Published : 20 Aug 2016 07:24 PM
Last Updated : 20 Aug 2016 07:24 PM

குண்டு எறிதல் வீராங்கனையின் ஒலிம்பிக் கனவு நிறைவேறுமா?- உதவி செய்ய அரசுக்கு வேண்டுகோள்

தமிழக அரசு நிதிஉதவி அளித்து ஊக்கப்படுத்தினால் என்னால் சிறப்பாக செயல்பட்டு 2020-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கட்டாயம் பதக்கம் வெல்வேன் என்கிறார் கௌரி சங்கரி.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த குண்டு எறிதல் வீராங்கனையும் மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவியுமான கௌரி சங்கரி (19) பொருளாதார உதவி இல்லாததால் முறையான பயிற்சி எடுக்க முடியாத சூழலில் கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

இந்த தகவல் அறிந்ததும் பரமக்குடியில் தி இந்து செய்தியாளர் கௌரி சங்கரியை சந்தித்துப் பேசியபோது, ''கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 29 அன்று சீனாவின் யுகாங் நகரில் நடைபெற்ற ஆசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் 13.82 மீட்டர் தூரம் குண்டு எறிந்து தங்கப் பதக்கம் வென்று முதலிடம் பெற்றேன். அதற்கு முன்னதாக தேசிய அளவில் பெங்களூரு, கொச்சியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான குண்டு எறிதல் போட்டிகளில் தங்கப் பதக்கமும், ராஞ்சியில் இரண்டு முறை வெள்ளிப் பதக்கமும், திருவனந்தபுரத்தில் வெண்கலப் பதக்கமும் பெற்றேன். இதனடிப்படையில் விளையாட்டுக்கானா ஒதுக்கீட்டின் படி சிவகங்கை மருத்துக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறேன்.

அப்பா அன்றாட கூலி வேலைக்கு செல்பவர். சிவகங்கையில் மருத்துவ கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம் உள்ளிட்டவைகளை அப்பா வட்டிக் கடன் பெற்று தான் செலுத்தினார். தற்போதைய குடும்பம் தொடர்ந்து என்னால் குண்டு எறிதல் பயிற்சி செய்ய முடியவில்லை. இதற்காக முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி மற்றும் பயிற்சியாளர் அவசியம்.

சீனாவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் கலந்து கொள்ளக் கூட ஸ்பான்சர்ஸ் கிடைக்க வில்லை. நான் சீனா செல்ல வாங்கிய கடனை அடைப்பதற்குள் அப்பா மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டார்.

தமிழக அரசு நிதிஉதவி அளித்து ஊக்கப்படுத்தினால் என்னால் சிறப்பாக செயல்பட்டு 2020-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கட்டாயம் பதக்கம் வெல்வேன்'' என்றார்.

வீராங்கணை கௌரி சங்கரியின் தந்தை ஜெயமூர்த்தியின் தொலைபேசி எண்: 9677838380

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x