Published : 14 May 2014 07:44 PM
Last Updated : 14 May 2014 07:44 PM

கூடங்குளம் விபத்து: சார்பற்ற விசாரணை கோருகிறது போராட்டக் குழு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அணு உலைகளின் பாதுகாப்பு தொடர்பாக சார்பற்ற விசாரணை தேவை என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் வலியுறுத்தினார்.



இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கூடங்குளம் அணு உலையில் உயர் அழுத்த வெப்பக் குழாய் வெடித்து 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விஜய்நகரியத்தில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு, பின்னர் நாகர்கோவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இது பற்றி கூடங்குளம் அணு உலை நிர்வாகிகளோ, அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை

கூடங்குளம் அணு உலை விபத்தில் ராஜன், பால்ராஜ், செந்தில்குமார் ஆகிய ஊழியர்களும், வினோ, ராஜேஷ், மகேஷ் ஆகிய ஒப்பந்த தொழிலாளர்களும் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை அளிக்க வேண்டும்.

இந்த விபத்து, எங்களுடைய நீண்ட நாள் முறையீட்டை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. கூடங்குளம் அணு உலைகளில் தரமற்ற உதிரிப்பாகங்களும், உபகரணங்களும் பயன்படுத்தப்படுகிறது என்று தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால், இதை மத்திய, மாநில அரசுகள் மற்றும் அணுசக்தி துறை கண்டுகொள்ளவில்லை.

கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பு மிக்கது, உலகத் தரம் வாய்ந்தது என்று மத்திய அரசு, அதிகாரிகளும் இந்த விபத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதைக் கேட்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், கூடங்குளம் அணு மின் நிலையப் பாதுகாப்பு தொடர்பாக சார்பற்ற அறிவியல் குழு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், புதிய அரசு பொறுப்பேற்கும் தருணத்தில் இத்தகைய விபத்து நிகழ்ந்திருப்பதும், அதுபற்றி கூடங்குளம் அதிகாரிகள் தகவல் அளித்து பேச முன்வந்திருப்பதும் எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதுவரை 700, 800, 900 மெகாவாட் உற்பத்தி என்று எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றி, வாய்மொழியாக மட்டுமே கூடங்குளம் அதிகாரிகள் பேசி வந்திருக்கிறார்கள். ஆனால், கூடங்குளம் அணு உலைகள் இயங்கவே இல்லை என்பதுதான் உண்மை.

கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி என்பதே வெறும் கதைதான். இதுவரை உற்பத்தியான மின்சாரம் எங்கே போனது, எந்த மின் இணைப்பில் சேர்க்கப்பட்டது என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த விவகாரத்தில் புதிய அரசுக்கு பயந்தே இப்படியான நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதோ என சந்தேகம் எழுகிறது. அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் இருந்து தப்பிக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறோம்.

2011-ல் முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்தியபோது, கூடங்குளம் அணு உலைகள் 1 மற்றும் 2 ஆகியவற்றின் முடியும் தருவாயில் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னார். இப்போது, மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகள் தொடக்க நிலையில்தான் உள்ளன. இப்போது முதல்வர் தனது நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டும். அதேபோல், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கூடங்குளம் விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை கூறவேண்டும்.

கூடங்குளம் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம்" என்றார் உதயகுமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x