Published : 30 Nov 2014 11:43 AM
Last Updated : 30 Nov 2014 11:43 AM

தருமபுரியில் கை வைத்தியம் பார்ப்பதாக பிறந்து 2 நாளே ஆன சிசுவுக்கு சூடு போட்ட அவலம்: சுகாதாரத்துறை அமைச்சர் அதிர்ச்சி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் போடூர் அருகேயுள்ள திட்டனூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி முருகேசன். இவரது மனைவி பச்சியம்மாள். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே ஓர் ஆண் குழந்தை உள்ள நிலையில், 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. வீட்டி லேயே சுகப்பிரசவமாக பிறந்த இந்த குழந்தை அழாமலும், அசைவின்றியும் இருந்துள்ளது.

எனவே அந்தக் குழந்தையை இயல்பு நிலைக்கு கொண்டு வரு வதாக நினைத்து குரூர காரியம் ஒன்றை அவரது குடும்பத்தார் செய்துள்ளனர். அதாவது சைக்கிள் சக்கரத்தில் பயன்படுத்தும் கம்பி ஒன்றை தீயில் சூடுபடுத்தி குழந்தையின் வயிற்றில் சதுர வடிவில் 4 இடங்களிலும், இரு கால்களின் தொடைகளில் 2 இடங்களிலும் என 6 இடங்களில் சூடு வைத்துள்ளனர்.

ஆனாலும் குழந்தை இயல்பு நிலைக்கு வராததால் நேற்று முன்தினம் மாலை தருமபுரி அரசு மருத்துவமனை பச்சிளங் குழந்தைகள் பிரிவில் சிகிச்சைக் குச் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட குழந் தைக்கு செயற்கை சுவாசக் கருவி யான வென்ட்டிலேட்டர் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பச்சிளங் குழந்தைகள் பிரிவு மருத்து வர்கள் கூறும்போது, ‘இன்றளவும் இதுபோன்ற மூட நம்பிக் கைகள் மக்கள் மத்தியில் நிலவுவது வேதனை அளிக்கிறது. ஆபத்தான நிலையில் வந்த குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். குழந்தை படிப்படியாக உடல்நலம் தேறி வருகிறது’ என்றனர்.

இந்நிலையில் நேற்று காலை தமிழக சுகாதாரத் துறை அமைச் சர் விஜயபாஸ்கர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளங் குழந்தைகள் பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவு ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சுமார் 1 மணி நேரம் ஆய்வு நடத்திய அமைச்சர், சூடு காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த குழந்தை குறித்து கேட்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். ‘நவீன காலத்திலும் இதுபோன்ற நம்பிக்கைகளை மக்கள் தொடர்கிறார்களா?’ என்று கேட்டுச் சென்றுள்ளார்.

‘இதுபோன்ற வழக்கங்களை மக்கள் இன்னும் நம்புகின்றனர். எனவே மக்கள் மத்தியில் சிகிச்சைகள் தொடர்பாக தற்போதும் நிலவும் மூடப்பழக்கங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அமைச்சர் முயற்சி மேற்கொள்ள வாய்ப்புள்ளது’ என்று மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x