Published : 06 Jan 2014 11:10 AM
Last Updated : 06 Jan 2014 11:10 AM
மத்திய அரசின் திருத்தப்பட்ட தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தில், விவசாயிகள் செலுத்தவேண்டிய பங்குத்தொகை 2 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. எனவே, அந்தத் தொகையில் 2 சதவீதத்துக்கு மேல் உள்ள கூடுதல் தொகையை மத்திய, மாநில அரசுகள் சரிசமமாக பங்கிட்டு செலுத்தலாம் என்று பிரமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன் மோகன் சிங்குக்கு திங்கள்கிழமை அவர் எழுதிய கடிதத்தில் கூறப் பட்டுள்ளதாவது:
தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தை, திடீரென மாற்றிவிட்டு, திருத்தப்பட்ட தேசிய பயிர் காப்பீடு திட்டத்தினை இந்நிதியாண்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்தி யிருக்கிறது.
விவசாயிகளுக்கு அதிர்ச்சி
விவசாயிகளை கலந்தாலோசிக் காமலேயே இந்த முடிவினை மத்திய அரசு எடுத்திருப்பது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. குறிப்பாக, தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் விவசாயிகளின் காப்பீட்டு பிரீமியத் தொகையில் 45 முதல் 50 சதவீதத்தை மாநில அரசு செலுத்துகிறது.
கடந்த 2000-01ல் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்த விவ சாயிகளின் எண்ணிக்கை 1.01 லட்சமாக இருந்தது. மாநில அரசின் முயற்சியால் 2012-13ம் ஆண்டில் இது 9.76 லட்சமாக அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், புதிய தேசிய பயிர் காப்பீடு திட்டத்தை நவம்பர் 1-ம் தேதி முதல் அலம்படுத்துவதற்கு மத்திய அரசு உத்தரவினை பிறப்பித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரபி பருவம் துவங்கி, ஒரு மாதத்துக்குப் பின் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கான பிரீமியம் தொகை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
மாநில அரசு தற்போது 50 சதவீத சந்தாவை அளிப்பதால், விவசாயிகள் வெறும் 1 முதல் 1.75 சதவீத தொகையை மட்டுமே செலுத்துகின்றனர். ஆனால், புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், விவசாய காப்பீடு பிரீமியம் 3.75 சதவீதத்துக்கு அதிகமாகவும், பருவமழை அடிப்படையிலான பயிர் காப்பீடு பிரீமியம் 4.8 சதவீதத்துக்கு அதிகமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடு செய்ய முன் வருவார்களா என்பது உறுதி இல்லை.
தமிழகத்தில் 2012-13ம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாகவும், வடகிழக்கு பருவ மழை குறைந்த தாலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், பிரீமியம் தொகை அதிகரித்தால் அவர்களுக்கு பெரும் பாரமாக ஆகிவிடும். எனவே, பிரீமியம் தொகையில் 2 சதவீதத்துக்கு மேல் உள்ள கூடுதல் தொகையை மத்திய, மாநில அரசுகள் சரிசமமாக பங்கிட்டு செலுத்தலாம் .
இதன்காரணமாக, பயிர் காப்பீடு திட்டம் தொடர்ந்து நீண்ட காலத்துக்கு செயல்படும் நிலை உருவாகும். எனவே, இந்த விஷயத்தில் உடனடியாக தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெய லலிதா எழுதிய கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT