Published : 02 Mar 2017 09:30 AM
Last Updated : 02 Mar 2017 09:30 AM

உள்ளாட்சி: கல் உடைத்த தொழிலாளி களத்தை வென்ற கதை!- உலக நாடுகளின் கவனம் ஈர்த்த நவுரோதி தேவி

நீதிமன்றத் தீர்ப்புகள் மேன்மேலும் நம்பிக்கையூட்டுகின்றன. கிராம சபையின் தீர்மானமே இறுதியானது என்று மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். நெல்லை மாவட்டம், கலிங்கப் பட்டியில் கிராம சபை தீர்மானத்தின் அடிப்படையில் அரசு மதுபானக் கடையை மூட உத்தரவிட்டிருந்தது உயர் நீதிமன்றம். அந்தத் தீர்ப்புக்கு தடை கோரும் சிறப்பு விசாரணை மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது. இதைத் தான் தள்ளுபடி செய்து கிராம சபையின் அதிகாரத்தை நிலைநிறுத்தி யிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

ஒருவிஷயத்தை யோசிப்போம். ஒரு மதுக் கடைக்காக மாநில அரசு ஏன் உச்ச நீதிமன்றம் வரை முட்டி மோத வேண்டும்? விஷயம் ஒரு கடையுடன் தொடர்புடையது மட்டு மல்ல; மூன்றாவது அரசாங்கமான கிராம சபையின் மீது அதிகார வர்க்கத் துக்கு ஏற்பட்டிருக்கும் அச்சம் அது!

அந்த பயம்தான் அதிகாரிகளை, “ஒரு பஞ்சாயத்தின் தீர்மானத்தை ஏற்றால், தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான டாஸ்மாக் கடைகளை மூட வேண்டிவரும்” என்று நீதிமன் றத்தில் உண்மையை ஒப்புக்கொள்ள வைத்தது. இதன் மூலம் தமிழகத்தில் நீண்டகாலமாக நீடிக்கும் மதுவிலக்குப் பிரச்சினைக்கு சட்டபூர்வமான தீர்வு கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் தேர்வாகியிருக்கும் பஞ்சாயத்துத் தலைவர்களில் பாதி பேர் நினைத் தால்கூட மதுவிலக்கை அமல் படுத்திவிட முடியும். தனது கிராமத்தை ஆட்டிப் படைத்த சாராய சாம் ராஜ்ஜியத்தை அப்படித்தான் விரட்டியடித்தார் நவுரோதி தேவி!

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டத்தில் இருக்கிறது ஹர்மதா கிராமப் பஞ்சாயத்து. கடந்த 2009-ம் முதல் ஐந்து ஆண்டுகள் ஹர்மதாவின் கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக இருந்த நவுரோதி செய்திருக்கும் பணி கள் ஒவ்வொன்றும் மகத்தானவை. 1980-களின் தொடக்கத்தில் இதே கிராமத்தில் கல் உடைக்கும் தொழி லாளியாக இருந்தார் நவுரோதி. இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கிராமத்தில் ஜாட் இனத்தவரின் ஆதிக்கம் அதிகம் இருந்தது.

தலித் மக்களுக்கு தினக் கூலியில் பாதி அளவே வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து குரல் கொடுத்தார் நவுரோதி. தீ வைத்து எரிக்கப்பட்டது இவரது குடிசை. இவருக்கு வேலை தர மறுக்கப்பட்டது. ‘மஜ்தூர் கிஷான் சக்தி சங்கேதன்’ அமைப்பின் உதவியுடன் சுமார் 700 பெண்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தினார் நவுரோதி. போராட்டம் வென்றது. தலித் மக்களுக்கு நியாயமான கூலி பெற்றுத் தந்தார். 2000-களில் ராஜஸ்தானில் தகவல் அறியும் உரிமை சட்டத்தைக் கொண்டுவர தொடர் போராட்டங்களை நடத்தினார். மத்திய அரசு 2005-ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தைக் கொண்டுவர காரணமாக அமைந்தது அந்தப் போராட்டம்.

தனது போராட்டங்களுக்கு கல்வி மிக முக்கியம் என்பதை உணர்ந்தவர், மாலை நேர வகுப்பு மூலம் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். சமூக சிந்தனை யாளரும் கல்வியாளருமான சஞ்சித் பங்கர் ராயின் சமூகப் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மையமான ‘பேர்ஃபுட்’ கல்லூரியில் சேர்ந்து ஆளுமை தகுதி களை வளர்த்துக்கொண்டார். 2009-ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் ஹர்மதா கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக தேர்வானார். முதல் வேலையாக கிராம சபை தீர்மானத்தின் மூலம் தனது கிராமத்தில் இருந்த மதுக் கடைகளையும் சாராயக் கடை களையும் அப்புறப்படுத்தினார். பல தலைமுறையாக சாராயத் தொழில் செய்தவர்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்பாடுகளை செய்துகொடுத்தார்.

கிராமப் பெண்களுக்கு ஆபர ணங்கள் தயாரிப்பு, ஆயத்த ஆடை தயாரிப்பு, கணினியில் கணக்குகளைக் கையாள்வது உள்ளிட்ட பயிற்சி களை அளித்தார். அங்கு தலித் சமூகத்தினருக்கான இடுகாடு ஆக்கிர மிக்கப்பட்டு குப்பைக் கொட்டப்பட்டு வந்தது. அதனை மீட்டு, சுற்றுச் சுவர் எழுப்பினார். ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களை மீட்டவர், அரசு சுகாதார மையம், சமூக நலக்கூடம், நூலகம் போன்றவற்றை அமைத்தார். 10-க்கும் மேற்பட்ட கசிவு நீர் குட்டைகளை அமைத்து நிலத்தடி நீரை பெருக்கினார். வறுமைக் கோட்டுக்குக் கீழிருந்த அனைவருக்கும் சொந்த வீடு பெற்றுத் தந்தார். தனது கிராமத்தில் முதன்முறையாக வீடுகள்தோறும் கழிப்பறையைக் கட்டினார்.

ஹர்மதா கிராமப் பஞ்சாயத்தின் உள்ளாட்சித் தலைவராக பொறுப் பேற்றபோது பஞ்சாயத்து கடும் நிதி நெருக்கடியில் இருந்தது. வரி நிர்வாகத்தைத் தூசு தட்டினார். அதுவரை விவசாயிகளும் மக்களும் அங்கு நிலச்சுவான்தாரர்களாக இருந்த ஆதிக்க சாதியினருக்கு வரியை செலுத்தி வந்தனர். கிராம சபை தீர்மானத்தின் மூலம் வரி வருவாயைப் பஞ்சாயத்து நிர்வாகத்துக்குக் கட்ட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தார். ஆரம்பத்தில் சில பிரச்சினைகள் எழுந்தன. ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் பிரச்சினைகளை வென்றார். இவர் பஞ்சாயத்துத் தலைவராகப் பொறுப்பேற்றபோது பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு வங்கிக் கணக்கே கிடை யாது. ஆனால், இவர் பொறுப்பில் இருந்து விலகியபோது வருவாய் சேமிப்பு நிதியாக ரூ.13 லட்சம் இருந்தது.

மேற்கண்ட பணிகள் அனைத்தும் நமக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், சொட்டு குடிநீருக்கே அல்லாடும் பாலைவன பூமியான ராஜஸ்தானில் இவை அனைத்தும் சாதனைகள். ஒவ்வொன்றுக்கும் உயிரைக்கொடுத்து போராட வேண்டி யிருக்கும். அப்படிதான் போராடினார் நவுரோதி. தனது பணிகளின் மூலம் உலக நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்தார். அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உள்ளாட்சி அமைப்புகள் நவுரோதியை அழைத்து கவுரவித்தன. அதே சமயம் இவரது செல்வாக்கைக் கண்டு அஞ்சிய மாநில அரசு, ‘பள்ளிக் கல்வி பயிலாதவர்’ என்றுச் சொல்லி, இவரை பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்திருக் கிறது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருக்கிறார் நவுரோதி தேவி.

“எனக்கு வயது 75-ஐத் தாண்டிவிட்டதால் நான் சோர்வடைந்து விடுவேன் என்று நினைக்கிறது அதிகார வர்க்கம். இனிமேல்தான் முன்பைவிட வேகமாகச் செயல்படுவேன் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள்...” கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த இந்தியப் பெண்களுக்கான தேசியக் கூட்டமைப்பில் நவுரோதி தேவி விடுத்திருக்கும் சவால் இது!

- தொடரும்...| எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x