Published : 25 Sep 2013 12:50 PM
Last Updated : 25 Sep 2013 12:50 PM
தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கையை விட பாழாய்ப் போன டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதாக பேஸ்புக்கில் கிண்டலடிக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளை வைத்து அலுங்காமல் குலுங்காமல் ஆண்டுக்கு நாற்பதாயிரம் கோடியை அள்ளித் தட்டுகிறது தமிழக அரசு. இது தெரிந்த கதை. ஆனால், டாஸ்மாக் ஊழியர்களும் பார் நடத்துபவர்களும் ஓசைப்படாமல் பெரும் சம்பாத்தியம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். 'குடி'மக்களும் கண்ணுக்கு தெரிந்தே இந்த களவாணித்தனத்தை அங்கீகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் சரக்குகளில் கலப்படம் பண்ணாமலும் போலிகளை புகுத்தாமலும் அசல் சரக்கின் மீதே குவாட்டருக்கு ஐந்து ரூபாய் அதிகம் வைப்பதிலிருந்து தொடங்குகிறது டாஸ்மாக் பணியாளர்களின் 'தொழில்' திறமை. அடுத்து, தண்ணீர் பாக்கெட், பாலிதீன் கப். இதையும் பார் உரிமையாளருடன் சிலபல ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டு, இவர்களேதான் சப்ளை செய்கிறார்கள். ஒரு தண்ணீர் பாக்கெட்டும் பாலிதீன் கப்பும் தலா ஐம்பது பைசாவுக்கு வாங்கி, கிராமப்புறமாக இருந்தால் மூன்று ரூபாய்க்கும் நகர்ப் பகுதியாக இருந்தால் ஐந்து ரூபாய்க்கும் விற்கிறார்கள். ஆக, தண்ணீர் பாக்கெட், கப் சகிதம் ஒரு குவாட்டர் விற்றால் டாஸ்மாக் ஊழியருக்கு தனியாக, குறைந்தது பத்து ரூபாய் கட்டிங் கிடைத்துவிடுகிறது.
இதுமட்டுமா? குடிமகன்கள் அதிகம் விரும்பும் சரக்குகளில் இவர்களின் கைவரிசையே தனி. இதற்கு மூலதனம் ஒரே ஒரு கோணி ஊசிதான். கோணி ஊசியை பாட்டில் மூடியின் அடிப்பகுதியில் லாவகமாக நுழைத்து, அப்படியே ஒரு சுற்று சுற்றி அழுத்தமாக பதிந்திருக்கும் மூடியின் அடிப் பகுதியை இலகுவாக்குகிறார்கள். பிறகு அதை அப்படியே கழற்றிவிட்டு, பாட்டிலில் இருந்து ஐம்பது மில்லி அளவுக்கு சரக்கை வெளியே எடுக்கிறார்கள். அதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றி பாட்டிலை பழையபடி கோணி ஊசி துணையோடு அழுத்தமாக மூடிவிடுகிறார்கள். இதில் பாட்டில் மூடியின் திருகுகள் எந்த பாதிப்பும் அடையாது. அதனால் யாருக்கும் சந்தேகமும் வராது. இவ்வாறு இரண்டு குவாட்டர் பாட்டில்களில் தலா 50 மில்லி எடுத்தால் போதும்.. அதில் தண்ணீரை கலந்து புது பிராண்ட் குவாட்டரை உருவாக்கி விடுவார்கள். கட்டிங் கேட்டு வரும் குடிகாரர்களுக்கு இந்த பாட்டிலில் இருக்கும் சரக்கை ஊற்றிக் கொடுத்து பைசா பார்த்துவிடுவார்கள். இந்த விடாக்கண்டனை மிஞ்சும் கொடாக்கண்டன்களும் இருக்கிறார்கள். கோணி டெக்னிக்கை கண்டுபிடித்துவிட்டால், 'பாட்டில் கழுத்து சுத்திக்கிச்சு.. வேற பாட்டில் குடுங்கப்பு' என்று கேட்டு வாங்கிக்கொண்டு போவது தனிக்கதை.
சில பேராசைக்காரர்கள் ஐம்பது மில்லிக்கு பதிலாக நூறு மில்லி வரை உறிஞ்சிவிட்டு, கலப்படம் தெரியாமல் இருப்பதற்காக ஹான்ஸ் சாற்றை ஊற்றி சமநிலைப்படுத்தி விடுகிறார்கள். ஹான்ஸ் என்ன நன்மை (!) செய்யும் என்று கேட்காதீர்கள். அடுத்து பாருக்கு வருவோம். கூலிங் பீர்தான் இவர்களின் டார்கெட். கடையில் கேட்டால், “உள்ளே பாரில் இருக்கிறது'' என்று கைகாட்டி விடுவார்கள். 75 ரூபாய் பீர்பாட்டிலை பாரில் வாங்கினால் 100 ரூபாய் அழவேண்டும். ஒரு பீருக்கு 25 ரூபாய் லாபம் பார்க்கும் பார் உரிமையாளர், மற்றவற்றை சும்மா விடுவாரா?
சென்னை பார்களில் பாலிதீன் கப், தண்ணீர் பாக்கெட், நாலைந்து கடலைகள் கொண்ட பாக்கெட், 25 கிராம் மிக்சர் பாக்கெட் என்று எதை எடுத்தாலும் ஆறு ரூபாய்! மட்டமான தண்ணீர் பாட்டில் ஒன்று முப்பது ரூபாய். அதன் தரத்தைப்பற்றி எல்லாம் கேள்வி எழுப்பக்கூடாது. குழாய் தண்ணீரைப் பிடித்துக்கொண்டு வந்து பத்து ரூபாய்க்கு பாரில் தள்ளிவிடுவார்கள். அதைத்தான் இருபது ரூபாய் அதிகம் வைத்து நமக்கு பில் போடுகிறார்கள். தப்பித் தவறிக்கூட வெளியிலிருந்து எதையும் உள்ளே கொண்டுபோக முடியாது. மீறினால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவார்கள். சென்னையில் முக்கிய இடங்களில் பார் பிரவேசம் செய்யவே பத்து ரூபாய் தண்டம் அழவேண்டி இருக்கிறது. ஏ.சி.யாக இருந்தால் இந்தத் தொகை மணிக்கொருமுறை எகிறும்.
கோழிப்பண்ணைகளில் சீக்கு வந்து செத்துப் போகும் கோழிகள், முட்டையிட்ட பிறகு பண்ணைகளை விட்டு கடத்தப்படும் கோழிகள் ஆகியவைதான் பார்களில் பரிமாறப்படும் சிக்கன் வகையறா. பத்து ரூபாய்க்கு ஐந்து என்று கிடைக்கும் மத்தி மீன்கள் இங்கே காஸ்ட்லியான ஃபிஷ் பிரை. கிடைத்தால் ஆட்டுக்கறி.. கிராக்கியாக இருந்தால் இருக்கவே இருக்கிறது மலிவாக கிடைக்கும் மாட்டுக்கறி. இவை சுத்தம் செய்யப்படும் முறையையும் சமைக்கும் ஃபார்முலாவையும் பார்த்தால் குடிமகன்களே ஜீவகாருண்யம் பேச ஆரம்பித்து விடுவார்கள். அவ்வளவு ஹைஜீனிக்(?)
'80 ரூபாய் குவார்ட்டருக்கு கடைக்கார னுக்கு ஐந்து ரூபாய், தண்ணீர் பாக்கெட், கப்புக்கு பத்து ரூபாயா?' என்று அதிர்ச்சியாய் யோசிக்கிறவர்கள், சில நேரங்களில் சரக்குக்கு தோஷமில்லை என்று சொல்லி, யாராவது குடித்துவிட்டு வைத்திருக்கும் 'யூஸ் அண்ட் த்ரோ (செய்யாத) கப்பை லபக்கிக் கொள்கிறார்கள். அது நல்ல வாயன் குடித்ததா, நாற வாயன் குடித்ததா என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. போதாக்குறைக்கு, அங்கே மீந்து கிடக்கும் தண்ணீர் பாக்கெட்களில் இருக்கும் தண்ணீரை ஊற்றிக் குடித்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். அதுவும் இல்லையென்றால் அருகில் இருப்பவர்களிடம் கூச்சமின்றி தண்ணீர் பிச்சை கேட்கிறார்கள்.
டாஸ்மாக் பொறுப்பாளரையும் பார் உரிமையாளரையும் தவிர, அந்தந்த ஏரியா அரசியல்வாதிகளுக்கும் அட்சய பாத்திர மாய் அள்ளிக் கொடுக்கிறது டாஸ்மாக். இவர்களுக்கு கடைகளிலிருந்து மாமூல் போவது தனி. இது தவிர, பெட்டி பெட்டியாய் சரக்குகளை கொள்முதல் செய்து வைத்துக் கொண்டு டாஸ்மாக் டைம் முடிந்த பிறகு, 'குடி' மக்கள் சேவையை தொடங்கி விடுகிறார்கள். இதில் குவாட்டருக்கு நாற்பது ரூபாய் நாசூக்காய் சம்பாதிக்கிறார்கள். விடுமுறை நாட்களில் இவர்கள் வைத்ததுதான் ரேட்.
இத்தனை பேரும் உங்கள் பையிலிருக்கும் பணத்தைத்தான் பலவழிகளில் பஸ் பிடித்துவந்து சுரண்டுகிறார்கள். இவ்வளவு கேவலங்களுக்கு மத்தியில், சுகாதாரம் சீர்கெட்ட நிலையில் இப்படியொரு குடி தேவையா? நிதானமாக யோசியுங்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT