Published : 16 Feb 2014 12:00 AM
Last Updated : 16 Feb 2014 12:00 AM
மதுரையில் அதிமுக நிர்வாகி அலுவலக வாசலில் வெடிப்பதற்கு முன்பே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் ராஜலிங்கம். மாநகராட்சி நகரமைப்புக் குழுத் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது அலுவலகம் கீழமாரட் வீதியில் உள்ளது. இதன் வாசலில் இருந்த மின்கம்பத்துக்கு கீழே சனிக்கிழமை இரவு சந்தேகப்படும் வகையில் ஒரு பை கிடந்தது.
அதைக்கண்ட ஆட்டோ டிரைவர் ஒருவர், இதுபற்றி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீஸார் அங்கு விரைந்தனர். அந்தப் பையை ஆய்வு செய்தபோது, அதற்குள் பிளாஸ்டிக் பாக்ஸ் இருந்தது. மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதித்ததில் ஒரு பிளாஸ்டிக் பெட்டிக்குள் வெடிகுண்டு இருந்தது உறுதியானது. அதை எச்சரிக்கையுடன் வெளியே எடுத்து, வயர் களைத் துண்டித்து செயலிழக்கச் செய்தனர்.
பின்னர் பரிசோதித்ததில், மத்தியில் வெடி மருந்தை வைத்து சுற்றப்பட்ட சணல் பந்து, அரை லிட்டர் பெட்ரோல் கொண்ட ஒரு கேன், 4 பேட்டரிகள், ஒரு பென் டார்ச் பேட்டரி, டைமர் ஆகியன இருந்தன. அவற்றைக் கைப்பற்றிய போலீஸார் தடய அறிவியல் சோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதனை வைத்தவர்கள் யார், எதற்காக வைத்தனர் என்பது பற்றிய விவரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது வெடித்திருந்தால் சுமார் 20 மீட்டர் தொலைவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த பிப். 9-ம் தேதி ராஜலிங்கம் அதே பகுதியில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந் தார். அந்த மேடையில் மாலை 3 மணியளவில் வெடிகுண்டு வெடித்தது. ஆனால் அதனை பட்டாசு வெடிவிபத்து என போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT