Published : 14 May 2017 12:34 PM
Last Updated : 14 May 2017 12:34 PM
ஆழியாறு (பிஏபி) ஒப்பந்தப்படி தமிழக அரசு ஆழியாறு நீரை கேரளாவுக்குக் கொடுத்தாலும், அதை தமிழர்கள் வாழும் பகுதிக்கு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. அதனால் தொடர்ந்து வறட்சியில் சிக்கிப் பரிதவிப்ப தாக கூறுகின்றனர் தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ள கேரளப் பகுதி விவசாயிகள்.
கோவைக்கு தெற்கே தமிழக எல்லையில் அமைந்துள்ளது கேரளப் பகுதிகளான வடகரைப்பதி, எரித்தேன்பதி, கொழிஞ்சாம்பாறை ஊராட்சிகள். இந்த 3 ஊராட்சிகளும் பாலக்காடு மாவட்டம் சித்தூர் வட்டத்தில் உள்ளன. இவற்றுக்குத் தெற்கே பொள்ளாச்சி எல்லையில் அமைந்துள்ள மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், முதலமடை பகுதிகள் பெருமாட்டி ஊராட்சிக்கு உட்பட்டவை. இந்த ஊராட்சிகளுக்குள் வரும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தற்போது கடும் வறட்சியால் சிக்கித் தவிக்கின்றன.
இங்கு நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. இந்தப் பகுதியில் உள்ள தென்னை மரங்கள் காய்ந்துவிட்டன. இடதுகரை வாய்க்கால் மூலம் நடைபெற்ற நெல் சாகுபடியில், ஒரு போகம் விவசாயம் செய்ய வேண்டாம் என்று அரசே கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்ந்து வறட்சி அதிகரிக்கும் என்பதால், கடந்த மார்ச் மாதம் முதல் இங்கு வர்த்தக, விவசாய நோக்கில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அரசின் பாரபட்ச அணுகுமுறையே காரணம் என்று இந்தப் பகுதி விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அமைப்புகளில் ஒன்றான பாலக்காடு-கேரளா மாநில தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பேச்சிமுத்து கூறியதாவது:
மழை மறைவுப் பிரதேசம்
இங்குள்ள வடகரைப்பதி, கொழிஞ்சாம்பாறை, எரித்தேன்பதி, பெருமாட்டி மட்டுமின்றி, ஆனைகட்டி எல்லையில் உள்ள அட்டப்பாடி பிரதேசம், வாளையாறு அடுத்துள்ள புதுசேரி ஊராட்சிகளில், பிஏபி திட்டம் அமல்படுத்தப்பட்ட பின் தட்பவெட்ப நிலையே மாறிவிட்டது.
இப்பகுதியில் உள்ள ஊர்கள் தட்பவெப்பநிலை, பருவமழை விஷயங்களில் தமிழக சூழ்நிலையையே தழுவியுள்ளன. இந்தப் பகுதியை மழை மறைவுப் பிரதேசம் என்று அரசே அறிவித்து விட்டது.
கொழிஞ்சாம்பாறை, வடகரைப்பதி, எரித்தேன்பதி ஊராட்சிகளுக்கு, பிஏபி திட்டம் உருவாவதற்கு முன் பரம்பிக்குளம், ஆழியாறு ஆகியவற்றின் நீராதாரமான ஓடைகளால் தண்ணீர் கிடைத்தது. இதனால் இந்தப் பகுதி நீர் வளம் மிக்க பகுதியாக இருந்தது.
பிஏபி திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், இந்தப் பகுதிக்கு நீர்வரத்து தடைபட்டது. மேலும், மழை அளவும் குறைந்தது. அதனால் வறட்சி ஏற்படத் தொடங்கியது.
இந்தப் பாதிப்பை முன்கூட்டியே அறிந்துதான், பிஏபி ஒப்பந்தப்படி மணக்கடவு அணை வழியாக மூலத்துறை அணையில் கேரளத்துக்கு குறிப்பிட்ட அளவு ஆழியாறு நீர் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
இந்த நீரை வலதுகரை வாய்க்கால், இடதுகரை வாய்க்கால் மூலம் 2 பிரிவுகளாக பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். குறிப்பாக, ஜனவரி 31-ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு வலதுகரை வாய்க்காலுக்கு நீரை அளிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டிருந்தது. அதற்குப் பிறகு தென்மேற்குப் பருவ மழை தொடங்கி விடுவதால், இந்த பகுதிகளுக்கு பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் முழுமையாக கிடைத்துவிடும்.
அக்டோபர் மாதத்திலும் வடகிழக்குப் பருவமழை மூலம் அதிக மழை பெய்யும் என்பதால் தண்ணீருக்குக் குறைவிருக்காது.
ஆனால், இந்த ஏற்பாட்டை முந்தைய இடதுசாரி அரசு (எல்டிஎப்) மாற்றியது. இடதுகரை வாய்க்காலில் நெல் வயல்கள் அதிகம் இருப்பதால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் விரும்பினால் மட்டுமே வலதுகரை வாய்க்காலுக்கு நீர் கொடுக்கலாம் என்று திருத்தம் கொண்டுவந்தனர்.
சித்தூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் முயற்சியால் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. இதனால் வடகரைப்பதி, கொழிஞ்சாம்பாறை, எரித்தேன்பதி ஊராட்சிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இவை 90 சதவீதம் தமிழர்கள் வாழும் பகுதிகளாகும்.
எனவே, முந்தைய அரசு விதித்த இந்த உத்தரவை மாற்றி, முன்புபோலவே நீரைப் பகிர்ந்து கொடுக்கும் முறையை அமல்படுத்த வேண்டுமென கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கட்சிகளிடம் கோரிக்கை வைத்தோம். அதை எல்டிஎப் கூட்டணி முழுமையாக ஏற்றுக் கொண்டது.
இதையொட்டி, வலதுகரை வாய்க்கால் பாசன அமைப்புடன் இணைந்து வடகரப்பதி எல்டிஎப் கூட்டணிக் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். தற்போது வடகரப்பதி ஊராட்சியில் எல்டிஎப் உறுப்பினர்கள்தான் அதிகமாகவும் உள்ளனர். எனவே, வாக்களித்தபடி எங்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாணும்படி 2 மாதங்களுக்கு முன்பு 18 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினோம்.
ஏற்கெனவே இந்தப் பகுதியில் பாய்ந்து கொண்டிருந்த கோரையாறு, வரட்டியாறு ஆகியவை பாரபட்ச நீர் பங்கீட்டு முறையால் வறண்டுவிட்டன. அவற்றில் மீண்டும் தண்ணீர் வரும் வகையில், ஆற்றில் தண்ணீர் விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.
பின்னர், சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணன்குட்டி முயற்சியால், கடந்த 50 நாட்களில் முதல்முறையாக 5 நாட்களும், பின்னர் 6 நாட்கள், 10 நாட்கள் என ஓரளவுக்கு தண்ணீர் விட்டனர். அதனால் கொழிஞ்சாம்பாறையில் ஒரு பகுதியில் ஓரளவுக்கு நீர்மட்டம் உயர்ந்தது. கால்நடைகளுக்கு உயிர் நீர் கிடைத்தது. அதேபோல, எரித்தேன்பதியிலும் ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் கிடைத்தது. ஆனால், வடகரப்பகுதியில் முற்றிலும் தண்ணீர் கிடைக்கவில்லை.
தமிழகத்திலிருந்து விடப்படும் ஆழியாறு நீரை இடதுகரை வாய்க்கால் மூலம் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டாம்பி வரை கொண்டு செல்கின்றனர். மேலும், பெரிய ஆறான பாரதப்புழாவில் நீர் இல்லை என்பதால், அதிலும் ஆழியாறு நீரை விடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்த தண்ணீர் எல்லாம் இந்தப் பகுதிகளுக்கான தண்ணீர். பாரபட்சம் காரணமாக கோரையாறு முற்றிலும் வறண்டு விட்டது. எனவே, மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
மாறிய தட்பவெப்ப நிலை
கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட பெரும்பான்மை தமிழர்கள் வாழும் ஊராட்சிகளில், உளுந்து, சோளம் மற்றும் மாட்டுத் தீவனம் உள்ளிட்ட 3 மாத பயிர்களையே விதைத்து வந்துள்ளனர். ஆனால் இடதுகரை வாய்க்கால் மூலம் தண்ணீர் பெறும் கிராமங்கள் 2, 3 போக நெல் சாகுபடியில் ஈடுபடுகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக நிலவும் இதுபோன்ற சூழலால் பாலக்காடு பகுதியே, தட்பவெப்பநிலையில் தமிழகத்தைப் போலவே மாறி விட்டதாகவும் இந்தப் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இங்கு அண்மையில் ஆய்வு மேற்கொண்ட தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு, சோளம், உளுந்து போன்ற 3 மாத மானாவாரிப் பயிர்களை விளைவிப்பதுதான் எதிர்காலத்துக்கு நல்லது. நெல் பயிர் சாகுபடி சரிப்படாது. நெல் பயிரிட்டால் இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்குச் சென்றுவிடும் என்று எச்சரித்துள்ளதாம்.
“தமிழகம் வழங்கும் ஆழியாறு நீரை, தமிழர்கள் வாழும் பகுதிக்குத்தான் அளிக்கிறோம் என்று கேரள அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் நடைமுறையில் இதை செயல்படுத்துவதில்லை.
பாலக்காடு மாவட்டத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்த பின்னர், மத்தியக் குழு பார்வையிட வந்தபோது, சித்தூர் வட்டத்தில் கொழிஞ்சாம்பாறை, வடகரைப்பதி பகுதிகளைத்தான் வறட்சி அதிகம் பாதித்த பகுதிகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு வழங்கும் வறட்சி நிவாரண நிதியைக்கூட இப்பகுதி மக்களுக்குத் தருவார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை நிவாரணத் தொகை வழங்காவிட்டால் அதற்காகவும் போராட்டம் நடத்துவோம்” என்று கொழிஞ்சாம்பாறை பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT