Published : 27 Mar 2017 09:20 AM
Last Updated : 27 Mar 2017 09:20 AM

‘தமிழில் ஒரு நாளிதழ் மட்டுமே வாங்க வேண்டும்’: நூலக ஆணைக் குழுவின் புது உத்தரவால் வாசகர்கள் ஏமாற்றம்

உள்ளூர் முகவர்கள் மூலம் வாங்கக்கூடிய நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களை மிகவும் குறைத்து வாங்க வேண்டும் என்ற பொது நூலகத் துறையின் புதிய உத்தரவு, நூலகர்களுக்கு அதிருப்தியையும் வாசகர்களுக்கு ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட மைய நூலகம், நூலகம், கிளை நூலகம், பகுதி நேர நூலகம், மகளிர் குழந்தைகள் நூலகம், ஊர்ப்புற நூலகம், நடமாடும் நூலகம் என சுமார் 5000-க்கும் மேற்பட்ட நூலகங்கள் தமிழகத்தில் உள்ளன. இவை அனைத்தும், பொது நூலகத் துறையின்கீழ் மாவட்டந்தோறும் உள்ள மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

கோவை மாவட்டத்தில் ஒரு மாவட்ட மைய நூலகம், 90 கிளை நூலகங்கள், 100 ஊர்ப்புற நூலகங்கள், 14 குழந்தைகள், பெண்கள் நூலகங்கள், 56 பகுதி நேர நூலகங்கள், 3 சிறப்புப் பகுதி நேர நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களுக்கெல்லாம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2017- 2018-ம் ஆண்டுக்கான நாளிதழ்கள், பருவ இதழ்கள் உள்ளூர் முகவர்கள் வழியே வாங்கிக்கொள்வது தொடர்பாக ஓர் உத்தரவு அனுப்பப் பட்டுள்ளது.

அதன்படி, நாளிதழ்களில் காலையில் தமிழ் நாளிதழ் ஒன்றும் (சில நாளிதழ் களின் பெயர்களைக் குறிப்பிட்டு) மாலையில் ஒரு நாளிதழும் (மாலை நாளிதழின் பெயரைக் குறிப்பிட்டு) வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஆங்கிலத்தில் சில நாளிதழ்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, இதில் ஏதாவது ஒன்று மட்டும் வாங்கலாம் என்றும், தமிழ் வார இதழ், மாத இதழ், ஆங்கில வார இதழ், மாத இதழ்களில் எதை எதை வாங்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிளை நூலகர்கள் சிலர் கூறும்போது, ‘உள்ளூர் முகவர்கள் மூலம் இதுவரை 5 தமிழ், 5 ஆங்கில நாளிதழ்களும், 23 வார - மாத இதழ்களும் வாங்கிக்கொண்டு இருந்தோம். இதைத் தவிர தபாலில்13-க்கும் மேற்பட்ட நாளிதழ்களும், 150-க் கும் மேற்பட்ட வார, மாத இதழ்களும் வந்துகொண்டிருந் தன. முகவர்கள் மூலம் வாங்கும் இதழ்களின் மூலம் அன்றைய செய்தியை அன்றைக்கே நூலகத் தில் படித்துவிட முடியும். தபாலில் வரும் இதழ்கள் 3 நாட்கள் தாமதமாக வருவதால் அதன் பிறகே அதை படிக்க முடியும்.

நிறைய நாளிதழ்கள், வார, பருவ இதழ்கள் வாசிக்க வேண்டும் என்பதற்காகவே வாசகர்கள் நூலகத்தை நோக்கி வருகிறார்கள். இதை இப்படிஒன்றிரண்டாக குறைத்தால்நூலகத்துக்கு எப்படி வாசகர்கள் வருவார்கள்? முகவர் கள் மூலம் வாங்குவதற்கான உத்தரவாக மட்டுமே இது வந்துள் ளது. இனி தபால் வழியே வரும் இதழ்கள் எத்தனை குறையும், கூடும் என்பது தெரியவில்லை. இதை முன்வைத்து நூலக வாசகர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்’ என்றனர்.

இதுகுறித்து நூலகத்துறை அலு வலர் ஒருவரிடம் கேட்டபோது, ‘தமிழகம் முழுவதும் அனைத்து நூலகங்களுக்கும் இந்த ஆணை வந்துள்ளது. அதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுள்ளோம். இந்த உத்தரவை திருத்தி இந்த மாத இறுதிக்குள், வேறு உத்தரவு வரும் எனக் கூறியுள்ளனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x