Published : 25 Jul 2016 10:59 AM
Last Updated : 25 Jul 2016 10:59 AM
திருக்கழுக்குன்ற வேதகிரீஸ்வரர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள புண்ணிய தீர்த்த குளங்களுக்கு, பக்தர்கள் மற்றும் ஆன்மிக சுற்றுலா பயணிகள் எளிதாகச் செல்லும் வகையில் வழிகாட்டி பலகைகள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரிக், யசூர், சாம, அதர் வணம் ஆகிய நான்கு வேதங்க ளால் உருவான மலை மீது திருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ள தாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த மலையைச் சுற்றிலும் சிவ பெருமான், முனிவர்கள் மற்றும் தேவர்களுக்கு அருள் பாலித்து முக்தி அளிப்பதற்காகக் காட்சி யளித்தபோது அகத்தீய குளம், மூலிகை குளம், அக்னி குளம், லட்சுமி தீர்த்தம், ரிஷப தீர்த்தம் மற்றும் சங்கு தீர்த்தம் உள்ளிட்ட 14 தீர்த்தக் குளங்கள் அமைந்ததாகவும் நம்பப் படுகிறது.
இதில், சங்கு தீர்த்தக்குளம் வெகு பிரசித்தி பெற்றது. மலை கோயிலின் தெற்கே 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சங்கு தீர்த்தக்குளத்தில் மார்க்கண்டேய முனிவர் சிவனை நோக்கித் தவம் செய்தபோது வழிபாடு செய்ய, இந்தக் குளத்தில் சங்கு பிறந்ததாக ஐதிகம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இன்றும் இயற்கையாகச் சங்கு பிறக்கும் உற்சவம் நிகழ்த்தப்படுகிறது. நன்னீரில் சங்கு பிறப்பது அதிசயம். அதனாலேயே, இக்குளத் துக்கு சங்கு தீர்த்த குளம் எனப் பெயர் வந்ததாகப் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
வேதமலையின் மீது பல அரியவகை மூலிகைகள் உள்ளன. மழை காலத்தில் மலையில் இருந்து வரும் நீர், கால்வாய்கள் மூலம் குளத்தில் சேகரமாகிறது. முன்னதாக இந்த நீரை வடிதொட்டி அமைத்து, தெளிந்த நீராகக் குளத்தில் கலக்க விடப்படுகிறது. இக்குளத்தில் நீராடி மலையை வலம் வந்தால், நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் பவுர்ணமி தோறும் கிரி வலம் செல்லக் கூட்டம் அலைமோதும்.
இத்தகைய பிரசித்தி பெற்ற சங்கு தீர்த்தக்குளத்தில் வரும், ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி குரு பகவான் கன்னி ராசியில்இடப் பெயர்ச்சியாவதை யொட்டி, புஷ்கரணி மேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், உள்ளூர் வெளியூர் மற்றும் வடமாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சாதுக்கள் சங்கு தீர்த்த குளத்தில் நீராடி, மலைமீதுள்ள வேதகிரீஸ்வரரை வழிபடுவர். இதனால், பக்தர்களுக்கான அடிப் படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இந்நிலையில், வேதகிரீஸ்வரர் கோயிலை சுற்றி அமைந்துள்ள தீர்த்த குளங்களுக்கு பக்தர்கள் எளிதாகச் செல்வதற்கான வழிகாட்டி பலகைகள் இல்லை. அதனால் நகரப்பகுதியில் வழிகாட்டி பலகைகள் அமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, திருக்கழுக் குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் தியாகரா ஜனிடம் கேட்டபோது, ‘சங்கு தீர்த்தம் மற்றும் தாழக்கோயி லான பக்தவச்சலேஸ்வரர் கோயிலின் உள்ளே அமைந்துள்ள ரிஷப குளம் ஆகிய இரண்டு மட்டுமே கோயில் நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ளன. மற்ற குளங்களை சீரமைப்பது மற்றும் வழிகாட்டி பலகைகள் அமைப்பது போன்ற பணிகளை நாங்கள் செய்ய முடியாது’ என்றார்.
இதுதொடர்பாக, திருக்கழுக் குன்றம் பேரூராட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தீர்த்த குளங்களை சீரமைப்பது தொடர்பாக நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தீர்த்த குளங்களுக்கு வழிகாட்டி பலகைகள் அமைப்பது குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ் வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT