Published : 12 Jul 2016 02:05 PM
Last Updated : 12 Jul 2016 02:05 PM
திருச்சி விமானநிலையத்தின் பாதுகாப்பு, கண்காணிப்பை அதிகரிக்கும் வகையில் சரக்கு முனையம், வாகன நிறுத்துமிடங்களில் 62 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு நாள்தோறும் விமானசேவை அளிக்கப்பட்டு வருகிறது. 2015-16-ம் ஆண்டில் மட்டும் 11 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் இந்த விமானநிலையம் வழியாக பயணம் செய்துள்ளனர். நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த விமானநிலையத்தின் வழியாக, பிற மாவட்டங்களுக்கு விரைவில் சென்றுவிட முடியும். எனவே பிரதமர், முதல்வர், ஆளுநர், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இதனால் நாட்டிலுள்ள பதற்றத்துக்குரிய (சென்சிடிவ்) விமானநிலையங்களின் பட்டியலில் திருச்சியும் இடம் பெற்றுள்ளது.
எனவே பழைய, புதிய முனையங்கள் (டெர்மினல்கள்), முகப்பு கோபுரங்கள், வழியனுப்ப, வரவேற்க காத்திருப்போர் அறை உள்ளிட்ட இடங்களில் சுமார் 65 கேமராக்கள் பொருத்தப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, விமானநிலையத்தின் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக, தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) அதிகாரிகள் அண்மையில் திருச்சி வந்து 3 நாட்கள் முகாமிட்டு ஆய்வு செய்தனர். இந்நிலையில், விமான நிலைய வளாகத்தில் மேலும் 62 இடங்களில் புதிதாக கேமராக்களை பொருத்தி, கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறியபோது, “விமானநிலையத்தின் உட்பகுதி மற்றும் சில முக்கிய இடங்களில் மட்டுமே தற்போது கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வெளிப்பகுதிகளில் போதுமான அளவுக்கு இல்லை. எனவே, கூடுதலாக எந்தெந்த இடங்களில் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பது குறித்து விமானநிலைய இயக்குநர், சிஐஎஸ்எப் துணை கமாண்டன்ட், விமானநிலைய பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய பார்க்கிங் பகுதிகளில் 40 கேமராக்களும், ஆபத்து காலங்களில் விமானத்தை நிறுத்தி வைக்கக்கூடிய ஐசோலேசன் பார்க்கிங் பகுதியில் ஒரு கேமராவும், சரக்கு முனைய வளாகத்தில் 21 இடங்களில் என மொத்தம் 62 கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்த விரிவான அறிக்கை இந்திய விமானநிலைய ஆணையக் குழுமத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அனுமதியைப் பெற்று, கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT