Published : 28 May 2017 12:23 PM
Last Updated : 28 May 2017 12:23 PM
மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் அவர்களது குழந்தைகளில் 1,500 பேர் மட்டுமே கல்வி உதவித்தொகை பெறுகின்றனர். அரசின் சலுகைகள் குறித்து அவர்களுத்து தெரியாததும், விழிப்புணர்வு இல்லாததுமே இதற்குக் காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பல்வேறு பகுதிகளில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அன்னூர், பொள்ளாச்சி, பல்லடம், கோவை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். சில நாட்களுக்கு முன் சித்தாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் 700 பேருக்கு மேல் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழக தலித் மக்கள் சங்கம் மற்றும் பல்வேறு எஸ்.சி., எஸ்.டி. அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த அமைப்பைச் சேர்ந்த செல்வகுமார் கூறியதாவது:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சட்டப்படி துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நிறைய கல்விச் சலுகைகள் உள்ளன. ஒரு தொழிலாளி தான் பணியாற்றும் உள்ளாட்சி அமைப்பில் சான்றிதழ் பெற்று, பள்ளியில் அளித்தால் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைக்கு ரூ.200 வரை மாத உதவித்தொகை கிடைக்கும். விடுதியில் தங்கிப் படித்தால் கூடுதல் உதவித்தொகை கிடைக்கும்.
பெண் கல்வித் திட்டத்தில் 3 முதல் 10-வது வரை பயிலும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.750, 10, 11-ம் வகுப்புகளுக்கு ரூ.2,000 முதல் ரூ.2,500, மருத்துவம் பயின்றால் ரூ.3 லட்சம், பொறியியல் பயின்றால் ரூ.70 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மேல்நிலைக் கல்வி, கல்லூரி பயிலும் குழந்தைகளின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டுமென நிபந்தனை உள்ளது. பஞ்சப்படி உள்ளிட்ட படிகளைக் கணக்கிடாமல் சான்றிதழ் வழங்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவ்வற்றை சேர்த்து கணக்கிட்டே அதிகாரிகள் சான்றிதழ் தருவதால், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்காத நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, பள்ளி, கல்லூரிகளிலும் ஜாதி, வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை கேட்பதாலும், கல்வி உதவித்தொகை பெற முடியாத நிலை உள்ளது. கட்டாய கல்வித் திட்டத்தில் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு இருந்தாலும், இது நடைமுறைப்படுத்தப் படுவதில்லை.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலவாழ்வு கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், பள்ளி, கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டதில், இதுபோன்ற குளறுபடிகள் தெரியவந்தன. இதுகுறித்து 5 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியரிடம் தெரிவித்தோம்.
ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், இது தொடர்பாக பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.
கடந்த ஆண்டு கோவையில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகளின் கல்வி, உதவித்தொகை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், கோவை மாநகரில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளில் 1,500 பேர் மட்டுமே கல்வி உதவித்தொகை பெறுவது தெரியவந்தது. அவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில் உள்ள சிக்கல்களைக் களைய முயன்றோம்.
நடப்பாண்டில் மாவட்டம் முழுவதும் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களிடம் ஆய்வு நடத்தியபோது, அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, கல்வி, சுகாதாரத் துறை அதிகாரிகள் மூலம், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறோம்.
இனியாவது அதிக எண்ணிக்கையில், துப்புரவுத் தொழிலாளரின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறுவார்கள் என நம்புகிறோம் என்றார்.
கோவை சித்தாபுதூர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற துப்புரவுத் தொழிலாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT