Published : 13 Jul 2016 01:34 PM
Last Updated : 13 Jul 2016 01:34 PM
சிக்குன் குனியா மற்றும் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் அருமருந்தாக அடையாளம் காணப்பட்ட நிலவேம்பு பாக்கெட்டில் அடைக்கப்பட்டு அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவுகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு காலத்தில் சித்தர்கள் வகுத்த உணவு பழக்கத்தின் மூலம் மக்களை தாக்கும் நோய்கள் எண்ணிக்கை குறைந்திருந்தது. அந்த காலங்களில் உணவே மருந்தாக இருந்தது. நாகரிக வளர்ச்சி மற்றும் ஆங்கில மருத்துவத்தின் வருகைக்குப் பின்னர், சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்தியா பாரம்பரிய எளிய மருந்துவ முறைகளை மக்கள் கைவிட்டனர்.
நவீன மருத்துவம்
நவீன மருத்துவமுறைகளும், எண்ணிடலங்கா மருந்துகளும் வந்த பின்னரும், மனிதர்களுக்கு வரும் சில நோய்களை குணப்படுத்த முடியாத நிலையும், மருந்துகளால் பக்க விளைவுகள் பாதிப்பு மற்றும் உணவு பழக்க வழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மனிதர்களை தாக்கும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக கொசுக்கள் மூலம் பரவும் சிக்குன் குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. சாதாரணமாக காய்ச்சல் என்று கூறப்பட்டபோதும், இதன் பாதிப்பால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முடங்கும் நிலை
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கை, கால்கள் வலி ஏற்பட்டு பல நாட்கள் முடங்கிப்போகும் நிலையும், நோய் குணமடைந்தாலும் அதன் பாதிப்புகள் பல ஆண்டுகள் தொடரும் அபாயம் உள்ளது. சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல்களை கட்டுப்படுத்த நவீன மருந்துகள் திணறின. இதனால், இந்த காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது.
அதேநேரம் காய்ச்சலை தடுக்கவும், தாக்குதலில் இருந்து மீளவும் பல்வேறு மருந்துகளை பரிந்துரை செய்தபோதும், சித்த மருத்தான நிலவேம்பு குடிநீர் பெரிதும் உதவியது. இதையடுத்து அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவ பிரிவுகளில் இம்மருந்துக்கு வரவேற்பு கிடைத்ததோடு இதுகுறித்து விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதுகுறித்து தமிழக அளவில் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுத்தப்பட்டது.
நிலவேம்பு குடிநீர்
இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் இன்றளவும் நிலவேம்பு குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப் பட்டு வருகிறது. தற்போது வரை சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தி குணப்படுத்தும் எளிய மருந்தாக, நிலவேம்பு குடிநீர் இருந்து வருகிறது.
தற்போது அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் நிலவேம்பு தூள் நவீன முறையில் பாக்கெட்டில் அடைத்து பொதுமக்கள் தேவைப்படும் வகையில் பயன்படுத்தும் வகையில் விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக அரசின் ‘டாம்ப்கால்’ நிறுவனம் மூலமாக 10 கிராம் அளவு கொண்ட பாக்கெட்டில் நிலவேம்பு தூள் வழங்கப்படுகிறது. நிலவேம்பு, வெட்டிவேர், விளாமிச்சைவேர், கோரைகிழங்கு, பேய்புடல், சந்தனம், மிளகு, சுக்கு, பற்படாகம் ஆகிய 9 மூலிகைகளைக் கொண்டு நிலவேம்பு தூள் தயார் செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் அருந்தலாம்
இந்த தூளை 10 கிராம் அளவுக்கு எடுத்து, 200 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து, 50 மிலி அளவுக்கு குறுக்கி வடிகட்டி பயன்படுத்த வேண்டும். டெங்கு, சிக்குன் குனியா, குளிர்க்காய்ச்சல் மற்றும் அனைத்து காய்ச்சல்களும் குணமாகும் என்ற தகவல் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குடிநீரை தினம் காலை, மாலை வேளைகளில் 30 மிலி முதல் 50 மிலி வரை அருந்தலாம். 3 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அருந்தலாம் என்றும் நீரிழிவு நோய், சிலவகை மூட்டு வலிகள் போன்றவைகளையும் இது கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT