Published : 09 Jan 2014 08:05 AM
Last Updated : 09 Jan 2014 08:05 AM
ஆட்டோக்கள் மீது போலீசார் நடத்தும் கெடுபிடிகளை நிறுத்த வேண்டும், முத்தரப்பு கமிட்டியை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9 ஆட்டோ தொழிற்சங்கங்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டன.
சென்னையில் ஓடும் 72,000 ஆட்டோக்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீஸ் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஆட்டோக்கள் மீதான கெடுபிடிகளை உடனே நிறுத்த வேண்டும், முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும், பெட்ரோல், டீசல், கியாஸ் மானிய விலையில் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, பாட்டாளி தொழிற்சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி உட்பட 9 தொழிற்சங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். ஆட்டோ டிரைவர்களின் போராட்டத்தை யடுத்து அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுனர் சம்மேளன (ஏஐடியுசி) பொது செயலாளர் சேஷசாயன் கூறுகையில், ‘‘ஆட்டோக்கள் மீது போக்குவரத்து மற்றும் போக்குவரத்து போலீஸ் கெடுபிடி செய்கின்றனர். இந்த நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச வேண்டும்.
மேலும், எரிபொருள் விலைக்கு ஏற்றவாறு கட்டணத்தை மாற்றியமைக்க முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும், பெட்ரோல், கியாஸ், டீசல் மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்துகிறோம். இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழக அரசு எங்களின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் விரைவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT