Last Updated : 14 Oct, 2013 01:08 PM

 

Published : 14 Oct 2013 01:08 PM
Last Updated : 14 Oct 2013 01:08 PM

கன்னியாகுமரி: கூலிப்படையாக மாறும் விளையாட்டு வீரர்கள்

விவேகானந்தர் பாறை, திருவள்ளு வர் சிலை, திற்பரப்பு அருவி, சூரிய உதய, அஸ்தமனக் காட்சி என்று, இன்று கன்னியாகுமரியை கலர் புல்லாக பார்த்துப் பழகியவர்களுக்கு தெரியாது பழைய கால கன்னியாகுமரியை.

கள்ளச்சாராயம், கடத்தல், பலாத்காரம், கட்டப்பஞ்சாயத்து… இவையெல்லாம்தான் ஒரு காலத்தில் கன்னியாகுமரியின் அடையாளங்கள். இப்போது வசந்தத்தின் வாசலாக இருக்கும் கன்னியாகுமரியில், ஒருகட்டத்தில் பணிபுரிவதற்கே அஞ்சி நடுங்குவர் காவல் துறையினர். காரணம் கபடி!

சென்னையில் டாக்டர் சுப்பையா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர்கள். இதைப் படித்தவுடன், குமரி மாவட்ட மக்களின் நினைவை, அவர்களையும் அறியாமல் சுழற்றிச் செல்கிறார்கள் லிங்கமும், பிரபுவும்.

கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த லிங்கம், அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த பிரபு இருவரும் நல்ல நண்பர்கள். கபடி விளையாட்டில் இருவருக்கும் இருந்த ஆர்வம்தான் அவர்களது நட்புக்கு பாலமிட்டது. லிங்கம் உள்ளூர் கபடி போட்டி தொடங்கி, பக்கத்து மாவட்டங்களில் நடக்கும் போட்டிகளைக் கூட விட்டு வைப்பதில்லை.

ஏர்வாடியில் முதல் வழக்கு

கடந்த, 15.6.1987ல், ஏர்வாடியில் ஜெயசீலன் அணியோடு மோதச் சென்றார் லிங்கம். அப்போது 24 வயதே. ஜெயசீலன் அணியும், லிங்கம் அணியும் மோதிக் கொண்டிருந்த போதே, பாயிண்ட் தகராறு ஆரம்பமானது. அடுத்த சில நொடிகளில் மின்வெட்டு. மின்சாரம் திரும்பிய போது ஜெயசீலன் வெட்டப்பட்டு மூர்ச்சையாகி கிடந்தார்.

லிங்கத்துடன் வந்திருந்தவர்கள்... "அண்ணே ஓடிருவோம்... நாமதான் வெட்டுணோம்ன்னு அடிக்க ஆரம்பிச்சுடுவானுங்க..."ன்னு உசுப்பேத்தி விட, கண் இமைக்கும் நொடியில் மாயமானார் லிங்கம். அந்த வழக்கில் லிங்கம் மூன்றாவது குற்றவாளி. அதுதான், அவர் மீதான முதல் வழக்கு.

கடலுக்குள் கட்டுமரத்தில் தலைமறைவாக இருந்த லிங்கத்தைத் தேடி, அகஸ்தீஸ்வரத்தில் இருந்த பிரபு வீட்டில் போய் நின்றார்கள் காக்கிகள். இந்த விவகாரத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட லிங்கம், அதன்பின், கன்னியாகுமரி பகுதியில் நடக்கும் சிறு, சிறு குற்றங்களுக்கும் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டார். ஒருகட்டத்தில் ரவுடியாக மாறுவதே தனக்கான தற்காப்பு என அதையே கையில் எடுத்தார் லிங்கம். சின்ன முட்டம், குளச்சல் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை லிங்கத்தின் கைக்கு வந்தது. போலீஸ், அவரை ரவுடி பட்டியலிலும் சேர்த்திருந்தது.

காதல் வயப்பட்ட லிங்கம்!

"நம்மளை மாறி ரவுடிகள்ளாம் காதலிக்கக் கூடாதா?"ன்னு, ‘தொட்டி ஜெயா’ திரைப்படத்தில், ரவுடிகளிடம் சிம்பு உருகுவதைப் போல, லிங்கத்திற்குள்ளும் காதல் வந்தது. ரோகிணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இச்சூழலில் லிங்கத்துக்கு சாராய சப்ளை செய்த தங்கபாண்டியனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கள்ளச் சாராய சாம்ராஜ்யம், லிங்கத்தின் கரங்களுக்குள் வந்தது. படிப்படியாக வளர்ந்த லிங்கம், தமிழக, கேரள மாநிலங்களுக்கு சாராய சப்ளை செய்யும் பொழியூர் வகையறாவையே, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இந்த இடைவெளியில் ரோகிணியோடு திருமணமும் நடந்தது.

பிரிவை உருவாக்கிய கார் ஆடம்பரமாய் இருக்குமே என்று, ஒரு அம்பாசிடர் காரை வாங்கினார் லிங்கம். அதில், ஒரு கொலை குற்றவாளிகளுக்கு உதவப் போக, காவல் துறையிடம் கார் அகப்பட்டது. கார் விவகாரத்தில் லிங்கம், பிரபு நட்பில் முதல் விரிசல் விழுந்தது. காரை கோர்ட், கேஸ் முடித்து வெளியே கொண்டு வரும் வேலையை, பிரபுவின் அண்ணன் வக்கீல் தேவராஜ் செய்து முடித்தார். பிரபு, லிங்கத்திடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, காரை வாங்கி, அதை விட கூடுதல் விலைக்கு விற்றது லிங்கத்தை ஆத்திரப்படுத்தியது. நட்பு முறிந்து, லிங்கமும், பிரபுவும் தனிதனி டீம் ஆனார்கள்.

வலுத்தது மோதல்!

பிக்பாக்கெட் திருடன் பாரதியின் கூட்டாளிகள், போலீஸ்காரர் தங்கராஜை கொன்று விட, அந்த வழக்கில், லிங்கம், பிரபு இருவரது பெயரும் இடம்பெற்றது. பிரபுவின் கூட்டாளிகள் கைதாகினர். தென் தாமரைகுளம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்த பிரபு, ஸ்டேஷனையே துவம்சம் செய்து, கூட்டாளிகளை மீட்டு வந்தார். பிரபுவின் சாராயக்கடை அடுத்த சில நாட்களில் தீப்பிடித்து எரிய, லிங்கம்தான் காரணம் என்று சந்தேகித்த பிரபு டீம், பதிலுக்கு லிங்கத்தின் வீட்டை கொளுத்தியது. லிங்கம் டீம் பதிலுக்கு கன்னியாகுமரியில் இருந்த, பிரபுவின் ‘வித்யா ஒயின்ஸை’ நொறுக்கியது.

லிங்கத்தின் டீமில் இருந்த மனோகரனை, கன்னியாகுமரி ரயில்வே ஸ்டேஷனில் ஒரு கும்பல் வெட்டி சாய்த்தது. அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் பிரபுவின் அண்ணன் தேவராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

வழக்கு ஒன்றில் சிக்கி வெளியில் வந்த பிரபு லிங்கத்தின் மீது கங்கணம் கட்டிக் கொண்டு திரிய, அகஸ்தீஸ்வரத்தில் பிரபுவின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, பிரபு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார்.

பாளை சிறையில் வெடிகுண்டுகள்

லிங்கம் இந்த விவகாரத்தில் சரண்டைய, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து கொண்டே பிரபுவின் கூட்டாளி அய்யாவுக்கு, நாள் குறித்தான் லிங்கம். நாகர்கோவில் நீதிமன்றத்தில் நீதிபதியின் கண் எதிரேயே அய்யாவு வெட்டிக் கொல்லப்பட்டார். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் பிரபுவின் அண்ணன் கண்ணனை வெட்டி சாய்த்தது ஒரு கும்பல்.

பாளை சிறையில் அதிகாரிகளே சமூக விரோத செயல்களில் ஈடுபட சிறையிலேயே நாட்டு வெடிகுண்டை தயாரித்து வைத்திருந்தார் லிங்கம். இங்கு நடக்கும் அசம்பாவிதங்களை பார்த்து விட்டுத்தான் நாட்டு வெடிகுண்டு செய்து சிறையை தகர்க்க நினைத்ததாக, லிங்கம் சொல்ல வியர்த்துப் போய் விட்டது சிறைத்துறை அதிகாரிகளுக்கு.

அதன் பின் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்ட லிங்கம், ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் ஜாமீனில் வந்தார்.

அதன் பின், குமரி மாவட்டத்தில் நிழல் உலக தாதாவானான் லிங்கம். கள்ளச் சாராயம் களை கட்டியது. லிங்கத்தின் வீட்டில் கட்டப்பஞ்சாயத்து பேசி வழக்குகள் தீர்க்கப்பட்டது.

போலீஸ்காரர் தங்கராஜ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பாரதியை பிடித்து தர, போலீசே லிங்கத்தின் வீட்டில் வந்து நின்றது. அதைத் தொடர்ந்து சில நாள்களில் பாரதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டிருந்தார்.

பஸ் ஸ்டாண்டில் தலை...

படிப்படியாக வளர்ந்த லிங்கம் சாராயக் கடை ஏலம் எடுக்கும் தொழிலுக்கு ஜாகையை மாற்றினார்.

சுசீந்திரம் இன்ஸ்பெக்டராக இருந்த ஜவஹர், கன்னியாகுமரிக்கும் சேர்த்து சார்ஜ் எடுக்க, லிங்கத்தை பிடித்து சிறையில் போட்டார். நாகர்கோவில் கிளை சிறையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் லிங்கம். ஆனால் அந்த கட்டுப்பாட்டையெல்லாம் பொய்யாக்கி, 1996 ஏப்ரல் 9 நள்ளிரவில் சிறையில் புகுந்த ஒரு கும்பல், லிங்கத்தின் தலையை துண்டாக அறுத்து விட்டு, பிண்டத்தை மட்டும் விட்டுச் சென்றது. நீண்ட தேடலுக்கு பின் நாகர்கோவில் அம்மாசி மடம் தெருவில், கிடந்தது லிங்கத்தின் தலை.

ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதத்தாலே அழிவு என்பது லிங்கம், பிரபு விஷயத்தில் உறுதியானது.

ஏறுமுகத்தில் குமரி மாவட்டம்!

குமரி மாவட்டம் விளையாட்டுத் துறையில் எப்படி இருக்கிறது என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தீத்தோஸிடம் பேசினோம்.

‘கபடி கழகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சிறந்த கபடி வீரர்கள் இங்கே இருக்கிறார்கள். சென்ற ஆண்டு தமிழக அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கால்பந்து போட்டியில் குமரி மாவட்டம்தான் மாநில முதலிடம் பெற்றது.

தடகளத்திலும் மாநில அளவில் இங்கு தான் சிறப்பான வீரர்கள் இருக்கிறார்கள்’ என்றார்.

விளையாட்டு வீரர்கள் போலீஸ் யூனிபார்ம் போட்டு வலம் வருவதையும், போலீஸாரால் தேடப்படுபவராக வலம் வருவதையும் காலம் மட்டுமே தீர்மானிக்கிறது.

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் கைப்பந்து, கால்பந்து, கபடி என எப்போதுமே களை கட்டும். விளையாட்டுத் துறையில் ஜெயித்தால் அரசு வேலைக்கு போகலாம் என்ற எதிர்பார்ப்பில் விளையாடும் இளசுகள், வேலை கிடைக்காவிட்டால் கூலிப்படைக்கு சென்று விடும் நிலையும் இருக்கிறது.

கபடியில் இருந்து... கூலிப்படைக்கு!

தமிழகத்திலேயே விளையாட்டு வீரர்கள் அதிகமாக இருக்கும் பகுதி கன்னியாகுமரி மாவட்டம். இங்குள்ள கடற்கரை கிராமங்களில் கைப்பந்து, கால்பந்து, கபடி என எப்போதுமே களை கட்டும். விளையாட்டு துறையில் ஜெயித்தால் அரசு வேலைக்கு போகலாம் என்ற எதிர்பார்ப்பில் விளையாடும் இளசுகள், வேலை கிடைக்காவிட்டால் கூலிப்படைக்கு சென்று விடும் நிலையும் இருக்கிறது.

இந்த மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் அதிகமானோர் இருப்பதால் தான் மத்திய அரசின் சார்பில் சாய் சப் செண்டர் என்கிற விளையாட்டு பயிற்சி களம் இங்கே அமைக்கப்பட்டது.பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய விளையாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்த போது, கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், அந்த இடம் கடலோர ஒழுங்கான்மை சட்டத்தின் படி சரியான இடம் இல்லை என்றும், கடலுக்கு மிக அருகாமையில் இருப்பதாகவும் சொல்லி, பெல்லார்மின் எம்.பி.யாக இருந்த போது, தக்கலை பகுதிக்கு மாற்றினார். ஆனால், அந்த இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கி முட்டுக்கட்டை போட்டன. பா.ஜ.க, கம்யூனிஸ்ட் இடையே சில காலம் இது மோதலாகவும் தொடர்ந்த நிலையில், பலருக்கும் தெரியாத உண்மை, குமரி மாவட்டத்தில் இப்போது சாய் சப் சென்டர் இல்லை. இதற்காக நியமிக்கப்பட்டிருந்த பயிற்சியாளர்களும் மற்ற பகுதிகளில் உள்ள சாய்சப் சென்டர்களுக்கு மாற்றப்பட்டு விட்டனர். இதெல்லாம் சேர்த்து விளையாட்டு வீரனை அழுத்தி வைத்திருக்கிறது.

போலீஸ் லிங்கம்... வக்கீல் பிரபு…

லிங்கம் சிறந்த கபடி வீரன். காவல் துறைக்கு எழுத்து தேர்வில் தேர்வானவன். ஏர்வாடி ஜெயசீலன் கொலை வழக்கில் பெயர் இருந்ததால், அப்போது ஒழுக்க சான்று வழங்கப்படவில்லை. காலம் கபடி வீரனை ரவுடியாக்கி விட்டது.

பிரபு பி.ஏ., முடித்து விட்டு பெங்களூரில் சட்டப்படிப்பு படித்து வந்தான். சிறந்த கபடி வீரன். பிரபுவுக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும் என கனவு. அதைத் தகர்த்து எறிந்தது ரவுடியிஷத்தில் கிடைத்த மரியாதை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x