Published : 14 Jan 2014 12:00 AM
Last Updated : 14 Jan 2014 12:00 AM
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் வரலாறு குறித்த ஓவியங்கள், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கரிக்கையூர் பகுதியிலுள்ள பாறைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டு, 4500 ஆண்டுகளுக்கு முன்பே நடந்ததற்கான ஆதாரங்கள், நீலகிரி மாவட்டத்தில் கிடைத்துள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பழங்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், பாரம்பரியம் குறித்த சான்றுகள், பாறை ஓவியங்களின் மூலமாகவும், வரலாற்றுச் சின்னங்கள் மூலமாகவும் நிரூபணமாகியுள்ளன. இதனை தொல்லியல் ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கோத்தகிரி அருகே கரிக்கையூர், பொரிவரை பகுதி, தெங்குமரஹாடா, வனங்கப்பள்ளம், உதகை அருகே இடுஹட்டி, கொணவக்கரை, வெள்ளரிக்கொம்பை, மசினகுடி அருகே சீகூர் ஆகிய பகுதிகளில் மனித வாழ்வியல் குறித்த வரலாற்று ஆதாரங்கள் பாறைகளில் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
இதில், கரிக்கையூர் பகுதியிலுள்ள பாறைகளில் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு, இடை கற்காலத்தில் (மெசோலித்திக் பீரியட்) மனிதன் கால்நடைகளுடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், பாறைகளில் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. மாடுகளுடன் இளைஞர்கள் நடத்திய வீர விளையாட்டுகள் குறித்த ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இதன்மூலமாக காளைகளுடன் நடத்தப்பட்ட வீர விளையாட்டுகள், தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்துள்ளது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், மாவட்டத்திற்குட்பட்ட பல இடங்களில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.
கரிக்கையூர், பொரிவரை ஆகிய பகுதிகளில் காணப்படும் ஓவியங்கள், ‘மெசோ லித்திக் பீரியட்’ என கூறப்படும் இடை கற்காலத்தைச் சார்ந்தவை. இங்கு கால்நடைகளுடன் மனிதன் நடத்திய வீர விளையாட்டு குறித்த ஆதாரங்கள் உள்ளன. இதன்மூலமாக தமிழர்களின் பண்டிகை பொங்கல் என்பது உறுதியாகியுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT