Published : 16 Jan 2014 12:00 AM
Last Updated : 16 Jan 2014 12:00 AM

சென்னையில் பெருகிவரும் தனியார் பார்க்கிங் மையங்கள்- லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவருகிறது

சென்னையில் நிலவும் இடநெருக்கடி காரணமாக பழைய வீடுகளை இடித்துவிட்டு, பார்க்கிங் மையங்களாக மாற்றும் போக்கு அதிகரித்து வருகிறது. கார்கள் நிறுத்த வசதியில்லாமல் சிரமப்படுவோரைக் குறிவைத்து தனியார் சிலர் பார்க்கிங் மையங்களை அமைத்து லாபம் கொழிக்கின்றனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்றால் பிரதான சாலைகளில் ஓடும் வாகனங்களுக்கு மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி யில்லை, போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலைகள், தெருக்கள், சந்துகள் இல்லையென்றே சொல்லலாம்.

இரண்டு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித் திருப்பதாலும், அதற்கேற்ப வீடுகள், அடுக்குமாடி குடியிருப்

புகளில் பார்க்கிங் வசதி இல்லாததாலும், தெருக்களில் வாகனங்களை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

செல்வந்தர்கள் மட்டுமல்லால் நடுத்தர வர்க்கத்தினரும் இப்போது கார்களை விரும்பி வாங்குகின்றனர். இருப்பினும், கார் நிறுத்த இடமில்லாததால், தெருவோரங்களில் நிறுத்து கின்றனர். இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை.

கார்களில் கிறுக்கப்படுவதும், கண்ணாடிகள் உடைக்கப்படுவதும் சகஜமாகிவிட்டது. இவர்கள் நிலை இப்படியிருக்க, சாலையில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் எளிதில் திருட்டு போவதும் வாடிக்கையாகிவிட்டது.

இதனால், கொஞ்சம் பணம் போனாலும் பரவாயில்லை, அருகில் உள்ள தனியார் பார்க்கிங்கில் வாகனங்களை பாதுகாப்பாக விடலாம் என்ற மனப்போக்கு சமீபகாலங்களில் அதிகரித்துவிட்டது.

பார்க்கிங் பிளேஸுக்கு கிராக்கி இருப்பதை தெரிந்து கொண்ட தனியார் நிறுவனங்கள், பழைய வீடுகளை விலைக்கு வாங்கி, அதை இடித்துவிட்டு, பார்க்கிங் பிளேஸாக உருவாக்குகிறார்கள். அதில் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறார்கள்.

"தனியார் பார்க்கிங் பிளேஸில் கார் நிறுத்துவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இருந்தாலும், கார் திருட்டு போகாமலும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கு பார்க்கிங் வசதிதான் சிறந்தது. ஆனால், இது போன்ற தனியார் பார்க்கிங்குகளை முறைப்படுத்தி, நியாயமான கட்டணம் நிர்ணயிக்க மாநகராட்சி முன்வரவேண்டும்" என்கிறார் “தேவை” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ.

சென்னையில் புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, பெரம்பூர், ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம், துறைமுகம் உட்பட பல இடங்களில் பழைய வீடுகள் இடிக்கப்பட்டு பார்க்கிங் பிளேஸ்களாக மாற்றப்படுகின்றன.

புரசைவாக்கம், வைக்கோல் காரன் தெருவில் வேம்படி விநாயகர் கோவில் அருகில் தனியார் பார்க்கிங் பிளேஸ் உள்ளது. அங்கு கார் நிறுத்த விரும்புவோர் தொடர்பு கொள்ள தொலைபேசி எண், செல்போன் எண் எழுதப்பட்ட அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஒரு கார் நிறுத்துவதற்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரமும், முன்பணமாக ரூ.5 ஆயிரமும் வசூலிக்கப்படுகிறது. இங்கு இப்போது ஹவுஸ்புல். இதுபோல ஏரியாவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கிறார்கள்.

மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்திக் கொடுத்து, நியாயமான கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது கார் வைத்திருப்போரின் கோரிக்கை.

மாநகராட்சி பராமரிப்பில் உள்ள மேம்பாலங்களின் கீழ்பகுதி குப்பை கொட்டும் இடமாக உள்ளது. தனியாரும் ஆக்கிரமித்துள்ளனர். அந்தந்த பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் தங்களது சொந்தமான பார்க்கிங் போல மேம்பாலப் பகுதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய இடங்களில், மாநகராட்சியே பார்க்கிங் வசதி செய்து கொடுக்கலாம். இடவசதிக்கு ஏற்ப டூவீலர் பார்க்கிங் அல்லது கார் பார்க்கிங் அமைக்கலாம். இதன்மூலம் மாநகராட்சி வருமானமும் அதிகரிக்கும். மக்களும் தங்கள் வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

இதைப்போல, ஆங்காங்கே இருக்கும் மாநகராட்சி இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தினால், பொதுமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும். கூடுதல் வருவாயை அந்தந்தப் பகுதி மேம்பாட்டுக்கே மாநகராட்சி பயன்படுத்தலாம்.

பல லட்சம் செலவு செய்து புதிய கார் வாங்குபவர்கள் தனியார் நடத்தும் பார்க்கிங் பிளேஸுக்கு நடையாய் நடக்கிறார்கள். அதனால், பழைய வீடுகளை விலைக்கு வாங்கி, இடித்துவிட்டு “பார்க்கிங் பிளேஸ்” உருவாக்கும் போக்கு சென்னையில் பரவலாக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x