Published : 07 Nov 2013 08:49 PM
Last Updated : 07 Nov 2013 08:49 PM
தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திட்டமிட்ட நாளுக்கு முன்னதாகவே புதன்கிழமை திறக்கப்பட்டது.
இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009-ம் நடைபெற்ற போரின்போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக, தஞ்சாவூர்- திருச்சி நான்குவழிச் சாலையோரத்தில் உள்ள விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை விளக்கும் வகையில் முழுவதும் கருங்கற்கள் கொண்டு வடிக்கப்பட்ட சிற்பங்கள், போரை நிறுத்த வலியுறுத்தி உலகத்தின் பல பகுதிகளில் தீக்குளித்து உயிரிழந்த தமிழர்களின் சிற்பங்கள், ஓவியங்கள், தமிழுக்குத் தொண்டு செய்தவர்களின் அரிய புகைப்படங்களைக் கொண்டு இந்த நினைவு முற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நவம்பர் 8-ல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் எனவும், உலகம் முழுவதிலுமிருந்து தமிழறிஞர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், திறப்பு விழா நிகழ்ச்சிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததோடு, இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களையும் மிரட்டி வந்துள்ளனர். இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திறப்பு விழாவுக்கு அனுமதி கோரி செய்த முறையீட்டை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிமன்றம், திட்டமிட்ட நாளில் நிகழ்ச்சியை நடத்த அனுமதியும் பாதுகாப்பும் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், புதன்கிழமை காலை 11 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்புக்காக அழைக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள், ஆதரவாளர்கள் முன்னிலையில் பழ. நெடுமாறன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் ம. நடராஜன், தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலர் பெ. மணியரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, இந்த நினைவு முற்றத்தை திறக்கவிடாமல் செய்வதற்கு காவல் துறையால் ஏற்பட்ட இடையூறுகள், மிரட்டல்களிலிருந்து பாதுகாப்பு கோரியும், திட்டமிட்டபடி திறப்பு விழா நடைபெற அனுமதி கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்து அனுமதி பெற்ற விவரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் வழக்குரைஞருமான ஏ. நல்லதுரை விளக்கினார்.
பின்னர் பழ. நெடுமாறன் அளித்த பேட்டி: "மூன்றாண்டு காலமாக, உலகத் தமிழர்களின் உதவியுடன் இந்த முற்றத்தின் வேலைகள் சிறப்பாக நடந்து வந்தன. இரவு பகலாக பெரும் உழைப்பைச் செலுத்தி இந்த முற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கு கண்டனம் இந்த நினைவிடம் யாருக்கும் எதிரானது அல்ல. தமிழர்களின் ஒப்பற்ற கலைக்கோயில் இது.
ஆயிரக்கணக்கானோரின் ஒத்துழைப்பு, கூட்டு முயற்சியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை இடிக்க வேண்டும், தகர்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்படும் மத்திய உளவுத்துறையின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து தமிழக காவல்துறை நடந்துகொண்ட விதத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். எதிர்ப்பவர்கள் துரோகிகள் முள்ளிவாய்க்காலில் சிங்கள ராணுவ வெறியர்களால் ஈவுஇரக்கம் இல்லாமல் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களின் நினைவுச் சின்னமான இது, உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் வந்து வழிபடும் இடமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவிடத்துக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை முள்ளிவாய்க்கால் மக்களின் ஆத்மாவும், முத்துக்குமார் போன்றோரின் ஆத்மாவும் மன்னிக்காது. மத்திய அரசு தமிழர்களுக்கு எதிரான அரசு. அந்த அரசு சொன்னதைக் கேட்டு தமிழக முதல்வர் செயல்படுவது சரியல்ல. இந்த நினைவிடத்துக்கு எதிராக நிர்ப்பந்தம் அளிக்கும் போக்கை கைவிட வேண்டும். இப்போது, அனைவர் முன்னிலையிலும் இந்த நினைவிடம் திறக்கப்பட்டுவிட்டது. வரும் 8,9,10-ம் தேதிகளில் திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் நடைபெறும். அனைத்துக் கட்சித் தலைவர்கள், அறிஞர்கள் பங்கேற்று உரைநிகழ்த்துவர்" என்றார்.
பேட்டியின்போது, "இலங்கையில் சிறுபான்மை தமிழர்களை சிங்கள ராணுவம் இனப்படுகொலை செய்ததுபோலவே, பாஜக ஆளும் குஜராத்தில் 2002-ல் சிறுபான்மை முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அதன் நினைவாக குல்பர்காவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன், அர்ஜுன் சம்பத் போன்றவர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தது முரண்பாடில்லையா" என்று கேட்டபோது, "இது தேவையற்ற கேள்வி. ஏற்கெனவே பலமுறை பதிலளிக்கப்பட்டுவிட்டது. இது, தமிழர்களின் நிகழ்ச்சி என்பதால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குக் காரணமானவர்களையும் துணைபோனவர்களையும் தவிர மற்ற அனைத்துத் தரப்பினரும் அழைக்கப்பட்டுள்ளனர்" என்றார் பழ. நெடுமாறன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT