Last Updated : 07 Aug, 2016 12:37 PM

 

Published : 07 Aug 2016 12:37 PM
Last Updated : 07 Aug 2016 12:37 PM

விவசாயிகளை வளமாக்கும் தலைவாசல் மார்க்கெட்; மாவட்ட நிர்வாகம் மனது வைத்தால் வளர்ச்சி பெறும்

தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட், தமிழகத்தின் முக்கிய காய்கறி சந்தைகளில் ஒன்று. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான விவசாயிகள் கத்தரிக்காய், தக்காளி, வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு நாட்டு ரக காய்களையும், உருளைக் கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பலரக வெளிநாட்டின காய்கறிகளையும், பல்வேறு வகை பழங்களையும் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

சேலம், ஈரோடு, கோவை, விருத்தா சலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மற்றும் பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வியாபாரி களும், அவர்களது முகவர்களும் தலைவாசல் சந்தையில் மூட்டை மூட்டையாக காய்கறிகளை வாங்கி, தங்கள் நகருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தூர், ஊனத்தூர், வேப்ப நத்தம், சிறுவாச்சூர், மணிவிழுந்தான் காலனி, சிவசங்கராபுரம், அண்ணாநகர், பாரதிநகர், பட்டுத்துறை, சார்வாய், காமக்காபாளையம், வேதநாயகபுரம், தியாகனூர், ஆறகளூர், சித்தேரி, கோவிந் தம்பாளையம், வீரகனூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்தும் அண்டை மாவட்டங்களான விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகளால் தலைவாசல் மார்க்கெட்டுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை கொண்டு வரப்படுகின்றன.

அறுவடைக் காலங்களில் தினமும் 100 டன் தக்காளியும், கத்தரிக்காய், பச்சை மிளகாய், வெங்காயம், வெண்டைக்காய், உள்ளிட்டவை தலா 50 டன்னுக்கும் அதிகமாக விற்பனைக்கு வரும். மேலும், புடலை, அவரை, பீர்க்கன்காய், சுரைக்காய், முள்ளங்கி, கருணைக்கிழங்கு என பல்வேறு நாட்டுரக காய்கறிகள் டன் கணக்கிலும், கீரைகள், கருவேப்பிலை, வாழைத்தார்கள், தேங்காய்கள் உள்பட முக்கிய காய்கறிகள் அனைத்தும் அதிகளவில் விற்பனைக்கு வரும். தினமும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு இங்கு வியாபாரம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தலைவாசல் மார்க்கெட், சுற்றுவட்டாரத்தின் 40-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளின் முக்கிய வளர்ச்சி ஆதாரமாக இருக்கிறது. மேலும் ஏராள மான வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு வருமானத்தை கொடுக்கும் தொழில் கேந்திரமாகவும் உள்ளது. தமிழகத்தின் 10-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களுக்கு தேவைப்படும் காய்கறிகளை விநியோகம் செய்யும் மையமாக தலைவாசல் மார்க்கெட் இருந்து வருகிறது. விவசாயிகள், வியாபாரி கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் வாழ்வாதாரத்தை வழங்கி வரும் தலைவாசல் மார்க்கெட்டின் வளர்ச்சியில் அரசு நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குறிப்பாக, அடிப்படை வசதிகள் முழுமையாக இல்லாதது இங்கு வந்து செல்லும் அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது. விவசாயிகள் காய்கறி மூட்டைகளை வைத்து, விலை நிர்ணயம் செய்வதற்கு ஏற்ற விற்பனை கூடங்கள் அமைத்து தர வேண்டும். மழை பெய்தாலும் வெயில் கொளுத்தினாலும் எல்லாம் திறந்தவெளி வியாபாரம் தான். நீண்ட தொலைவில் இருந்து வரும் விவசாயிகள், வியாபாரிகள் ஓய்வாக அமருவதற்கு ஓய்வறைகள் கட்டித்தரலாம். பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, குளியலறை வசதிகள் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் தொடர்கிறது.

சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, மார்க்கெட்டுக்கு வந்து செல்ல, பேருந்து வசதி வேண்டும். மார்க்கெட்டில் லாரி, டெம்போக்களை நிறுத்தி வைக்க முறை யான இடவசதி அமைத்து தரலாம். அரசு சார்பில் எடை அளவைகள் வைக்கப்பட வேண்டும்.

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வரும் இந்த மார்க்கெட்டில், அவர்களது வருமானத்தை நிலைப்படுத்தி கொடுக்கக்கூடிய உள்கட்டமைப்பு வசதி கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது. மாவட்ட அளவில் காய்கறி விலை களை நிர்ணயித்துக் கொடுக்க அரசு நிர்வாக அமைப்பு ஏற்படுத்த வேண்டும். காய்கறி களின் விலை ஏற்றமும் இறக்கமுமாக இருக்கும் நிலையில், சில நாட்களில் உற்பத்தி செலவை விட, விற்பனை விலை குறைந்து போவதுண்டு.

குளிர்பதனக் கிடங்கு

இருள் பிரியாத அதிகாலையில் இருசக்கர வாகனங்களில் காய்கறி மூட்டைகளை கட்டிக்கொண்டு, வயல் வரப்புகளைக் கடந்து, குண்டும் குழியுமான கிராமத்து சாலைகளில் சாகசமாக பயணித்து, மார்க்கெட்டுக்கு வந்து சேரும் விவசாயிகள், இடுபொருட்களுக்கு செல வழித்த தொகை கூட, காய்கறிகளுக்கு கிடைக்குமா என்ற ஏக்கம் பிறக்கும். அறுவடை செய்த காய்களை, அளவிட முடியாத சிரமத்துடன் சுமந்து வந்துவிட்ட பின்னர் மீண்டும் வயலுக்கு எடுத்துச் செல்வது வீணான வேலை என்பதால், வேறுவழியின்றி வந்த விலைக்கு விற்றுச் செல்லும் அவலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக, குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை எட்டாக்கனியாகவே தொடர்கிறது.

பயிற்சி வசதி

விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தி வரும் தமிழக அரசு, தலைவாசல் வட்டார விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட செலவின்றி விவசாயம் செய்யும் ஜீரோ பட்ஜெட் விவசாய முறை, இயற்கை விவசாய தொழில்நுட்பம் ஆகியவற்றை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறிகளை, மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி விற்பனை செய்யக்கூடிய தொழிற் சாலைகளை அரசு சார்பில் நிறுவ வேண்டும் என்பது விவசாயிகள், மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோள்.

இடப்பற்றாக்குறைதான் முதல் பிரச்சினை

தலைவாசல் மார்க்கெட்டின் இடப்பற்றாக்குறை குறித்து தலைவாசல் ஏரி நீர்ப்பாசன சங்கத் தலைவர் கணேசன் கூறியதாவது:

போதுமான இடவசதி இல்லாமையால் தான், விவசாயிகளுக்கான அடிப்படை வசதிகளை கூட, அரசினால் செய்து தர முடியாத நிலை உள்ளது. தலைவாசல் மார்க்கெட் தற்போது 5 ஏக்கர் பரப்பில் செயல்பட்டு வருகிறது. கடுமையான இடப்பற்றாக்குறை நிலவும் நிலையில், மார்க்கெட்டை ஒட்டி அமைந்துள்ள ஏரியின் மேடான கரை பகுதியில் 1.60 ஏக்கர் நிலத்தில் மார்க்கெட்டை விரிவுபடுத்தவும், அதற்கு ஈடாக ஏரியுடன் இணைந்து அமைந்துள்ள கோயில் மானிய நிலத்தில் 3 ஏக்கர் நிலத்தினை ஏரியின் நீர்பிடிப்பு பகுதியாக மாற்றவும் தமிழக அரசு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியது.இதற்கான நிதி ஆதாரத்தை வழங்க தலைவாசல் ஊராட்சி நிர்வாகம் உறுதுணையாக இருக்கிறது. இந்த மாற்றத்தை செயல்படுத்திவிட்டால், தலைவாசல் மார்க்கெட்டின் இடப்பிரச்சினை முழுமையாக தீர்ந்து, அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்க முடியும். இதற்கு உறுதுணையாக கள்ளக்குறிச்சி எம்பி, கெங்கவல்லி எம்எல்ஏ ஆகியோர் இருக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த திட்டத்தில் அக்கறை செலுத்தினால் பலநூறு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x