Published : 11 Feb 2014 12:00 AM
Last Updated : 11 Feb 2014 12:00 AM
அரசுப் பணி வழங்கக்கோரி முன்னாள் செவிலியர் பயிற்சி மாணவிகள் 600 பேர், டிஎம் எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில் 23 அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. மூன்றரை ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ நர்ஸிங் படிப்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். படித்து முடித்ததும், சீனியாரிட்டி அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர்ந்து வந்தனர்.
‘மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (எம்ஆர்பி) தேர்வு எழுதிதான் அரசு மருத்துவமனை பணியில் சேர முடியும்.
இந்தத் தேர்வை தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்து முடித்தவர்களும் எழுதலாம்’ என சமீபத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு செவிலியர் கல்லூரி மாணவிகள் கடந்த வாரம் தொடர் போராட்டங்களை நடத்தினர். பின்னர் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், மதுரை அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி களை விடுதியில் இருந்து வெளியே அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு மருத்துவமனை பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரியும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் 300 பேர், திங்கள்கிழமை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மனித சங்கிலியில் ஈடுபட்டனர். அதன்பின், மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி, டீன் ராமகிருஷ்ணன் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.
அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் 2010-ம் ஆண்டு படித்து முடித்த சுமார் 600 மாணவிகள், திங்கள்கிழமை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்) அலுவல கத்தை முற்றுகையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT