Published : 06 Apr 2017 01:53 PM
Last Updated : 06 Apr 2017 01:53 PM
தமிழகம் முழுவதுமே வெப்பம் வாட்டினாலும் ஆர்.கே.நகரில் தேர்தல் வெப்பமும் சேர்ந்து கொண்டு அனல் பறக்கிறது. எங்கு பார்த்தாலும் கரைவேட்டிக்ளும் பிரச்சார வேன்களும் தான்.
அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ.மதுசூதனன் 'தி இந்து' (தமிழ்) இணையதளத்துக்காக பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
ஆர்.கே;நகர் இடைத்தேர்தல், சசிகலா குடும்பத்தினர் கட்சியின் மீது செலுத்தும் ஆதிக்கம், ஓ.பன்னீர்செல்வத்தின் நிர்வாகத் திறமை, ஸ்டாலினின் அரசியல் எனப் பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
ஆர்.கே.நகரில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் எங்கள் அணியே வெற்றி பெறும். எங்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆட்சியைப் பிடிக்க துடிக்கிறார் தினகரன். ஆனால், இந்தத் தேர்தலில் டிடிவி. தினகரன் டெபாசிட் இழப்பது உறுதி.
எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?
அ.தி.மு.க- வை எம்.ஜி.ஆர். தொடங்கியதும் 1973-ல் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அ.தி.மு.க. சார்பில் கே.மாயத்தேவரும், தி.மு.க. சார்பில் பொன்.முத்துராமலிங்கமும் போட்டியிட்டனர். திமுகவினர் பணபலத்தையும், அதிகார பலத்தையும் கட்டவிழ்த்துவிட்டனர். கருணாநிதி அவரது முழு பலத்தையும் பயன்படுத்தினார். ஆனால், அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை. அதிமுகவின் மாயத்தேவர் வெற்றி பெற்றார்.
அன்றைக்கு கருணாநிதி எப்படி பணபலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தை மீறியும் செயல்பட்டாரோ அதேபோலவே இன்று தினகரன் செயல்படுகிறார்.
அன்றைய காலகட்டத்தில் திமுகவுக்கு டெபாசிட்டாவது கிடைத்தது. ஆனால், இத்தேர்தலில் தினகரன் டெபாசிட் இழப்பது உறுதி. அதன் பின்னர்தான் போயஸ் தோட்டத்திலிருந்தும் அதிமுகவிலிருந்து சசிகலா, தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி கும்பல் விரட்டியடிக்கப்படுவார்கள்.
அப்படியென்றால் வேதா நிலையத்தை மீட்டெடுப்பீர்களா?
வெகு நிச்சயமாக. வேதா நிலையம் ஜெயலலிதாவின் தேவாலயம். அந்த இல்லத்தை மீட்டெடுப்போம். ஜெயலலிதாவின் காரில் அமரும் அறுகதை யாருக்கும் இல்லை.
நீங்கள்தானே சசிகலாவின் கரங்களைப் பற்றி பொதுச் செயலாளராக வேண்டும் என வலியுறுத்தினீர்கள்? அப்போது அவர்கள் மன்னார்குடி கும்பலாகத் தெரியவில்லையா?
ஆமாம். நான் அதை மறுக்கவில்லை. சசிகலாவை மட்டும்தானே கேட்டுக் கொண்டேன். ஆனால், அவர் பொதுச் செயலாளராக ஆன பிறகு ஒட்டுமொத்த மன்னார்குடி கும்பலும் போயஸ் தோட்டத்துக்குள் நுழைந்துவிட்டதே. அன்றைய தினம் நான் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கூறியதற்கும் காரணம் இருக்கிறது. தம்பிதுரை, செங்கோட்டையன் என பலரும் பொதுச் செயலாளர் பதவியை அடையத் துடித்துக் கொண்டிருந்தனர். பலரும் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், ஜெயலலிதாவால் இரும்புக் கோட்டைபோல் காக்கப்பட்ட கட்சிக்கு பாதகம் வரக்கூடாது என்றே சசிகலாவை ஆதரித்தேன். இது ஒரு புறம் இருந்தாலும் சசிகலாவை பொதுச் செயலாளராக முன்னிறுத்த எனக்கு வற்புறுத்தல் இருந்தது.
இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்கும் பணபலத்துக்குமே மவுசு என்ற நிலை குறித்து உங்கள் கருத்து?
இன்றைய நிலை அப்படியில்லை. சசிகலா என்பவருக்கும் அதிமுகவுக்கும் என்ன தொடர்பு. ஜெயலலிதாவால் எந்த சூழ்நிலையிலும் அரசியலில் அடையாளம் காட்டப்படாதவர் சசிகலா. அதேபோல், தினகரன் உள்ளிட்டோரையும் ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்படாதவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கும்?
தொகுதிக்குள் பணப்பட்டுவாடா நடைபெறுகிறதா?
நிச்சயமாக நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கெல்லாம் வீடுவீடாகச் சென்று கதவைத் தட்டி பணம் விநியோகிக்கிறார்கள் என்று உறுதியான தகவல் கிடைத்திருக்கிறது. தினகரன் அணியினர் ஓட்டுக்கு ரூ.4000 வீதம் கொடுத்துவருகின்றனர். போலீஸ் உடையில் சென்று பணப் பட்டுவாடா நடைபெறுகிறது. 4000 ரூபாய் வியாபாரியாகிவிட்டார் தினகரன்.
சின்னம் பார்த்து வாக்களித்து பழக்கப்பட்டவர்கள் நம் மக்கள்.. இரட்டை இலை சின்னம் இப்போது முடக்கப்பட்டிருக்கிறதே?
சின்னம் பார்த்து வாக்களிப்பவர்கள் என்பது உண்மையே. ஆனால், இந்த சின்னம் முடக்கப்பட்டதற்கு காரணமே தினகரன் தான். உண்மையான அதிமுக தொண்டர் யாரும் தினகரனை, சசிகலாவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியா.. இல்லை தினகரன் அணியா என்றே மக்கள் பார்ப்பர்.
சின்னத்தை மீட்டெடுப்பீர்களா?
இத்தேர்தலில் வெற்றி பெற்று சின்னத்தை வசப்படுத்துவோம். அதுதான் நாங்கள் ஜெயலலிதாவுக்கு செய்யும் மரியாதை. சின்னத்தை வைத்து சசிகலா குடும்பத்தினர் வியாபாரம் செய்கின்றனர்.
தினகரனைத் தான் நேரடி போட்டியாளராகக் கருதுகிறீர்களா?
எங்களுக்கு நேரடி போட்டி திமுக மட்டும்தான்.
ஓபிஎஸ் அணியை பாஜக இயக்குகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறதே?
ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்காக பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்பிரச்சினைக்கு தீர்வு கண்டார். இதற்காக அவரை பாஜக ஆதரவாளர் என எப்படிக் கூறுவீர்கள். அண்மையில் எடப்பாடி பழனிசாமிகூட பிரதமர் மோடியை சந்தித்தார். கையைப் பிடித்து பேசினார். அப்படியென்றால் அவர் பாஜகவில் இணைந்துவிட்டார் என்று அர்த்தமா?
ஓபிஎஸ் ஒரு சிறந்த நிர்வாகி. அமைதியானவர், பொறுமையானவர். ஒரு தலைவருக்கான எல்லா தகுதியும் அவரிடம் இருக்கிறது. அதனால்தான் ஜெயலலிதாவே இரண்டு முறை ஓபிஎஸ்.ஸை முதல்வராக முன்னிலைப்படுத்தினார். அவர் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமையும்.
அப்போதும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கு வலியுறுத்துவீர்களா?
நிச்சயமாக. சாதாரண விசாரணை அல்ல சிபிஐ விசாரனைக்கு வலியுறுத்துவோம். தேவைப்பட்டால் இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர், குடியரசுத் தலைவரை சந்தித்தும் மனு கொடுப்போம்.
ஜெ. மரணம் குறித்த விசாரணையில் ஓபிஎஸ்.ஸையும் இணைக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?
இது தேவையில்லாத குற்றச்சாட்டு. அப்படிப் பார்த்தால், எனக்குக்கூட ஒரு சந்தேகம் இருக்கிறது. கருணாநிதியை அறைக்குள் பூட்டிவைத்துவிட்டு ஸ்டாலின் அரசியல் செய்கிறார். இதை நான் சொல்லவில்லை. அவரது சகோதரர் அழகிரிதான் சொல்கிறார். இதற்கு, ஸ்டாலின் சொல்லும் பதில் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள்.
மீண்டும் இந்தி எதிர்ப்பு கோஷங்கள் வலுத்துள்ளனவே?
இப்போதெல்லாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை யாரும் முன்னெடுக்க தயாராக இல்லை. காரணம் யாருக்கும் போராடும் மனநிலையும் இல்லை, சிறை செல்லும் மனநிலையும் இல்லை.
மைல் கற்களில் இந்தியில் பெயர் எழுதுவதற்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே?
எல்லாம் நாடகம். கருணாநிதி குடும்பத்தில் இந்தி தெரியாதவர் யாரும் இல்லை. இப்போது மைல்கற்களில் இந்தி திணிப்பை எதிர்க்கிறார்களே, அன்று திமுக மத்தியில் கூட்டணியில் இருந்தபோதுதானே இந்தத் திட்டமே வகுக்கப்பட்டது. உண்மை என்னவென்றால், அப்போது ஜெயலலிதா பிரதமருக்கு இதுகுறித்து ஒரு கண்டன கடிதத்தை அனுப்பினார். தேர்தல் வரும்போது இவர்கள் இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கிறார்கள்.
இந்த இடைத்தேர்தலில் உங்கள் திட்டங்கள் என்ன? பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல், தண்ணீர் தட்டுப்பாடு, கொடுங்கையூர் குப்பை கிடங்கு என பிரச்சினைகள் குவிந்து கிடக்கிறதே?
நான் இந்தப் பகுதியைச் சேர்ந்தவன். எனக்கு இங்குள்ள ஏழை மக்களின் பிரச்சினைகள் நன்கு தெரியும். ஒரு காலத்தில் கொருக்குப்பேட்டைக்கும் இப்பகுதிக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. எனது முயற்சியில்தான் வைத்தியநாதன் மேம்பாலம் கட்டப்பட்டது. கொடுங்கையூர் - எழில்நகர் இணைப்புப் பாலம், எண்ணூர் பகுதியில் கான்க்ரீட் சாலைகள் அமைக்கப்பட்டது. கே.என்.எஸ். டெப்போ என்ற பகுதி ஒரு காலத்தில் குப்பை மேடாக இருந்தது. இப்போது அப்பகுதியில் 6 அடுக்குமாடி கட்டிடங்கள் பல இருக்கின்றன. அந்தப் பகுதியை நூறு சதவீதம் சமன்படுத்தி அதை வசிப்பிடமாக மாற்றி, குடியிருப்புகள் அமைக்கச் செய்தேன். தொகுதி மக்களுக்காக ஜெயலலிதாவிடம் முறையிட்டு வாங்கினேன். படேல் நகரில் குடிநீரேற்று நிலையம் அமைத்துக் கொடுத்தேன்.
இன்னும் பல திட்டங்கள் இருக்கின்றன. இத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தொகுதி மக்களுக்காக இன்னும் நிறைய செய்வேன். மொபைல் எம்.எல்.ஏ. அலுவலகம் அமைக்கப்படும். தொகுதி மக்களின் குறைகளை சேகரித்து உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுசூதனன் அதிமுக தலைமையுடன் நெருக்கமாக இருந்தார். அதனால், அவர் நினைத்திருந்தால் இத்தொகுதிக்கு இன்னும் நிறைய செய்திருக்கலாம் என்று மக்கள் கூறுகின்றனர்..
ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்தேன் என்பது உண்மையே. அதன் அடிப்படையிலேயே தொகுதி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வந்தேன். ஆனால், 1996 தேர்தலின் போதே சசிகலா குடும்பத்தால் ஓரங்கட்டப்பட்டேன். ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர்களையெல்லாம் குறிவைத்து பிரிப்பதையே சசிகலா இலக்காகக் கொண்டிருந்தார். இப்போது நிலைமையே வேறு. இந்தத் தேர்தலில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், தொகுதி மக்கள் பிரச்சினைகளை நிச்சயம் தீர்ப்பேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT