும் பணிகள் தொடங்கவில்லை: பட்டாபிராமில் துணை மின் நிலையம் அமைவது எப்போது?

அடிக்கடி மின்வெட்டால் மக்கள் அவதி

துணைமின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படாததால் பட்டாபிராம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வெட்டு தொடர்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மிட்னமல்லி, முத்தாப்புதுப்பேட்டை, பாரதி நகர், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், ஆலத்தூர், பாக்கம், தண்டுரை, பாலவேடு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. சென்னையின் புறநகர் பகுதி என்பதால் இப்பகுதியில் ஏராள மானோர் குடியேறி வருகின்றனர். இதனால், இப்பகுதி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஆனால் இப்பகுதியில் சீரான மின் விநியோகம் செய்யப்படாததால் அடிக்கடி மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக மின் வாரியம் சார்பில் மிட்னமல்லியில் 33/11 கிலோ வோல்ட் திறன் கொண்ட ஒரு துணைமின் நிலையம் அமைக்கத் தீர்மானிக்கப் பட்டது. இதற்காக ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் இடமும் வாங்கப்பட்டது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இது வரை இப்பணிகள் தொடங்கப் படவில்லை. இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் சடகோபன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

பட்டாபிராம் மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் நிலவும் மின்வெட்டு பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கடந்த 2014-ம் ஆண்டு மிட்னமல்லியில் துணை மின் நிலையம் அமைக்க மின்வாரியம் முடிவு செய்தது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரத்தில் மிட்னமல்லியில் 33/11 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையம் ரூ.9 கோடியே 45 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்காக 2 ஆயிரத்து 50 சதுர மீட்டர் பரப்பளவுள்ள களம் புறம்போக்கு நிலம் வருவாய் துறையிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டது.

அத்துடன் இந்த துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், இது வரை இதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை இத னால் மின்வெட்டு பிரச்சினை தொடர் கதையாக உள்ளது. குறிப்பாக, தற்போது பட்டாபிராம் மற்றும் செங்குன்றம் அடுத்த அலமாதியில் உள்ள துணை மின்நிலையங்களில் இருந்து மிட்னமல்லி, முத்தாப் புதுப் பேட்டை, பாரதி நகர், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், ஆலத்தூர், பாக்கம், தண்டுரை, பாலவேடு ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஊர்கள் அனைத்தும் இந்த துணைமின் நிலையத்தின் எல்லைப் பகுதி யில் அமைந்துள்ளன. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

எனவே மின்வாரிய அதிகாரிகள் மிட்னமல்லியில் துணை மின் நிலையம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். இவ்வாறு சடகோபன் கூறினார்.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மிட்னமல்லியில் துணைமின் நிலையம் அமைப்பதற்காக டெண்டர்கள் விடப் பட்டு பணிகள் தொடங்க முடிவு செய்யப் பட்டது. அதற்குள் சட்டசபை தேர்தல் வந்ததால் தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக பணியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டதையடுத்து விரைவில் பணிகள் தொடங்கப்படும்’ என்றார்.

மிட்னமல்லியில் துணை மின் நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x