Published : 12 Mar 2014 09:32 PM
Last Updated : 12 Mar 2014 09:32 PM
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கிராமத்தில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன என தொல்லியல் அறிஞர் வேதாசலம் தெரிவித்தார்.
இந்திய தேசிய கலை கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை, மதுரை டிராவல்ஸ் கிளப், தானம் அறக்கட்டளை சார்பில், நல்லமரம் கிராமத்தில் பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தொல்லியல் அறிஞர் வேதாசலம் பேசியது: நாயக்கர் காலம் வரை மிகப்பெரிய ஊராக நல்லமரம் திகழ்ந்துள்ளது. இங்குள்ள அய்யனார் கோயிலில் கி.பி. 946-966 வரையிலான காலத்தில் வாழ்ந்த சோழன் தலை கொண்ட வீரபாண்டிய மன்னனின் பெயரைக் குறிப்பிடும் கல்வெட்டு உள்ளது. மேலும், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழைய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் கோடாரிகள் உள்ளிட்ட சான்றுகள் இவ்வூரில் கிடைத்துள்ளன. வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் அருகே நூறாண்டுகளுக்கு முந்தைய கல்லால் ஆன எண்ணெய்ச் செக்குகள் கல்வெட்டுடன் காணப்படுவது இவ்வூரின் தனிச்சிறப்பாகும் என்றார்.
நடை பயண வழிகாட்டி பாரதி பேசியது: தமிழக கிராமங்களில் வரலாறு, பழக்க வழக்கங்கள் நடைமுறை சார்ந்து பல்வேறு மரபுகள் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன. தொல்லியல் அறிஞர்களின் உதவியுடன் மண்ணின் வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதன் மூலம் நமது தொன்மையை அழியாமல் பாதுகாக்க முடியும் என்றார்.
வரலாற்று அறிஞர் வெங்கட்ராமன் பேசியது: பாண்டிய மன்னன் நெடுஞ் செழியனின் தம்பி நன்மாறன் பெயரால் இவ்வூர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். நல்லமாறன் என்ற பெயரே காலப்போக்கில் நல்லமறம் என மருவி, பின்னர் நல்லமரமாக நிலைத்துவிட்டது. மதுரை மாவட்டத்தில் சங்ககால பாண்டிய மன்னனின் பெயரைத் தாங்கிய ஒரே சிற்றூராக நல்லமரம் திகழ்கிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் உள்ளூர்ப் பெரியவர்கள், இளைஞர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT