Published : 31 Mar 2014 04:55 PM
Last Updated : 31 Mar 2014 04:55 PM
விருதுநகரில் போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்து, மதிமுக பொதுச் செயலர் வைகோ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவின் பொதுச் செயலர் வைகோ, தான் போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், வைகோ இன்று அருப்புக்கோட்டைக்கு விருதுநகரில் இருந்து புறப்பட்டார். அவருடன் கட்சியினரும், தொடர் படையினரும் அடுத்தடுத்த வாகனங்களில் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.
வைகோ மற்றும் அவரது கட்சியினரின் வாகனங்கள் பெரியவள்ளிகுளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், வைகோவுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த அவரது கட்சியினரின் வாகனங்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
மதிமுகவினரின் வாகனத்தைச் சோதனையிட்டப்போது, அக்கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, தங்களை சப்-இன்ஸ்பெக்டர் ஒருமையில் பேசியதாகக் கூறி, மதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த வைகோ தனது வாகனத்தையும் சோதனையிடுமாறு போலீஸாரை கேட்டுள்ளார். அத்துடன், போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வைகோ சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.
"வாகன சோதனை நடத்துவதை விட்டுவிட்டு, வாகனத்தை நிறுத்தி 'இறங்குங்கடா, யாருடா நீங்க?' என்றெல்லாம் ஒருமையில் பேசியது சரியல்ல. போலீஸார் நடந்துகொண்ட முறை பண்பாட்டுக் குறைவானது. இந்த போக்கை அனுமதிக்கக்கூடாது.
நான் பிரச்சினை செய்யவேண்டும் என்பதற்காக சாலையில் உட்காரவில்லை. இது மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் அமர்ந்திருக்கிறேன்" என்றார் வைகோ.
மேலும், "முதல்வர் ஜெயலலிதா செல்லும்போது 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது, அப்போது தேர்தல் அதிகாரிகள் எங்கே போனார்கள்?" என்று போலீஸாரிடம் அவர் கேள்வி எழுப்பினார்.
பின்னர், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் உதயகுமார் வைகோவுடன் பேசியதைத் தொடர்ந்து, இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT