Published : 09 Jun 2016 09:08 AM
Last Updated : 09 Jun 2016 09:08 AM
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், கடந்த 3 நாட்களாக தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
அரசு ராஜாஜி மருத்துவ மனையில் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் உள்நோயாளிகளும், 9 ஆயிரம் வெளிநோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன. தினமும் அறுவைச் சிகிச்சை, நோயா ளிகள் பயன்பாட்டுக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மாநகராட்சி சார்பில், அரசு மருத்துவமனைக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. மருத்துவமனை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லாததால் பொதுவாகவே தண்ணீர் தட்டு ப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், மதுரை மாநக ராட்சியில் குடிநீர் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த 6-ம் தேதி முதல், பெரும்பாலான வார்டுகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. அந்த வார்டுகளுக்குட்பட்ட பகுதியில், அரசு ராஜாஜி மருத்துவமனையும் வருவதால், கடந்த 3 நாட்களாக தண்ணீர் வரவில்லை. அதனால், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கிடைக்கும் வெறும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே ஒட்டுமொத்த மருத்துவமனை பயன்பாட்டு விநியோகிக்கப்படுகிறது.
இந்த தண்ணீரைக் கொண்டு சமாளிக்க முடியாமல், கடந்த 3 நாட்களாகவே கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும், தட்டுப் பாடில்லாமல் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
அரசு ராஜாஜி மருத்துவமனை வார்டுகளில் தண்ணீர் இன்றி கழிப்பிட அறைகள், சுகாதாரம் இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் உள்நோயாளிகள், அவரது உறவினர்கள் மருத்துவ மனை கழிப்பிட, குளியல் அறைகளை பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
துர்நாற்றத்தால் மருத்துவமனையில் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
டீனிடம் முறையிட்ட உள்நோயாளிகள்
டீன் எம்.ஆர். வைரமுத்துராஜு தினமும் காலையில் வார்டுகளில் ஆய்வு மேற்கொள்வார். நேற்று வழக்கம்போல ஆய்வுக்குச் சென்றபோது, கழிப்பிட அறைகள், குளியல் அறைகளில் தண்ணீர் இல்லாததால் அதிருப்தியடைந்த நோயாளிகள், ஆய்வுக்கு வந்த டீனை சூழ்ந்து கொண்டு அவரிடம் முறையிட்டனர். டீன் அவர்களை சமாதானப்படுத்தி நாளைக்குள் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் கிடைத்துவிடும் என்றார்.
இதுகுறித்து டீன் வைரமுத்துராஜிடம் கேட்டபோது, மாநகராட்சியில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால்தான் இந்தப் பிரச்சினை. 3 புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. 20 லாரிகளில் தண்ணீரை வரவழைத்து ஓரளவு சமாளித்து வருகிறோம். மாநகராட்சி தண்ணீர் கிடைத்துவிட்டால் பிரச்சினை தீரும் என்றார் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT