Published : 07 Mar 2017 09:27 PM
Last Updated : 07 Mar 2017 09:27 PM
இலங்கை கடற்படையினர் மீது மண்டபம் கடலோர காவல்படை நிலையத்தில் 302 மற்றும் 307 ஆகிய இரண்டு பரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஏடிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் தங்கச்சிமடத்தைச் சார்ந்த தாசன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் படகில் பிரிட்ஜோ, ஜெரோன், அந்தோனி, கிளிண்டஸ், சாம் பிரிட்ஜோ, ரிமோட்சன் ஆகிய 6 மீனவர்கள் இரவு 10 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகை நோக்கிச் சுட்டதில் பிரிட்ஜோ (21) என்ற மீனவர் குண்டடி பட்டு உயிரிழந்தார். படகின் டிரைவர் ஜெரோன் காயங்களுடன் ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து படகிலிருந்த கிளிண்டஸ் என்பவர் மண்டபம் கடலோர காவல்படை நிலையத்தில் இலங்கை கடற்படையினர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குறித்து செவ்வாய்கிழமை புகார் அளித்தார்.
இது குறித்து ஏடிஜிபி சைலேந்திர பாபுவிடம் கேட்டபோது, ''இலங்கை கடற்படையினர் மீது மண்டபம் கடலோர காவல் படை நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 (கொலை) மற்றும் 307 (கொலை முயற்சி ) ஆகியப் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
இலங்கை கடற்படையினர் மீது ராமேசுவரம் மற்றும் மண்டபம் காவல்நிலையங்களில் மீனவர்களை காயப்படுத்துதல், தாக்குதல், வலைகளை திருடுதல், உடமைகளை சேதப்படுத்துதல் என்றளவில் தான் காவல்துறையினர் வழக்குகளைப் பதிவு செய்து வந்தனர். கடந்த 25 ஆண்டுகள் கழித்து இலங்கை கடற்படையினர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT