Published : 26 Nov 2013 02:46 PM
Last Updated : 26 Nov 2013 02:46 PM

சிவாஜி சிலை விவகாரம்: தமிழக அரசு மீது ராமதாஸ் சந்தேகம்

சிவாஜி கணேசன் சிலையை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு கூறியிருப்பதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளதோ என்ற சந்தேகம் எழுவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், சென்னை கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை அகற்றக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சென்னை கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உருவச் சிலையை அங்கிருந்து அகற்றலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அரசின் இந்த புதிய நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகின் அடையாளமாக திகழ்ந்தவர். சத்ரபதி சிவாஜி வேடத்தில் சிறப்பாக நடித்ததால் சிவாஜி என்ற பட்டத்தை தந்தைப் பெரியாரிடமிருந்து பெற்றவர். வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத் தலைவர்களை நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர்.

பிரான்ஸ் அரசின் செவாலியே விருதையும், இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்று தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்தவர். சிறப்பாக நடிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்பவர். தமது சிறப்பான நடிப்பால் என்னைப் போன்ற ஏராளமான ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தவர்.

இத்தனை பெருமைகளைக் கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு செய்யும் வகையில் தான் அவரது உருவச் சிலை கடந்த 2006-ஆம் ஆண்டில் அவரது நினைவு நாளான ஜூலை 21 ஆம் தேதி கடற்கரைச் சாலையில் திறந்து வைக்கப்பட்டது.

அப்போதே சிவாஜி சிலையை திறப்பதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தடை விதிக்க மறுத்து விட்டனர். அதன்பின் 7 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் 23 ஆம் தேதி இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் சார்பில் நேர்நின்ற தலைமை வழக்கறிஞர், கடற்கரை சாலையில் சிவாஜி சிலையால் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும், இதனால் சிலையை அகற்றத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.

அடுத்த ஒரு மாதத்திற்குள் சிவாஜி சிலையால் கடற்கரை சாலையில் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதனால் அச்சிலையை அங்கிருந்து அகற்றலாம் என்றும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அமைக்கப்பட்ட பின்னர் கடந்த 7 ஆண்டுகளில் அப்பகுதியில் சொல்லிக் கொள்ளும்படி விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில் சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு கூறியிருப்பதைப் பார்க்கும்போது இதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் உள்ளதோ என்று தான் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக எந்த அமைப்பும் ஏற்படுத்தப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன். ஆனால், சிவாஜி சிலையால் கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் அதை அகற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது.

சிவாஜி கணேசனை சிறப்பிக்கும் வகையில் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்ட சிலையை அகற்றுவது தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் செயலாகவே அமையும். எனவே, சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x