Published : 14 Jan 2014 10:41 AM
Last Updated : 14 Jan 2014 10:41 AM

மீலாது நபி: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

மீலாது நபியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ரோசய்யா

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான இந்த புனித திருநாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங் கனிந்த வாழ்த்துக்கள். இந்த புனித திருநாளில் நபிகள் நாயகம் போதித்த அமைதி, ஒருமைப்பாடு மற்றும் சகோதரத்துவத்தைக் கடைப்பிடித்து நடப்போம்.

முதல்வர் ஜெயலலிதா

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நன்னாளை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் மீலாது நபி என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இத்திருநாளில், இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

உண்மையைப் பேசுதல், தூய எண்ணத்தோடு வாழ்தல், ஏழை எளியோருக்கு உதவி புரிதல், அனைவரிடத்தும் அன்புடனும் நற்பண்புடனும் பழகுதல், புகழையும் அறத்தையும் தராத செயல்களைச் செய்யாதிருத்தல் என்பது இறைத்தூதர் நபிகள் நாயகம் உலகுக்கு நல்கிய போதனைகள். அன்பு இருந்தால்தான் பிறர்க்கு நாம் உதவ முடியும் என்பதை உறுதியாக நம்பி, அதன்படி வாழ்ந்துகாட்டிய அண்ணல் நபிகள் நாயகம் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி, எங்கும் அமைதி நிலவிடவும் சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம்.

திமுக தலைவர் கருணாநிதி

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த பொன்னாளாகிய மீலாது நபி திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் நன்மைகள் பொங்கிக் குலுங்கிட எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

நபிகள் இஸ்லாமிய தத்துவத்தை ஒரு வாழ்க்கை நெறியாகவே மக்களுக்கு போதித்தார். போதித்தபடியே வாழ்ந்து காட்டினார். அவர் எப்பொழுதும் ஏழைகளுக்காக இரக்கப்பட்டார். அனாதைகளுக்கு ஆதரவு தந்தார். துன்பத்தில் சிக்கிக் கொண்டவர்களின் துயர்களை துடைத்தார். விதவை பெண்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்

நாட்டில் மதநல்லிணக்கம், மகிழ்ச்சி, அமைதி நிறைந்து ஒற்றுமை ஒருமைப்பாட்டு உணர்வு மிகுந்திட அண்ணல் பிறந்தநாளான இன்று உறுதியேற்போம். அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் மீலாது நபி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

இறைவனை வணங்கி வாழ்வோம். பிற சமூகங்களோடு இணங்கி வாழ்வோம். எளியோர்க்கு வழங்கி வாழ்வோம் என்று சமூக ஒற்றுமைக்கும் சமய நல்லிணக்கத்திற்கும் பாதை அமைத்த நபிகள் பெருமானாரின் சாதனைகள் இன்றைய மனித குலத்திற்கு ஒளியூட்டுகின்றன. இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய மீலாது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்பு, அமைதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் அண்ணல் நபிகள் நாயகம். அவரது போதனைகளை உண்மையாக பின்பற்றுவதே அவருக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும். எனவே, அவர் போதனைகளை கடைபிடிக்க இந்த நன்னாளில் உறுதியேற்போம்.

சமக தலைவர் ஆர்.சரத்குமார்

அன்பு வழியிலும், அறவழியிலும் மனித குலம் நடைபோட வேண்டும் என்பதற்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்த அண்ணல் நபிகள் நாயகனாரின் சீரிய கொள்கைகளை கடைபிடிக்க உறுதி ஏற்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x