Published : 26 May 2017 11:01 AM
Last Updated : 26 May 2017 11:01 AM
கடந்த தேர்தலில் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் பெரும்பாலோருக்கு ஜெயலலிதா இறந்தபோதிலிருந்து இப்போது வரை பெரும்பீதி தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.
'நாம் 5 ஆண்டுகள் முழுமையாக எம்.எல்.ஏ பதவியில் இருக்க முடியுமா? ஆட்சியைக் கலைத்து விடுவார்களோ? தேர்தல் திரும்ப வந்தால் நமக்கு சீட் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் இதே தொகுதியில் கிடைக்குமா?அதற்கு கோடிக்கணக்கில் செலவழிக்க முடியுமா? திரும்ப சட்டப் பேரவையில் உறுப்பினராக முடியுமா?' என்பதுதான் அது.
அந்த பெரும்பீதியே பன்னீர்செல்வத்தை முதல்வராக வைத்திருந்ததோடு, பழனிசாமியை முதல்வராக வைத்திருப்பதோடு, இன்னமும் பல்வேறு 'செல்வ', 'சாமி'களை முதல்வர்களாக வைக்கவும் தலைப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அரசியல் அறிவுள்ளவர்கள் யாவரும் அறிவர். ஆனால் எந்த இடத்திலும் தங்கு தடையின்றி திமுக தலைவர் கருணாநிதி 1957 முதல் இப்போது வரை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவையை அலங்கரிக்கிறார்.
அமைச்சராக இருந்த காலத்திலம், முதல்வராக இருந்த காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் கூட தன் வார்த்தை ஜாலங்களால் முதல்வராக இருந்தவர்களையும் கவர்ந்துள்ளார். அதற்கு அரசியலில், தனிப்பட்ட கட்சி மாச்சர்ய வெறுப்பரசியலில், காலங்கடந்த வரலாற்று இனவாத துன்பியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து நம்மால் பாராட்டப்பட வேண்டியவர் கருணாநிதி என்பதை மறுப்பதற்கில்லை.
சுருங்கச் சொன்னால் மகாபாரத சொக்காட்டான் விளையாட்டில் சூது, வாது ஏது இருந்தாலும், அந்த பாத்திரங்களில் எதுவாக இருந்தாலும் அதில் 60 ஆண்டுகாலம் வென்று நின்ற அரசியல் புள்ளியாகவே திகழ்கிறார். ஒரு வேளை ஒரே ஒரு தேர்தலில் தோற்றிருந்தால் கூட இந்த வைர விழா சாதனைக்கான மணிமகுடம் அவர் தலையை அலங்கரித்திருக்காது. அப்படி அவரின் அபார வெற்றிக்கு சோதனையே வரவில்லையா? என்றால் இருக்கிறது. அதில் முதலாவதாக வருவது 1980 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்.
ஏறத்தாழ அந்த தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் எச்.வி. ஹண்டேவிடம் கருணாநிதி தோற்றுவிட்ட நிலைதான். இரட்டை இலக்க எண்ணிக்கை ஓட்டு வித்தியாசத்தில் ஹண்டே வென்றதாக கூட அறிவிப்புகள் வந்துவிட்டது. வானொலி அந்த செய்தியை முழங்கியும் விட்டன. தொடர்ந்து ஓட்டு எண்ணும் இடத்தில் விபரீதம். மை கொட்டிக் கலாட்டா. சென்னை நகரத் தெருக்களில் குண்டர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட ரகளை. கடையடைப்பு என்றெல்லாம் செய்திகள் வந்தன.
அதையடுத்து, அண்ணாநகர் தொகுதியில் ஓட்டுக்கள் மறு எண்ணிக்கைக்கு விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து கருணாநிதி 699 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனாலும் எம்ஜிஆர் விடவில்லை. இந்த அளவுக்கு கருணாநிதிக்கு எதிர்ப்பு அலை வீச விட்ட ஹண்டேவுக்கு பிறகு சுகாதார அமைச்சர் பதவியை அளித்தார் எம்ஜிஆர்.
நம் மக்களோ, 'எம்ஜிஆருக்கு கருணாநிதியை தோல்வியில் விட மட்டுமல்ல; எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும் விட விருப்பமில்லை. அவர் அமராவிட்டால் பேரவை சிறக்காது. எனவேதான் தோற்றவரை கூட மறுஎண்ணிக்கையின் போது விட்டுக் கொடுக்க சொல்லி அவரை ஜெயிக்க விட்டுவிட்டார். அதை விட்டுக் கொடுத்ததற்காகவே ஹண்டேவை எம்எல்சியாக்கி அமைச்சர் பதவியும் கொடுத்துள்ளார்!' என்று வெள்ளந்தியாகப் பேசினர்.
எம்ஜிஆர் என்கிற மாய சக்தி மக்களை அப்படிப் பேச வைத்ததோ தெரியாது. இன்றும் அந்த காலத்து அதிமுக தொண்டர்கள், 'அன்றைக்கு அண்ணாநகர்ல எங்க தலைவர் விட்டுக் கொடுக்கலைன்னா கருணாநிதி ஜெயித்திருப்பாரா?' என்று பேசுவதை காணமுடியும். அந்த சம்பவத்தை அண்ணாநகரில் அன்று போட்டியிட்ட ஹண்டே இப்படி நினைவு கூர்ந்துள்ளார்:
'திடீரென என்னிடம் எம்ஜிஆர் நீங்க அண்ணாநகரில் போட்டியிட்டால் எப்படி இருக்கும்' எனக் கேட்டார். '50க்கு 50 வாய்ப்பு உண்டு' என்றேன். 'அதை 51 சதவீதமாக மாற்ற முடியுமா?' திரும்பக் கேட்டார்.
'நீங்கள் மனசு வைத்தால் நடக்கும்' என்று நான் கூற, அவர் போட்டியிட வைத்து விட்டார். அதில் கருணாநிதி வெற்றி பெற்றார். நான் சுலபமாக வென்றிருக்கலாம்தான். 'ஹண்டே ஜெயித்தாலும், தோற்றாலும் அவரை அமைச்சராக்குவேன்' என எம்.ஜி.ஆர் அந்தத் தேர்தலில் அறிவித்திருந்தார்.
இதையே பிரசாரத்தின் போது கருணாநிதி பயன்படுத்திக்கொண்டார். 'ஹண்டே அண்ணாநகர் மேல்சபை உறுப்பினராக உள்ளார். நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துட்டுப் போறேன். உங்க அண்ணாநகருக்கு இரண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள்' என்று மக்களிடம் பிரசாரம் செய்தார். அதை முன்னிட்டு மக்கள் ஓட்டு போட்டதன் வேகமே அவர் குறைந்த ஓட்டில் வெற்றி பெற்றார்!'
1980 தேர்தல் மட்டுமா? 1991 தேர்தலும் கருணாநிதிக்கு இதேபோன்று வந்த மற்றொரு மாபெரும் சோதனைக் காலம்தான்.
இந்த தேர்தலின்போதுதான் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அதிமுக , காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. திமுகவில் கருணாநிதியும் (துறைமுகம் தொகுதி) பரிதி இளம்வழுதியும் ( எழும்பூர்) மட்டுமே வென்றது திமுக வரலாற்றில் இதுதான் முதன்முறை. கரணம் தப்பினால் மரணம் என்று திமுகவினரே வர்ணித்த தேர்தலாக இது விளங்கியது. அதேபோல் ஜெயலலிதா முதன்முறையாக தமிழக முதல்வரானார்.
1984 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக- திமுக மோதினாலும் எம்.ஜி.ஆர் உடல்நிலை குன்றி அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார். அதிமுக இந்த முறை காங்கிரஸ் மற்றும் கா.கா.தே.கா, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, 198 இடங்களை வென்றது. எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்தபடியே ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்று மீண்டும் முதல்வரானார். எம்ஜிஆர் படுத்துக் கொண்டே ஜெயித்த அலை வீசிய தேர்தலில் கருணாநிதி போட்டியிடவில்லை.
இதற்கு முந்தைய தேர்தலில் வென்று சட்டப்பேரவை உறுப்பினராகியிருந்த கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். பின்பு மேலவை தேர்தலில் வென்று எம்.எல்.சியாகியிருந்தார். எனவே இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஒரு வேளை. எம்எல்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்த தேர்தலில் அவர் போட்டியிட்டிருந்தால் கண்டிப்பாக சிக்கலாகியிருக்கும் என்பதே அதிமுகவினர் அப்போது ஒலித்த வேத வாக்கு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT