Last Updated : 30 Aug, 2016 10:10 AM

 

Published : 30 Aug 2016 10:10 AM
Last Updated : 30 Aug 2016 10:10 AM

குடிப்பதற்கும், சமையலுக்கும் மழைநீர் மட்டுமே உபயோகம்: 28 ஆண்டுகளாக பின்பற்றும் முதியவர்

மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஒருவர் தனது குடும்பத் தேவைகளுக்காக குடிப் பதற்கும், சமைப்பதற்கும் மழை நீரை மட்டுமே சேகரித்து 28 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்.

மழை பொழியும் காலங்களில் குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளில் மழைநீரை சேகரித்து வைத்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மழையில்லாத காலங்களிலும் நமக்கு தண்ணீர் கிடைக்கும். இதற்காக கொண்டு வரப்பட்ட அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டம் தற்போது பெரும்பாலும் வீடுகள், அலுவலகங்களில் பயன்பாட்டில் இல்லை. மேலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மை போன்ற காரணங்களாலும் மழை நீரைச் சேகரிக்க முடியாமல் வீணாகக் கடலில் கலந்து வருகிறது. இதனால் மழைக்காலம் முடிந்த சில நாட்களிலேயே, மீண்டும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. குடிப்பதற்குகூட தண்ணீர் கிடைக் காததால் அதிருப்தி அடைந்த மக்கள் அவ்வப்போது சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.

மதுரை வில்லாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்த விமானப் படை மற்றும் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற சேகர் (70) என்பவர், தனது வீட்டிலேயே மழைநீரைச் சேகரித்து கடந்த 28 ஆண்டுகளாக குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார். மாடியிலிருந்து விழும் மழைநீரைச் சேகரித்து வைப்பதற்காக பிரத்யேகமாக தொட்டி ஒன்றை அமைத்துள்ளார்.

இதுகுறித்து சேகர் கூறியதாவது: வங்கியில் பணியாற்றியபோது ஒருநாள் பணி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும், லாரியில் கொண்டு வரப்பட்ட தண்ணீரைப் பிடிப்பதற்காக மக்கள் சாலையில் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து, வீட்டிலேயே மழைநீரை சேகரிக்க முடிவு செய் தேன். அதன்படி, மாடியிலிருந்து விழும் மழைநீரை பாத்திரங்கள் மற்றும் தொட்டியில் சேகரித்தோம். முதலில் வரும் மழை தண்ணீரில் தூசி கலந்திருக்கும். எனவே, முதல் 10 நிமிடங்களுக்கு வரும் தண்ணீரைப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பிறகு கிடைக்கும் தண் ணீரை மட்டுமே சேகரிக்க வேண்டும்.

பிளாஸ்டிக் தொட்டிகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள மழைநீர்.

இதற்காக தனியாகத் தொட்டி கட்டி உள்ளோம். மாடியிலிருந்து வரும் மழைநீர் குழாய் வழியாக நேரடியாக தொட்டிக்குச் சென்றுவிடும். அதேபோல, மழைக்காலங்களில் பிளாஸ்டிக் தொட்டி, பாத்திரங்களில் சேகரித்தோம். சுத்தமான துணியால் தண்ணீர் சேகரித்துள்ள பாத்திரங்களை மூடிவிட வேண்டும். இந்தத் தண் ணீரை கொதிக்க வைத்தே குடித்து வருகிறோம். சமையலுக்கும் இந்த தண்ணீரையே பயன்படுத்து கிறோம். வெளியூர் சென்றாலும், பாட்டிலில் தண்ணீரைக் கொண்டு செல்வேன். நாளொன்றுக்கு ஒரு குடம் தண்ணீர் செலவாகிறது. இதுவரை, ஒருமுறை கூட தண் ணீருக்குப் பற்றாக்குறை வந்தது கிடையாது. மினரல் வாட்டரைவிட மழை நீர் தூய்மையாக இருப்பதால் வெளியிலும் விலைக்கு வாங்கியது கிடையாது.

எப்படியானாலும் தண்ணீர் தீர்வதற்குள் மழை பெய்துவிடும். வெளியூர் செல்லாத நாட்களில் எங்கிருந்தாலும் மழை பெய்தால் வீட்டுக்கு வந்து விடுவேன். பாத்திரம் கழுவிய தண்ணீரைத் தோட்டத்தில் வளர்க்கும் துளசி, செம்பருத்தி, தூதுவளை, தென்னை, வாழை உள்ளிட்ட தாவரங்களுக்கு ஊற்றுகிறோம். சொந்த வீடு வைத்துள்ள ஒவ்வொரு வரும் மழையை நம்பி நமக்கு நாமே என இத் திட்டத்தைச் செயல்படுத்தினால் குடிநீர் பிரச்சினையை சுலபமாக தீர்த்து விடலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x