Published : 12 Aug 2016 10:45 AM
Last Updated : 12 Aug 2016 10:45 AM
செம்மரம் வெட்டச் சென்றதாக ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் கோரி தமிழக அரசு திருப்பதி கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தின் 6-வது செசன்ஸ் நீதிமன்றத்தில் 32 தமிழர்களின் ஜாமீன் மனுவும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றம், "32 தமிழர்களும் ரேணிகுண்டாவில் கைது செய்யப்பட்டனர். அது திருப்பதி நீதி சரகத்துக்கு உட்பட்ட பகுதி. எனவே, முதலில் திருப்பதி 6-வது கூடுதல் நீதிமன்றத்தில்தான் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டும்" எனக் கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக அரசு புதிய மனு:
நீதிமன்ற உத்தரவையடுத்து திருப்பதி 6-வது கூடுதல் நீதிமன்றத்தில் தமிழக அரசு 32 தமிழர்களுக்கும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தது.
வழக்கு பின்னணி:
சென்னையில் இருந்து திருப்பதி வந்த 32 தமிழர்களை ஆந்திர போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். கடந்த வாரம் சென்னையில் இருந்து கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பதிக்கு வந்த 32 தமிழர்களை, பின்தொடர்ந்து சென்ற ரேணிகுண்டா போலீஸார் கரகம்பாடி சாலையில் உள்ள வெங்கடாபுரம் எனும் இடத்தில் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ரேணிகுண்டா டிஎஸ்பி நஞ்சுண்டப்பா, இன்ஸ்பெக்டர் பாலய்யா ஆகியோர் செய்தியாளர்கள் கூட்டத்தில் 32 பேரை ஆஜர்படுத்தி பேசியபோது, "செம்மரம் கடத்தும் கும்பலை சேர்ந்த இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வெள்ளிக்கிழமை திருப்பதிக்கு வந்தனர். இவர்களை கைது செய்துள்ளோம். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 29 பேர், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், சென்னையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 32 பேர் கைதாகியுள்ளனர். இவர்களிடம் இருந்து 22 கோடரிகள், கத்தி, கடப்பாரை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தனர்.
தொடர்கதையாகும் வழக்குகள்:
தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள நகரி, புத்தூர், சித்தூர், ரேணிகுண்டா ஆகிய பகுதிகளில் பஸ், ரயில்களில் வரும் தமிழர்களை அடிக்கடி விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லும் ஆந்திர போலீஸார் செம்மரம் கடத்தியதாக வழக்கு போடுவது வாடிக்கையாகி விட்டது.
சேஷாசலம் வனப்பகுதியில் 2 வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட பின்னர், இது தொடர்பாக 400-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை ஆந்திர போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் எந்த தவறும் செய்யாதபோதிலும், இவர்கள் சுமார் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். இறுதியில் இவர்கள் அனைவரும் நிரபராதிகள் எனக் கூறி திருப்பதி நீதிமன்றம் விடுதலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT