Published : 07 Mar 2017 12:30 PM
Last Updated : 07 Mar 2017 12:30 PM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் மழைப்பொழிவு குறைந்ததால், வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பறவைகளின் வரத்து இந்த சீசனில் 16 ஆயிரமாக குறைந்துள்ளது.
பறவைகள் என்றாலே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தான் நினைவுக்கு வரும். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சரணாலயத்தில், ஆண்டுதோறும் அக்டோபர் பிற்பகுதியில் இருந்து சீசன் தொடங்குகிறது. ஏரியில் பறவைகளின் இருப்பைப் பொறுத்து, மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரை பொதுமக்கள் பார்வைக்காக சரணாலயம் திறந்து வைக்கப்படும்.
இங்கு கூழைக்கடா, கரண்டிவாயன், நத்தைக் குத்தி நாரை, ஊசிவால் வாத்து, சாம்பல் நிற நாரை, வர்ண நாரை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பறவைகள் ஆண்டுதோறும் வருகை தரும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பர்மா, இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்தும் பலவகை பறவைகள் இங்கு வருகின்றன.
2015-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை, வெள்ளம் ஏற்பட்டதால், வேடந்தாங்கல் ஏரிக்கு அதிக அளவில் நீர் வரத்து இருந்தது. அதனால் பறவைகள் வரத்து அபரிமிதமாக இருந்தது. 2016 ஜனவரியில் எடுக்கப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பின்படி, வேடந்தாங்கலுக்கு 80 ஆயிரம் பறவைகள் வந்தன.
ஆனால் கடந்த ஆண்டு, பருவமழை பொய்த்ததால், வேடந்தாங்கல் ஏரிக்கு நீர் வரத்து குறைந்து, பறவைகள் வரத்தும் குறைந்திருப்பது பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வனத்துறையின் சென்னை மண்டல வன உயிரின பாதுகாவலர் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, ‘கடந்த ஆண்டு குறைவான மழை கிடைத்தாலும், வனத்துறை சார்பில் வேடந்தாங்கல் ஏரிக்கான வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு இருந்ததால், போதிய அளவு நீர் கிடைத்துள்ளது. அதன் காரணமாக ஓரளவு பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்து வருகின்றன.
கடந்த மாதம் எடுக்கப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் 16 ஆயிரத்து 100 ஆயிரம் பறவைகள் வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் அதிக அளவில் சாம்பல் நிற நாரை, நத்தை குத்தி நாரை, சிவப்பு அரிவாள் மூக்கன், வெண் கொக்கு, நீர்காகங்கள், இராக்கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்டவை வந்துள்ளன’ என்றார்.
மற்றொரு வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘பறவைகள் அதிக அளவில் வரவேண்டும் என்றால், ஏரியில் நீர் நிறைந்திருந்தால் மட்டும் போதாது. அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகளிலும் தண்ணீர் இருக்க வேண்டும். சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயமும் நடைபெற வேண்டும். அப்போது தான் பறவைகளுக்கு இரை கிடைக்கும். பறவைகளும் அப்பகுதியில் வாழ விரும்பும்’ என்றார். பறவைகள் வரத்து குறைந்திருப்பது, பறவை ஆர்வலர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT